Sunday, November 26, 2023

நல்ல மாற்றத்திற்கு.....!

 

நல்ல மாற்றத்திற்கு தயாராகிவிட்ட இந்திய மக்கள்....!


இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழவே விரும்புகிறார்கள். அதன்மூலம் நாடு வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பது 140 கோடி இந்திய மக்களின் ஆசை.  ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக,  நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. நல்ல நாட்களை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக, ஒன்றியத்தில் பதவி ஏற்றப் பிறகு, நல்ல நாட்களை, வளர்ச்சியான நாட்களை, அமைதியான நாட்களை, பெண்களுக்கு பாதுகாப்பான நாட்களை வழங்கியதா அல்லது கிடைத்ததா என வினா எழுப்பினால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரே சமயத்தில் இல்லை, இல்லவே இல்லை என்றே ஒருமித்த குரலில் பதில் கூறுவார்கள்.

குறிப்பிட்ட ஒற்றை கலாச்சாரத்தை அனைத்து தரப்பு மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகள் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என பாசிச அமைப்புகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றன. இதற்கு மக்களிடையே ஆதரவு இல்லாத போதும், அதை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல தரப்பட்ட மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் கொண்ட இந்திய நாட்டில், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கம் நிச்சயம் வெற்றி பெறாது என்பதை நன்கு தெரிந்துக் கொண்டும், இல்லை நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும். பின்பற்ற வேண்டும். இல்லையெனில் நீங்கள் இந்தியர்கள் இல்லை என ஒரு பாசிச கும்பல் தொடர்ந்து மிரட்டி வருகிறது.

முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்:


இந்தியாவில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற நினைப்பில், அவர்கள் மீதான வன்மம் பாசிச கும்பல்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஹலால் உணவு உண்ணக் கூடாது., ஹலால் இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என தற்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை நாடு இன்னும் மறக்கவில்லை. இதேபோன்று ஒரே சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம் என தொடர்ந்து முஸ்லிம்களை குறி வைத்தே ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் தரப்பட்டு வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பட்டு வருகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் முஸ்லிம் மாணவ மாணவிகள், மத ரீதியாக புண்படுத்தப்படுகிறார்கள். உளவியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவியை பார்த்து நீ மாட்டுக்கறி சாப்பிடும் பெண் தானே என பள்ளி ஆசிரியை கேவலமாக அவமானப்படுத்தியதை எப்படி மறக்க முடியும். இப்படி சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். தங்களுடைய முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள், அவமானங்கள் ஆகியவை இனி தொடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கிலும் ஓர் இறைக் கொள்கை என்ற உயர்ந்த நெறி தங்களுக்கு பிடித்த காரணத்தாலும், இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள். இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்தபிறகும், நாட்டின் மீது உண்மையான பற்றுகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், சீக்கியர் என பாகுபாடு காட்டாமல், அனைத்து தரப்பு மக்களையும் நேசித்து, அன்பு செலுத்தி இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல மக்களை பார்த்து, நீ பாகிஸ்தானுக்கு ஓடு என பாசிச அமைப்புகள் எப்படி கூறலாம்.

மக்கள் மனங்களில் மாற்றம்:

இத்தகையை நெருக்கடியான சூழ்நிலையில் தற்போது நாட்டு மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கி இருப்பதை நாம் உணர முடிகிறது. இரு சமூகங்கள் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பாசிச அமைப்புகள் திட்டம் திட்டி வரும் நிலையில், அதனால் நாட்டிற்கும் தங்களுக்கும் எந்த பலன் இல்லை என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக வட மாநில மக்களிடையே தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.



அண்மையில் நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் இந்த மாற்றத்தை நாம் காணலாம். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநில மக்கள், பாசிச அமைப்புகளை பார்த்து கேள்வி கேட்டதை சமூக வலைத்தளங்கள் மூலம் நன்கு அறிய முடிந்தது. இந்து-முஸ்லிம் பிரச்சினையை தவிர நாட்டில் வேறு பிரச்சினைகளே இல்லையா என மக்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாசிச அமைப்புகளின் வேட்பாளர்கள் திணறினர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதார முன்னேற்றம் என வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து நீங்கள் ஏன் வாக்குகளை கேட்பதில்லை என பாஜகவை பார்த்து இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் வினா எழுப்பினார்கள். தற்போதும் எழுப்பி வருகிறார்கள். இதன்மூலம் நாட்டு மக்கள் மனங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவே நாம் உறுதியாக நம்பலாம்.

மாற்றத்தை நோக்கி மக்கள்:


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜக, மிகப்பெரிய அளவுக்கு சாதனைகள் எதுவும் செய்யவில்லை. மாறாக, வெற்று முழக்கங்கள் மூலம் மட்டுமே நாட்டு மக்கள் அக்கட்சி ஏமாற்றி வருகிறது. அத்துடன் வரும் தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் சாதனை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு, வாக்குகளை பெற்று விடலாம் என அக்கட்சி நினைத்துக் கொண்டு இருக்கிறது. மேலும்,  சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பிரித்து அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என பாஜக உள்ளிட்ட பாசிச அமைப்புகள் திட்டம் போட்டு வருகின்றன.

ஆனால், பாசிச அமைப்புகளின் இந்த திட்டங்களை பெரும்பான்மையின மக்கள் தற்போது நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். மக்களை பிரித்து அதன்மூலம் லாபம் பெறும் இந்த முயற்சிக்கு வரும் நாட்களில் மக்களிடையே ஆதரவு சிறிதும் கிடைக்காது என்பதை நாம் உறுதியாக கூறலாம். அதற்கு முக்கிய காரணம், மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மை பண்பாட்டை விரும்புகிறார்கள். மதசார்பற்ற கொள்கையை விரும்புகிறார்கள். சகோரத்துவத்தை நேசிக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களும்  அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில், இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு அவர்களின் மனங்களில் மாற்றதை உருவாக்கி வருகிறது. எனவே தான் இந்திய மக்கள் தற்போது நல்ல மாற்றதை நோக்கி பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துவிட்டார்கள் என உறுதியாக கூற முடியும். இந்திய மக்களின் இந்த மாற்றம், நாட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நிச்சயமாக கூறலாம். மக்களை குழப்பும் திட்டங்கள் இனி எடுபடாது என்பதை தற்போதைய நாட்டு நடப்புகள் மூலம் அறிந்துகொண்டுள்ள பாசிச அமைப்புகள், மிகப்பெரிய திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பதை ஏற்படுத்தலாம். எனவே, நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, இனி வரும் காலங்களில் நாட்டில் எப்போதும் அமைதி நிலவ, தங்களது உண்மையான பங்களிப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் இந்திய நாடு அனைத்து துறைகளிலும்  உலக அரங்கில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேறிய நாடாக மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி மக்கள் பயணம் தொடங்கி விட்டதால், நிச்சயம் இந்தியாவிலும் நல்ல மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பலாம்.

- எஸ்..அப்துல் அஜீஸ்

No comments: