Monday, May 27, 2024

ரேவந்த் ரெட்டி பெருமிதம்....!

மதவாத சக்திகளை எதிர்த்துப பேராடுவதில் தென்மாநிலங்கள் முன்மாதிரியாக இருந்து வருகின்றன:

கோழிக்கோட்டில் நடந்த இ.யூ.முஸ்லிம் லீக் விழாவில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெருமிதம்....!

கோழிக்கோடு, மே28- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் எழுதியுள்ள  ‘ஸ்நேக சதாஸ் (தி மெசேஜ் ஆஃப் லவ்)’  'The Message of Love' என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதிநிதியை வெளியிட்டு, வாழ்த்தும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். 

மதவாத சக்திகள் மீது தாக்கு:

விழாவில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் முன்மாதிரியாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மதவாத சக்திகளை வளைத்து வைப்பதில் இந்தியாவின் பிற பகுதிகள் தென் மாநிலத்திலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய ரேவந்த் ரெட்டி, கேரளாவில் வகுப்புவாத சக்திகள் வளர எந்த வாய்ப்பையும் விட்டுவிடாததால், கேரளாவைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார். 

கேரளாவுக்கு வருவதை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதாகவும், கேரளா தனது மண்ணில் வகுப்புவாத சக்திகளை ஒருபோதும் அனுமதிக்காததால், தானும் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வெளியில் இருந்து வரும் பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த இந்தியாவும் கேரளாவிடம் இருந்து தனது சமூகத்தை எவ்வாறு அப்படியே வைத்திருக்கிறது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தனது தலைவர் ராகுல் காந்தியை தெலுங்கானாவில் போட்டியிடச் செய்ய தான் எவ்வளவோ முயற்சி செய்தும், ஆனால் கேரளாவில் போட்டியிட்டதைப்  பார்த்து தான் பொறாமைப்படுவதாகவும் ரேவந்த் ரெட்டி கூறினார். 

மோடி தோல்வி உறுதி:

பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஒரு ராஜாவாக கருதி, எந்த சக்தியாலும் தன்னை ஆட்சியில் இருந்து வீழ்த்த முடியாது என்று உணரும் நபர் என்று வர்ணித்த ரேவந்த் ரெட்டி,  இந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் மோடியை தோற்கடிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மதப் பிரச்சினைகளால் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்த முயன்றாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வென்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் முஸ்லிம்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. உள்ளிட்ட பிரிவினர்களுக்கான இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கான பா.ஜ.க.வின் முயற்சிகளைத் தடுக்கப்படும் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். 

அறிஞர் பெருமக்கள் பங்கேற்பு:.

நூல் வெளியீட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி, நூல் ஆசிரியரும் கேரள மாநிலத் தலைவருமான செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள், பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த ஆன்மிக பெரியவர்கள், அறிஞர்கள், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் லீகர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நாடு முழுவதும் நடைபெற்ற தேச -நேச திருப்பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, நடந்த இந்த விழாவில், நூல் வெளியீடு மற்றும் சிறப்புசொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: