Wednesday, November 15, 2023

சமுதாயம் முன்வர வேண்டும்...!

முஸ்லிம்  பெண்களின் கல்விக்காக சிறந்த பள்ளிகளை உருவாக்க சமுதாயம் முன்வர வேண்டும்...!

இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து இருப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக, கல்வி பெறும் உரிமை ஆண், பெண் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது. அது மார்க்கக் கல்வியாக இருந்தாலும் சரி, உலகக் கல்வியாக இருந்தாலும் சரி, கல்வி பெறுவது முஸ்லிம்கள் முக்கிய கடமையாகும். ஆனால், முஸ்லிம் குடும்பங்களில், பெண் கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்தும் குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதில் ஓரளவுக்கு உண்மை என்றே கூறலாம். 

குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளை கல்வி கற்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தால், அதனால், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்ற பயம் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும், உயர்கல்வி அளித்துவிட்டால், தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சமும் பெற்றோர்களுக்கு இருந்து வருகிறது. எனவே, குறைந்த அளவுக்கு மட்டுமே, பெண் குழந்தைகளுக்கு முஸ்லிம் குடும்பங்களில் கல்வி கற்க வைக்க ஆர்வம் இருந்து வருகிறது. 

கல்வி பெறும் உரிமை:


ஆண் பெண் இருபாலரும் கல்வி கற்பதை இஸ்லாம் கடமையாக்குகிறது. எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்துகிறது.  குழந்தைகளுக்கு மார்க்கக்  கல்வி மட்டுமல்லாமல், உலக விஷயங்களையும் கற்றுத்தருமாறும் இஸ்லாம் பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறது. ஒரு பெண் தனது பெற்றோரின் வீட்டில் கல்வி கற்க முடியாவிட்டால், அவளது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்வதோடு அவளது கல்விக்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறு அவளது கணவனை இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக் கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும். நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

கல்விக் குறித்து இஸ்லாம்:

ஏக இறைவன் தனது திருமுறையில் கூறுகிறான்: "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே" (அல்குர்ஆன் 39:9)

"உங்கள் இறைவனின் பெயரால் ஓதுவீராக! மனிதனை  ஒட்டிய வடிவில் இருந்து படைத்தான்.  ஓதுவீராக: உங்கள் இறைவன் மிகவும் தாராளமானவன், கற்பித்தவன். அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்குத் தெரியாததைக் கற்றுக் கொடுத்தான்” (96:1-5)

திருக்குர்ஆனில் கல்வி தொடர்பாக, பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த மேற்கோளும் குறிப்பிடப்படவில்லை. மற்றும் குறிப்பிட்ட நபரை குறித்து அறிவுரை வழங்கப்படவில்லை.  

நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின் பிரபலமான பொன்மொழி: "மூன்று பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்து, அவர்களுக்குப் படிக்கவைத்து, நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவருக்கு  ஜன்னத் (சொர்க்கம்) உள்ளது. இரண்டு மகள்கள் அல்லது ஒரு மகள் பற்றி என்ன என்று கேட்டபோது, ​​​​இரண்டு அல்லது ஒரு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் கூட ஜன்னத்தில் (சொர்க்கத்தில்) இடம் பெறுவார்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 

இதேபோன்று, அறிவைத் தேடும் ஒருவரின் வழியை அல்லாஹ் எவ்வாறு எளிதாக்குவான் என்பதை நபிகள் நாயகம்  (ஸல் ) அவர்கள் கூறினார்கள்:  “யாராவது அறிவைத் தேடி சாலையில் பயணித்தால், அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் பாதைகளில் ஒன்றில் பயணிக்கச் செய்வான். " (அல்-ஜாமி அல்-ஸஹீஹ், 4, 2074, 2699) 

மேலும்,"அறிவைத் தேடுவது அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும்" என்றும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள். 

இதன்மூலம் கல்வி பெறுவது ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயமாகும் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம். 

மௌலானா சையத் அர்ஷத் மதனி கருத்து:

இந்நிலையில், முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்விக்காக அதிக அக்கறை செலுத்த வேண்டும் என  ஜமியத்-உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா சையத் அர்ஷத் மதனி அறிவுறுத்தியுள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முஸ்லிம்கள் தங்களது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பயப்படுவதாக குறிப்பிட்ட அவர், முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்க சில பாசிச அமைப்புகள் முயற்சி செய்து வருவதாகவும், குறிப்பாக உயர்கல்வி பெறும் முஸ்லிம் பெண்கள், பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தார். 

எனவே, எட்டாம் வகுப்புக்குப் பிறகு முஸ்லிம் பெண்கள்,  தனிப் பள்ளிகளில் அதாவது மகளிர் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மௌலானா அறிவுறுத்தினார். மேலும் பெண்களுக்கென தனிப் பள்ளிகளைத் திறக்குமாறு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமுதாயம் சிந்திக்க வேண்டும்:

மௌலானா சையத் அர்ஷத் மதனி அவர்கள் தெரிவித்துள்ள கருத்து குறித்து சமுதாய செல்வந்தர்கள் , சமுதாய சமூக ஆர்வலர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் பெண் கல்விக்காகவே தனி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் பாதுகாப்புடன், தரமான கல்வி முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்து வருகிறது. அத்துடன், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்ப பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்று வர முடிகிறது. இதனால், தென்மாநிலங்களில் உள்ள முஸ்லிம் பெண்கள், நல்ல கல்வி பெற்று அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு நல்ல நிலை, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட வேண்டும். அங்குள்ள முஸ்லிம் பெண் குழந்தைகள், எந்தவித அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்புடன் கல்வி பெற வேண்டும். அதற்கு, வட மாநிலங்களில் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள், சமுதாய சமூக ஆர்வலர்கள்  தங்களது கவனத்தை திருப்ப வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தனிப் பள்ளிகள், கல்லூரிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம், முஸ்லிம் பெண்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: