300 பேருக்கு
இந்திய குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியது தேர்தல் நடத்தை விதி மீறல்
உச்சநீதிமன்றம்,
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இ.யூ.முஸ்லிம் லீக் முடிவு
தேசிய
பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி அறிவிப்பு
கோழிக்கோடு,மே17- குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் (சிஏஏ) விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை முதல்முறையாக ஒன்றிய அரசு கடந்த புதன்கிழமை வழங்கி இருப்பது, தேர்தல் நடத்தை விதிமீறல் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்:
கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா 14 பேருக்கு நேரடியாக சான்றிதழ்களை வழங்கியதை சுட்டிக் காட்டினார். இதைத் தொடர்ந்து, 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட குஞ்ஞாலிக் குட்டி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
எனவே, இதுபோன்ற தேர்தல் நடத்தை விதிமீறலை கவனத்தில் எடுத்துக் கொண்டு, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பா.ஜ.க.வின் கனவு பலிக்காது:
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமை சான்றிதழ்களை 300 பேருக்கு வழங்கி அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறலாம் என பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் பகல் கனவு கண்டு வருவதாக குறிப்பிட்ட குஞ்ஞாலிக் குட்டி, இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தை நாட முடிவு:
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நடைபெற்ற விசாரணையில், சட்டத்தை அவசரமாக அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று, ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்து இருந்ததை குஞ்ஞாலிக் குட்டி சுட்டிக் காட்டினார். இதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக தற்போது ஒன்றிய அரசு செயல்பட்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்த குஞ்ஞாலிக் குட்டி, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 300 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி இருப்பது ஒரு தேர்தல் நாடகம் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, அவர்களின் கருத்துகளை கேட்டு, உச்சநீதிமன்றத்தில் புதிய
மனு தாக்கல் செய்வது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு எடுக்கும் என்றும்
தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி தெரிவித்தார்.
-
சிறப்புச் செய்தியாளர்:
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment