இஸ்லாமிய பெண்கள் ஆர்வத்துடன் படிக்கும் மணிச்சுடர் நாளிதழ்.....!
நாற்பதாவது ஆண்டில் வீர நடைப் பயணம் மேற்கொண்டுள்ள மணிச்சுடர் நாளிதழ், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் மணிச்சுடர் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மஹல்லாவிலும் மணிச்சுடர் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன், மணிச்சுடர் ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பேராசிரியரின் இந்த முயற்சிகளுக்கு ஏக இறைவன் தனது அருள் மூலம் தற்போது நல்ல பலனை அளித்துக் கொண்டிருக்கிறான்.
ஆம், ஒவ்வொரு முஸ்லிம்களின் கைகளிலும் தற்போது மணிச்சுடர் தவழுந்துக் கொண்டிருக்கிறது. மணிச்சுடரில் வரும் அனைத்து செய்திகளும், தரமானவை மட்டுமல்ல, சமூகத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால், இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் மணிச்சுடரை படிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதன்மூலம் மணிச்சுடரின் செய்திகள், கட்டுரைகள், சிறப்பு தகவல்கள், இஸ்லாமிய ஆய்வு கட்டுரைகள், வேலைவாய்ப்பு செய்திகள், கல்வி தொடர்பான கட்டுரைகள் என அனைத்துப் பகுதிகளும் வாசகர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன. இப்படி, மணிச்சுடர் பரவலாக வாசர்களை கவர்ந்துவரும் நிலையில், அதனை மேலும் பரவலாகக் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்ற பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், மணிச்சுடர் ஊழியர்கள் மிகச் சிறப்பாக தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.
ஹஜ் இல்லத்தில் மணிச்சுடர்:
ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக ஹாஜிகள், சென்னையில் உள்ள ஹஜ் இல்லத்தில் வந்து தங்கி, சிறப்பு துஆவுடன் தங்களுடைய பயணத்தை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும், சென்னை ஹஜ் இல்லத்தில் ஹாஜிகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. வழிக்காட்டு கையேடுகள் அளிக்கப்பட்டு, ஹஜ் பயணம் எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்பன போன்ற, அம்சங்களும் எடுத்துக் கூறப்படுகின்றன. இப்படி, ஹஜ் இல்லத்தில் வந்து தங்கி செல்லும் ஹாஜிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், தோழர்கள் ஆகிய அனைவருக்கும் மணிச்சுடர் நாளிதழ் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், வழக்கமாக செய்யப்பட்டு வரும் நடைமுறையாகும். மணிச்சுடர் நிர்வாகம் கடந்த பல ஆண்டு காலமாக இந்த பழக்கத்தை வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு சென்னை ஹஜ் இல்லத்தில் மணிச்சுடர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்படி வினியோகம் செய்யப்படும் மணிச்சுடர் நாளிதழை வாங்கும் ஹாஜிகள் மற்றும் பிற தோழர்கள், மணிச்சுடரில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பக்கத்தையும் ஆர்வத்துடன் படித்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் இது மணிச்சுடர் ஊழியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது.
மணிச்சுடரை ஆர்வத்துடன் படிக்கும் பெண்கள்:
இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்தாலும், தற்போது ஆண், பெண் ஆகிய இரண்டு தரப்பினரிடர் மத்தியிலும் நல்ல கல்வி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வருகிறது. எனவே அவர்கள் நல்ல கல்வியை பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 'தீன், துனியா' (மார்க்கம் மற்றும் உலகம்) கல்வி என்ற இரண்டிலும் இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் தற்போது ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் . இதன் காரணமாக, இஸ்லாமிய பெண்கள் மத்தியில் ஊடகங்கள் மீது கவனம் செலுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. நாளிதழ்களை படிப்பதும், நல்ல கட்டுரைகளை வாசிப்பதும், நல்ல நூல்களை வாங்கி படிப்பதும் என இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மணிச்சுடர் நாளிதழை படிக்கும் ஆர்வம் இஸ்லாமிய இளம் தலைமுறையினர் மத்தியில் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெண்கள், மணிச்சுடர் நாளிதழை ஆர்வத்துடன் படிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. சென்னை ஹஜ் இல்லத்தில் மணிச்சுடர் வினியோகம் செய்தபோது, பல பெண்கள், அதனை ஆர்வத்துடன் வாங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் என்ன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது? என ஆர்வத்துடன் கேட்டு, படித்து, 'பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எந்தவித அச்சமும், தயக்கமும் இல்லாமல் படிக்கும் நாளிதழாக மணிச்சுடர் இருக்கிறது' என பாராட்டு தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (31.05.2024) அன்று பிரசுரமான மணிச்சுடர் நாளிதழில், 'இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 235ஆம் நாள்' 'வெறுப்பு பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை குறைத்துவிட்டார் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கண்டனம்' 'மின்தடையில்லா மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு' 'கஃபாவின் வரலாறு' 'ரபாவும் (அ)ரபாவும்' '+2 முடித்த மாணவர்களுக்கான சைபர் செக்யூரிட்டி படிப்புகள்' 'செங்கம் ஜே.ஏ.ஜப்பார் சாகிப்' 'இந்தியாவின் இளம் தலைவர்கள்' போன்ற பல செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், மற்றும் சமுதாயச் செய்திகள் என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
இப்படி மணிச்சுடரில் அலங்கரிப்பட்ட ஒவ்வொரு செய்திகளையும் இஸ்லாமிய பெண்கள் ஆர்வத்துடன் படித்து, மிகவும் சிறப்பாக இருக்கிறது என பாராட்டு தெரிவித்தபோது, மணிச்சுடர் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என கூறலாம். இஸ்லாமிய பெண்களின் கவனம் நாளிதழ்களின் பக்கம் திரும்பி இருப்பதுடன், நல்ல நாளிதழை படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மத்தியில் இருப்பதையும் நாம் காண முடிந்தது. மணிச்சுடர் நாளிதழ் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெறும் வகையில் இருக்கிறது என சென்னை ஹஜ் இல்லத்தில் மணிச்சுடரை படித்து, பெண்கள் பாராட்டு தெரிவித்து தங்களுடைய வாழ்த்துகளையும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
வெற்றியை நோக்கிப் பயணம்:
மணிச்சுடர் நாளிதழ் தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் இல்லத்திற்கும் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறது. உண்மையான செய்திகள், சமூகத்தைச் சீர்படுத்தும் நோக்கத்துடன் அழகிய கட்டுரைகள் என பல சிறப்பான அம்சங்களை தாங்கி வருவதால், மணிச்சுடரை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் விரும்பி படிக்க ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக மணிச்சுடர் தற்போது வெற்றியை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகிறது. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் அழகிய கனவு, இலட்சியம், இலக்கு என அனைத்தும் விரைவில் ஏக இறைவனின் அருளால் நிச்சயம் நிறைவேறும். மணிச்சுடர் இன்னும் சிறப்பான முறையில் பயணத்தை மேற்கொண்டு, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும், உலகிற்கும், தனது செய்திகள் மூலம் நல்ல ஊடகப் பங்களிப்பை அளிக்கும் என்பது உறுதி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment