Sunday, May 19, 2024

உறவுகள்.....!

அழகிய உறவுகள் எப்படி சீர்குலைகின்றன? 

 - ஓர் அலசல் -

மனித வாழ்க்கையில் உறவுகள் மிகவும் முக்கியமானவை. அற்புதமானவை.  அவை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் சரி, அல்லது தூரத்து உறவுகளாக இருந்தாலும் சரி,  நல்ல உறவுகள் மூலம் மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கிறது. மனம் எப்போதும் நிம்மதி அடைகிறது.

எனவேதான், உறவுகளை நல்ல முறையில் பேண வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து உறவுகளையும் நல்ல முறையில் பேணி, பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என இஸ்லாம் மிக அழகாக சொல்லித் தருகிறது. ஆனால், தற்போதைய நவீன காலத்தில், உறவுகள் சரியாக, முறையாக பேணப்படுவதில்லை.

முஸ்லிம்கள் மத்தியில் உறவுகள் மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன. இப்படிப்பட்ட போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சரி, உறவுகள் ஏன் சிதைந்து போகின்றன? அதற்கு என்ன காரணம்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கம் பெற்றால், உறவுகளை நாம் நல்ல முறையில் பேண முடியும்.

சில அனுபவங்கள்:

உங்களுடைய வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கு கிடைத்து இருக்கலாம். அதுவே உறவுகள் சீர்குலைவு அடைய காரணமாக இருந்திருக்கலாம்.

உதாரணமாக, நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்கிறீர்கள். நண்பரின் வீட்டில் புதிதாக தொலைக்காட்சி பெட்டி இருப்பதை பார்க்கிறீர்கள். நீங்கள் தொலைக்காட்சி பெட்டியை பார்ப்பதை உங்கள் நண்பரும் கவனிக்கிறார். உடனே, நண்பர் இப்படி சொல்கிறார்.

"இந்த தொலைக்காட்சி பெட்டி என்னுடைய பெட்டி இல்லை. உறவினர் ஒருவர் கொண்டு வந்து வைத்து, ஊருக்கு சென்று இருக்கிறார். அவர் வந்ததும், பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விடுவார்"

இப்படி, சொல்லி நணபர் புன்முறுவல் செய்கிறார். நீங்களும் புன்னகை செய்து அமர்கிறீர்கள்.

இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், புதிதாக தொலைக்காட்சி பெட்டி வாங்கியதை சொன்னால் எங்கே நீங்கள் பொறாமை கொள்வீர்களோ என உங்கள் நண்பர் வீண் கற்பனை செய்துக் கொண்டு, உங்களிடம் பொய் சொல்கிறார். இதுபோன்ற அனுபவங்கள் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். ஒருவர் அவராகவே கற்பனை செய்துகொள்ளும் ஒரு செயல் மூலம் உறவுகள் சிதைந்து விடும் என்பதை மறந்து விடுகிறார்.

இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகு நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை பலர் தவிர்த்து கொள்கிறார்கள். அல்லது நிறுத்தியே விடுகிறார்கள். உறவுகள் எப்படி சிதைந்து சீர்குலைகின்றன என்பதற்கு மேலே நாம் குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான்.

பணத்தால் குணம் மாறும் மனிதர்கள்:

"பணம் பத்தும் செய்யும்" என பொதுவாக சொல்லுவார்கள். பணம் பத்து மட்டுமன்றி உறவுகளையும் சிதைத்து விடும். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். ஏன் நம்மில் பலருக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்து இருக்கும்.

ஒரு சிறிய சம்பவம் மூலம் உங்களுக்கு இதை எடுத்துக் கூறலாம் என நினைக்கிறேன்.

கல்லூரி நாட்களில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் பழகும் நண்பர்களில் சிலர், வசதி, வாய்ப்பு, காசு, பணம், துட்டு, பதவி வந்தபிறகு பழகும் விதமே வேறு மாதிரியாக இருக்கும்.

கல்லூரி நாட்களில் புத்தகம் வாங்கவே காசில்லாமல் பரிதாபமான நிலையில் இருக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பர், தனக்கு பதவி, பணம் வந்தபிறகு நண்பர்களோடு பழகும் குணத்தில் நிறைய மாற்றம் இருக்கும். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், வசதி குறைந்த நெருங்கிய உறவினர்களிடம் கூட பேசுவதை, பழகுவதை கவுரவக் குறைச்சலாக நம்மில் பலர் கருகிறார்கள்.

இதன் காரணமாக, இதுபோன்ற குணம் கொண்ட, காலத்திற்கு ஏற்ப நிறம் மாறும் பண்பு கொண்ட நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உறவுகளை சிலர் துண்டித்து விடுகிறார்கள்.  ஏழ்மை நிலையில் பண்பாக பழகிய நபர், வசதி, வாய்ப்பு வந்தபிறகு, பணத் திமிருடன் பழகுவதை யார் தான் ஏற்றுக் கொள்ளவார்கள். அதன் காரணமாக இதுபோன்ற குணம் கொண்ட நண்பர்கள், உறவினர்களை ஒதுக்கி வைத்து விட்டு, காலா காலத்திற்கு அவர்களின் நட்பை, உறவை துண்டித்து விடுகிறார்கள். இதுபோன்ற குணம் கொண்டவர்களின் வீடுகளுக்கோ, அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்வதில்லை.

உறவுகள் சீர்குலைய, பணமும் பதவியும், வசதி, வாய்ப்பும் வந்தபிறகு ஒருவரிடம் மாறும் குணம், திமிர் முக்கிய காரணங்களாக அமைந்து விடுகின்றன.

கடனால் பாதிக்கப்படும் உறவுகள்:

மனிதர்கள் மத்தியில் உறவுக்கள் பாதிக்கப்பட கடன் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

பலர் அவசர தேவைக்கு ஒருவரிடம் வாங்கும் கடனை, மீண்டும் திருப்பி கொடுப்பதே இல்லை. அது மிகச்சிறிய தொகையாக இருந்தாலும், மிகப்பெரிய தொகையாக இருந்தாலும் திருப்பி கொடுக்க மறுக்கிறார்கள். தங்களிடம் பணம் இருந்தாலும், வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிடும் பண்பு, குணம் நம்மில் பலரிடம் இல்லை. இதன் காரணமாக, உறவுகள் துண்டிக்கப்பட்டு சீர்குலைகின்றன.

நல்ல வசதியோடு வாழும் பலர் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உதவ முன் வருவதில்லை. கடன் கொடுப்பதில்லை. ஏழை உறவினர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெற நிதியுதவி செய்வதில்லை. 

இதுபோன்ற குணம் கொண்ட நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை யாரும் விரும்புவதில்லை. நேசிப்பதில்லை. அவர்களின் உறவுகளை துண்டித்து விடுகிறார்கள்.

அதேநேரத்தில், ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக் கூடாது. வசதி, வாய்ப்புகள் வந்தபிறகும் முன்பு பழகியது போன்றே எப்போதும் போல பழகும் குணம் கொண்டவர்கள் நம்மில் சிலர் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் உண்மையான மனிதர்கள்.

உறவுகளை பேணுவோம்:

உலகில் மனிதன் வாழப் போவது கொஞ்ச காலம் தான். ஒரு மனிதன் அதிகப்பட்சமாக நூறு ஆண்டுகளுக்கு மேல் தற்போது வாழ முடியாத நிலை இருந்து வருகிறது. அடுத்த நொடியில் என்ன நடக்கும்? என நம்மால் கணிக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைவரிடமும் அன்பு செலுத்தி உறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வோம். உறவுகளை துண்டித்து வாழ்பவன் மனிதன் அல்ல. இதேபோன்று, உறவுகளை தன்னுடைய செயல்கள் மூலம் சீர்குலைவு செய்யவனும் மனிதனே இல்லை. இதை மனதில் உள்வாங்கி கொண்டு, உறவுகளை நல்ல முறையில் பேணி, மேம்படுத்தி மகிழ்ச்சியான வாழ்வை வாழுவோம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: