Friday, May 24, 2024

அரவணைப்பு....!

ஒரு சகோதரனின் அரவணைப்பு....!

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வரும் 25ஆம் தேதி 6வது கட்டமாக 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளில், 7 தொகுதிகள் தலைநகர் டெல்லியில் உள்ள தொகுதிகளாகும். இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து, கடந்த 23ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த பிரச்சாரத்தில் பல சுவையான சம்பவங்கள் நடைபெற்றன. 

குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த பாணி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், இந்து-முஸ்லிம், பாகிஸ்தான் என்ற ரீதியாக கருத்துகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வந்தார்கள். ஆனால், இதற்கு மாறாக ராகுல் காந்தியின் பிரச்சாரம் இருந்தது. மக்கள் மத்தியில் மிக எளிமையாக பழகிய அவர், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். 

முஸ்லிம் சகோதரியிடம் காட்டிய அன்பு:

தலைநகர் டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை  கேட்டறிந்தார். குறிப்பாக, பெண்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா? அவர்களின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டதா? விலைவாசி உயர்வை எப்படி பெண்கள் எதிர்கொள்கிறார்கள்? போன்ற கேள்விகளை எழுப்பி, பெண்களின் கருத்துகளை அவர்கள் மூலமாக ராகுல் காந்தி அறிய முயற்சி செய்தார். 

அதன்படி, டெல்லியில் உள்ள ஒரு தொகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்ப்டடது. இதில் அனைத்துத் தரப்பைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு மாதமும் ஏழை பெண்களின் வங்கிக் கணக்கில் எட்டாயிரத்து 500 ரூபாய் (8,500) செலுத்தப்படும் என உறுதியாக கூறினார். இதன்மூலம், பெண்கள் தற்போது எதிர்கொள்ளும் பொருளதார நெருக்கடிகளுக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துரையாடியபோது, ஒரு முஸ்லிம் சகோதரி, தன்னுடைய தாயார் மறைந்த இந்திரா காந்தியுடன் இணைந்து சிறைக்கு சென்றதாக நினைவுப்படுத்தி கூறியதுடன், தற்போது தன்னுடைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி கண்ணீர் சிந்தினார். தன்னுடைய கணவர் மறைந்துவிட்டதால், நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தாம் மிகவும் துன்பங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக அவர் கூறியபோது, அங்கிருந்த பெண்கள் மட்டுமல்ல, ராகுல் காந்தியுடம் மிகவும் வேதனை அடைந்து, அழுதுக் கொண்டிருந்த அந்த முஸ்லிம் பெண்ணை எழுப்பி, ஆறுதல் கூறியதுடன், ஒரு சகோதரனைப் போன்று அவரை கட்டித் தழுவி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வார்த்தைகளை அந்த பெண்ணுக்கு கூறினார். அப்போது பேசிய அந்த பெண், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்தை 400 ரூபாயை தாண்டிவிட்டால், தன்னால் குடும்பத்தின் பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார். 

முஸ்லிம் சகோதரரியின் கருத்துகளை அமைதியாக கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் நிர்வாகிகளை உடனடியாக அழைத்து, இந்த முஸ்லிம் பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும், இவர் இனி, நமது சகோதரி என்றும் கூறியதுடன், அந்த பெண்ணிடம் இருந்து செல்பேசி எண், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை வாங்க உத்தரவிட்டார். 

ராகுல் காந்தியின் இந்த செயல் அந்த இஸ்லாமிய சகோதரிக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற பெண்கள் அனைவரும் ராகுல் காந்தி, தங்களிடம் வெளிப்படுத்திய அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கண்டு, பெருமை அடைந்தார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இந்து-முஸ்லிம் என்ற பாணியில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் நிலையில், ராகுல் காந்தி, அன்பு வழியில் பிரச்சாரம் செய்வது வருவது உண்மையிலேயே டெல்லி, அரியானா மாநில பெண்களை மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்துள்ளது. 

ராகுல் காந்தியின் இந்த அழகிய செயலைப் பாராட்டி, சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், மத ரீதியாக மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் இந்திய மக்களாக கருதி, ராகுல் காந்தி, மிகவும் அழகான, அன்பான முறையில் பிரச்சாரம் செய்து வருவதை பார்க்கும்போது, வெறுப்பு சந்தையில் அன்பின் கடை என்ற அவரது முழக்கம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ந்து இருக்கிறது என்றே கூறலாம். 

எளிமையான முறையில் பிரச்சாரம்:


டெல்லியில் பிரச்சாரம் செய்தபோது, ராகுல் காந்தி, பல புதிய உத்திகளை கையாண்டு, மக்களின் இதயங்களை தொட்டு வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாருடன் இணைந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், 'கன்னையா குமார் நீங்கள் வெற்றி பெற்று வந்தால், எப்படிப்பட்ட பணிகளை செய்வீர்கள்? உங்களிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன?' என கேள்வி எழுப்பி, அதற்கு கன்னையா குமார் அளித்த விளக்கங்களை டெல்லி வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். 

இதேபோன்று, மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, சக பயணிகளிடம் மிகவும் எளிமையாக பழகி, அவர்கள் அனைவரும் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க தங்களது வாக்குரிமைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஆந்திரா பவனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு எந்தவித பந்தாவும் காட்டாமல், மற்ற வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒரு எளிய மனிதர் எப்படி, உணவு விடுதிக்குச் சென்று உணவு சாப்பிடுவாரோ, அதுபோன்ற, சாப்பிட்டதைக் கண்டு, ஆந்திரா பவன் ஊழியர்கள் மட்டுமல்லாமல், அங்கு வந்திருந்த டெல்லிவாசிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

பிரதமர் மோடி தம்மை கடவுளின் அவதாரம் என கூறியதைக் கூட, ராகுல் காந்தி, கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்தார். ஊடகத் தோழர்கள் எப்படி தங்களது கடமைகளை நிறைவேற்ற தயங்குகிறார்கள் என்பதையும் ராகுல் காந்தி, மிகவும் கண்ணியமாக எடுத்துக் கூறி, மோடி ஆட்சியில் ஊடகங்கள் எப்படி, சுதந்திரத்தை இழந்துவிட்டன என்பதை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறார். இப்படி ராகுல் காந்தி, செய்துவரும் எளிமையான, அதேநேரத்தில் மிகவும் வீரியமான பிரச்சசாரம் வடமாநில மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். 

நல்லதே நடக்கும்:

543 தொகுதிகளைக் கொண்ட மக்களவையில்  ஐந்து கட்டங்களாக 429 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிட்டது. வரும் 25ஆம் தேதி 57 தொகுதிகளிலும், பின்னர் ஜுன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளிலும் என மொத்தம் 114 தொகுதிகளில் ஆறு மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் ஐந்து கட்டத் தேர்தல் முடிந்தபிறகு, கிடைத்த தரவுகள், மக்களின் கருத்துகளை வைத்து பார்த்தால், இந்தியா கூட்டணி, நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என்பது உறுதியாக தெரியவருகிறது. 

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், பிரச்சாரத்திற்கு வெறுப்பின் வழியை தேர்ந்தெடுத்து, அதன்படி, தேர்தலைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அன்பின் வழியில், மக்களை நல்வழிப்படுத்தும் வகையில், நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த இரண்டு வகை பிரச்சாரத்தில், மக்களை அன்பின் வழியே மிகவும் கவர்ந்துள்ளது. எனவே, ஜுன் நான்காம் தேதி நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் நலனின் உண்மையாக அக்கறைக் கொண்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: