Sunday, November 5, 2023

தீர்வுதான் என்ன ?

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கொடுமைகள்.....!

தீர்வுதான் என்ன ? 

ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்., ஆசிரியர் கைது., ஓடும் பேருந்தில் பெண்களிடம் குறும்பு., வாலிபருக்கு தர்ம அடி., காரில் கடத்திச் சென்று இளம் பெண்ணுக்கு பாலியல் வன்முறை  செய்த.நான்கு பேர் கைது.,  இப்படி, பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகள் எதுவும் இல்லாமல் இன்றைய நாளிதழ்களை நாம் படிக்க முடியாது. தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. 

கோப முழக்கங்கள்:

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள், கோப முழக்கங்கள் எழுந்தன.  அந்த சம்பவத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்கள், சமூக அமைப்பு சேர்ந்தவர்கள் என பலர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, பெண்களுக்கு எதிராக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கூட, பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என குரல் எழுப்பினர்.

இப்படி, ஒட்டு மொத்த சமுதாயமும், பெண்களுக்கு ஆதரவாக திரண்டபோதும், பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நின்று விட்டதா என்றால், இல்லவே இல்லை என உறுதியாக கூறலாம். செய்தி ஊடகங்களில் இப்போதுகூட நாள்தோறும் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் உள்ளிட்ட பல தொல்லைகள், கொடுமைகள் குறித்த தகவல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி...?

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்கள் மட்டுமே போதுமா! கடுமையான சட்டங்கள் மட்டும் மக்களின் மனங்களை மாற்றி விடுமா! அதன்மூலம் மட்டும் குற்றவாளிகள் திருந்தி விடுவார்களா..! நாட்டில் தற்போது மது ஆறாக ஓடுகிறது. மதுவை அருந்திவிட்டு, பெண்களை கொடுமைப்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர். இது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.  அது உண்மைதான். ஆய்வும் அதை உண்மை என ஒப்புக் கொள்கிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாசப் படங்கள், கதைகள் இவையெல்லாம் முக்கிய காரணம் என்பது மற்றவர்களின் புகார். நம் நாட்டில் சுதந்திரம் அதிகம்...சட்டங்களை யாரும் மதிப்பதில்லை. பல நாடுகளில் சட்டங்களை மக்கள் மதிக்கிறார்கள். அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், இந்தியாவை போன்று அதன் எண்ணிக்கை குறைவு என்பது சிலரின் வாதம். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை அரபு நாடுகளில் உள்ளது போன்று கடுமையாக தண்டிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, ஒரு சமூக ஆர்வலர் வலியுறுத்தினார். இதனால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியுமா?

சமூகம் திருந்த வேண்டும்:

பெண்ணை போதை பொருளாக மட்டும் பார்க்கும் சமூகம் எப்படி திருந்தும் என்ற கேள்வி பலரிடம் இருந்து வருகிறது. பெண்ணை, தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக, பார்க்க பலருக்கு இன்னும் மனம் இல்லை. அதுதான் பிரச்சினை. மதங்கள், மார்க்கங்கள், பெண்களை கண்ணியப்படுத்துகின்றன. ஆனால், மத மற்றும் நீதி நூல்களை படிக்கும் பலர், அவற்றை ஏனோ, தங்களது வாழ்வில் கடைப்பிடிப்பதில்லை. படித்து, அத்தோடு விட்டுவிடுகின்றனர். இதனால், மதங்கள், மார்க்கங்களால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பது தெளிவாகிறது.

தங்களது செயல்கள் ஒவ்வொன்றிற்கும் தாம் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நினைப்பு நம் ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும். எப்படி, ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு ஆடிட் செய்யப்படுகிறதோ, அதுபோன்று, நம்முடைய வாழ்வும், ஆடிட் செய்யப்படும் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் செய்த நல்ல செயல்கள், பண்புகள், தீமைகள், ஆகியவற்றிற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் உண்மை மனிதர்களாக வாழ முடியும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்.

மனங்களில் மாற்றம்:


எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பெண்களை மதிக்க, நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். தன் தாய், தன் மகள், தன் சகோதரி, தன் மனைவி, தன் தோழி மீது கொடுமை நடந்தால், எப்படி ஒருவன் துடிதுடித்து போவானோ, அப்படி, வேறு பெண் ஒருவர்  மீது செய்யப்பட்டாலும் கதறி அழ வேண்டும்.  துடிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மனநிலை மனித மனங்களில் ஏற்பட்டால் ஒழிய பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரவே செய்யும். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் அனைவரும் பெண்களை கண்ணியமாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்கள் குறித்து இஸ்லாம்:

ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது.  இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பது வரலாற்று உண்மையாக இருந்து வருகிறது. 

பெண் குழந்தை பிறப்பது நற்செய்தி என்று இஸ்லாம் கூறுகிறது.  பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

’வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்' (திருக்குர்ஆன் 17:31) என்ற இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. பெண்சிசுக் கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.

’எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

’அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' எனும் நிலையை  ஆயிரத்து 450 ஆண்டுகளுக்கு முன்னரே தகர்த்தெறிந்து கல்வியில் பெண்களுக்கான முன்னுரிமையைக் கொடுத்தது இஸ்லாம். பெண்களுக்குரிய ஆன்மிக, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளோடு இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும் மானத்திற்கும் பாதுகாப்பளிப்பது ஒரு நாகரிக சமூகத்தின் மிகப் பெரிய பொறுப்பு என்பதை ஆடை விஷயத்தில் இஸ்லாம் ஓர் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது.

பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது. இஸ்லாம் இல்லத்தை அமைதி அளிக்கும் இடமாகக் கூறுகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்கிறது இஸ்லாம். சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: