இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக, வட மாநிலங்களில் உருவான மக்கள் எழுச்சி சுனாமி அலை....!
18வது மக்களவைக்கு நடைபெற்று வரும் தேர்தலில், இதுவரை ஐந்து கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ளன. வரும் 25ஆம் தேதி ஆறாவது கட்டத் தேர்தலும், பின்னர் ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
ஏழுக் கட்டத் தேர்தல் நிறைவு பெற்றதும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், தற்போது, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக வட மாநில மக்கள் கொதித்து எழுந்து இருப்பதை குறிப்பிடலாம். அதற்கு முக்கிய காரணம், இருவரும் செய்துவரும் வெறுப்பு பிரச்சாரம், கொஞ்சம் கூட கூச்சப்படாமல், தயங்காமல் கூறி வரும் பொய்கள் ஆகியவை நாட்டு மக்களை வெறுப்பு அடையச் செய்துள்ளது என கூறலாம்.
வட மாநிலங்களில் எழுச்சி:
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு, வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய அளவுக்கு ஆதரவு இருக்கவில்லை. அந்த மாநிலங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர், பா.ஜ.க.வையே ஆதரித்து வந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களிடம் இருக்கும் அரசியல் விழிப்புணர்வு, வட மாநில மக்களிடம் இல்லாத காரணத்தினால், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை வட மாநில மக்கள் கண்டுக் கொள்ளவில்லை். இது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக இருந்தது.
ஆனால், முதல் நான்கு கட்டத் தேர்தல் நிறைவு பெற்றதும், நாட்டில் மக்கள் ஒரு நல்ல மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உறுதியாக தெரிய வந்தது. வாக்குப்பதிவுக்குப் பிறகு கிடைத்த தரவுகள் இதை உறுதி செய்தன. இதையடுத்து, நாடு முழுவதும் ஒரு புதிய எழுச்சி உருவாகி, மக்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு தூண்டியது.
மக்களின் இந்த சிந்திக்கும் மனப்பான்மை வளர, வளர அதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள், தங்களுடைய சரியான, அற்புதமான பிரச்சாரம் மூலம் தீனி போட்டார்கள். பா.ஜ.க. அரசின் கடந்த பத்து ஆண்டு கால தோல்வி, அதனால் நாட்டு மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு, இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், என்னென்ன பணிகள், திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.
இதற்கு உரிய பதிலோ, விளக்கமோ பா.ஜ.க. தலைவர்கள் அளிக்கவில்லை. மாறாக, இந்து-முஸ்லிம், தென் இந்தியா-வட இந்தியா, பாகிஸ்தான் என்ற பாணியிலேயே பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது மக்களிடம் தற்போது எடுப்படவில்லை. பா.ஜ.க. மக்கள் மத்தியில் பிரச்சினையை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற துடிக்கிறது என்பதை வட மாநில மக்கள் தற்போது நன்கு உணர்ந்து கொண்டார்கள்.
இந்தியாவுக்கு ஆதரவாக சுனாமி அலை:
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐந்தாவது கட்டத் தேர்தல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக, சமூக வலைத் தளங்களில் வந்த காணொளி காட்சிகள், இந்தியா முழுவதும் வேகமாக பரவின. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மிகவும் வலுவான கட்சியாக கருதப்படும் நிலையில், அப்படி ஒன்றும் இல்லை. தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதை லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஆதரவு மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த காணொளி பா.ஜ.க. தலைவர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது என்றே கூறலாம். இதேபோன்று, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் கூட, நான்காவது கட்டத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்து விட்டது. இதனால் ஐந்தாவது கட்டத் தேர்தல் நடந்த உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்காளர்கள் அனைவரும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களித்தனர் என்பது உறுதியாக தெரிய வருகிறது.
மக்கள் கருத்து:
ஐந்தாவது கட்டத் தேர்தலில் வாக்களித்தப் பிறகு, கருத்துக் கூறிய பெரும்பாலான மக்கள், வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்தோம் என்றும், சர்வாதிகாரம் வீழ்ச்சி அடைய வாக்களித்தோம் என்றும், ஜனநாயகம் காக்க நல்லவர்களுக்கு வாக்களித்தோம் என்றும் தெரிவித்தார்கள். மேலும் நல்லவர்களுக்கு, படித்தவர்களுக்கு உங்களுடைய வாக்கை செலுத்தங்கள் என்றும் மற்ற வாக்காளர்களையும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களிப்பது வழக்கமில்லை. ஆனால் இந்த முறை, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு, முஸ்லிம்கள் முதல் முறையாக வாக்களித்து வரலாறு புரிந்துள்ளனர்.
இதன்மூலம், பெரும்பாலான வாக்காளர்கள் இந்தியா கூட்டணியின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிய வருகிறது. இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் எஞ்சியுள்ள நிலையில், 6 மற்றும் 7வது கட்டமாக 114 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மக்களின் சுனாமி அலை வீசுவதால், 114 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு நல்ல அறுவடை கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணி ஆட்சி உறுதி:
இந்தியாவில் தற்போதைய அரசியல் களம், சூழல் முற்றிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரும்பி விட்டது. எனவே ஜூன் நான்காம் தேதிக்குப் பிறகு இந்தியாவை இனி இந்தியா ஆட்சி செய்வது உறுதி.
அந்த நம்பிக்கை இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க. தலைவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக, ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்த எடுத்த முடிவு மிகப்பெரிய தவறான முடிவு என பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போதே பல தலைவர்கள் மவுனம் கடைபிடித்து வருகிறார்கள்.
கடைசியாக, ஏக இறைவன் யாருக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்க விரும்புகிறானோ, அவருக்கு தான் ஆட்சி அதிகாரத்தை வழங்குவான். இதை இஸ்லாமியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஏக இறைவன், இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழ, இந்த முறை நல்லவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவான் என்பது உறுதி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment