தேச-நேச திருப்பயணத்தின் ஓராண்டு
நிறைவு விழாவில் நூல் வெளியீடு:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு
இ.யூ.முஸ்லிம் லீக் அழைப்பு....!
கோழிக்கோடு,மே25- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் எழுதியுள்ள ‘The Message of Love’ என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேச-நேச திருப்பயணம் கருத்தரங்கம்:
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் ‘The Journery of Harmony India’ என்ற பெயரில் தேச-நேச திருப்பயணம் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கேரளா முழுவதும் மட்டுமல்லாமல், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த கருத்தரங்குகள் நடைபெற்றன. அனைத்து மதத் தலைவர்களையும் ஒருங்கிணைந்து மத நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் பேணி காக்கும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்குகளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் மற்றும் சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு, மதச்சார்பின்மையின் முக்கியத்துவம் குறித்தும், மத நல்லிணக்கத்தின் அவசியம் குறித்தும் அற்புதனமான கருத்துகளை முன்வைத்து பேசினார்கள்.
தேச-நேச திருப்பயணம் கருத்தரங்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. நாட்டில் உள்ள பிரபலமான முக்கிய ஊடங்களும், பத்திரிகைகளும் இந்த அற்புதமான கருத்தரங்குகளை பாராட்டி புகழ்ந்தன. மேலும், தலையங்கம் உட்பட சிறப்பான செய்திகளை வெளியிட்டு ஆதரவு அளித்தன.
ஓராண்டு நிறைவு விழா:
இந்நிலையில், வரும் 27ஆம் தேதி கோழிக்கோட்டில் தேச-நேச திருப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் எழுதியுள்ள ‘The Message of Love’ என்ற நூல் வெளியிடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு தங்ஙள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, தெலங்கானா முதமைச்சருக்கு, கடந்த 23ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மிகவும் வெற்றிகரமாக அமைந்த தேச-நேச திருப்பயணம் கருத்தரங்குகளின் நிறைவு விழாவில் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநிலத் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் எழுதியுள்ள ‘The Message of Love’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட வேண்டும் என்றும் குஞ்ஞாலிக்குட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், ஆன்மிக பெரியவர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகவும், மதச் சார்பின்மை, மத நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை பேணி காக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகவும் குஞ்ஞாலிக் குட்டி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment