"இந்தியா"வின் இளம் தலைவர்கள்....!
18வது மக்களவைத் தேர்தல் திருவிழா, வரும் ஜுன் ஒன்றாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் ஏழுக் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஏற்கனவே 6 கட்டத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்தன. இதையடுத்து, ஏழாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல், ஜுன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 57 தொகுதிகளில், 7வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 18வது மக்களவைத் தேர்தல் மற்ற தேர்தல்களை விட மிகவும் வித்தியசமான தேர்தலாக இருந்தது என கூறலாம். சுமார் 26 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணி ஒரு பக்கமும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றொரு பக்கமும், போட்டியிட்டு தேர்தலை சந்தித்தன. இந்தியா கூட்டணி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என கூறி வாக்குகளை கேட்டது. ஆனால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தோம் என கூறி மக்களிடம் வாக்குகளை கேட்கவில்லை.
மாறாக, இந்து-முஸ்லிம் வெறுப்பு, வட இந்தியா-தென் இந்தியா, ஒடிசாவை தமிழர் ஆட்சி செய்யலாமா? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலை இடித்து விடுகிறார்கள், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்கள் வங்கியில் சேர்த்துள்ள பணத்தை எடுத்துக் கொள்வார்கள்., இந்தியா கூட்டணி பாகிஸ்தானுக்கு ஆதரவான அணி என்ற பாணியில்தான், பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம் இருந்தது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மிகவும் உச்சக்கட்டத்திற்கு சென்று, முஸ்லிம்களை குறிவைத்து மட்டுமே பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்த முறை அவர்களின் பிரச்சாரம் மக்களிடம் எடுப்படவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புவதால், வெறுப்பு பிரச்சாரத்தை அவர்கள் காது கொடுத்து கேட்க விரும்பவில்லை.
இந்தியாவின் இளம் தலைவர்கள்:
நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த இளம் தலைவர்களை குறித்து நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அவர்களின் பிரச்சாரம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக நீண்ட காலமாக நடந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொஞ்சம் கூட சோர்வு அடையாமல், இந்த இந்தியாவின் இளம் தலைவர்கள், ஆற்றிய பணியை எவ்வளவு பாராட்டினால், அது குறைவாகதான் இருக்கும்.
ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அக்கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகிய மூன்று பேர் மூத்த தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்களுக்கு இணையாக, அதை விட வேகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.க. ஆட்சியின் பத்து ஆண்டு கால தோல்வி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு எந்த திசையை நோக்கிப் பயணம் செய்யும் என்ற வகையில் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர். வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை தந்தனர். பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் செய்த தீவிரப் பிரச்சாரம், நாட்டு மக்களை நன்கு கவர்ந்தது. இவர்களின் பிரச்சாரம் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவுக்கு பயன் அளிக்கும் என்பது யாருமே மறுக்க முடியாது.
தேஜஸ்வி மற்றும் அகிலேஷ் யாதவ்:
நாடாளுமன்றத் தேர்தலில் 'மேன் ஆப் தி மேட்ஜ்' என்று ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமனால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவை நிச்சயம் தேர்வு செய்யலாம். சுமார் 251 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மிகப்பெரிய அளவுக்கு அவர் சாதனை புரிந்துள்ளார். இந்த 251 பொதுக்கூட்டங்களில் கூட, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், விலைவாசியை கட்டுப்படுத்துவது, இளைஞர்களின் வாழ்வில் ஒளியை ஏற்றுவது என்ற பாணியில்தான் தேஜஸ்வி யாதவின் பிரச்சாரம் இருந்தது. சில நேரங்களில் பிரதமர் மோடி, வரம்பு மீறி பிரச்சாரம் செய்தபோதும், தன்னை விமர்சனம் செய்தபோது, அதற்கு உரிய பதிலடி கொடுத்து, பீகார் மக்களின் உள்ளங்களை தேஜஸ்வி யாதவ் கவர்ந்தார். இதன் காரணமாக பீகாரில் இந்தியா கூட்டணியின் சுனாமி அலை வீசியது.
இதேபோன்று, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செய்த பிரச்சாரம் பா.ஜ.க. தலைவர்களை அச்சம் அடையச் செய்துள்ளது. அலகாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராகுல் காந்தியுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் செய்த பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்,
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இருவரும் பிரச்சாரம் செய்தபோது, கூடிய கூட்டம் அரசியல் நோக்கர்களை மிகவும் வியப்பு அடையச் செய்தது. இதேபோன்று, பிரியங்கா காந்தியுடன் இணைந்து அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், நடத்திய வாகனப் பேரணி, வாரணாசி தொகுதி மக்களை மிகவும் சிந்திக்க வைத்தது. இதன் காரணமாக வாரணாசி தொகுதியில் இந்த முறையை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய இளம் தலைவர்கள்:
வட இந்தியாவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ராகுல் காந்தி உள்ளிட்ட இளம் தலைவர்கள் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைத்தது போன்று, தென்னிந்தியாவிலும் சில இளம் தலைவர்கள் மிகச் சிறப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மேற்கொண்ட பிரச்சாரம் மிகவும் மக்களை கவர்ந்தது. அவரது பேச்சுகள், உரைகள், அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்ததால், இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என உறுதியாக கூறலாம்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்ளிட்ட தென்மாநில இளம் தலைவர்கள் இந்த 18வது மக்களவைத் தேர்தலில் மிகச் சிறப்பான முறையில், மக்களை கவரும் வகையில் அழகிய முறையில் கண்ணியமாக பிரச்சாரம் செய்தனர். இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போன்ற பல இளம் தலைவர்கள், மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஏற்று இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக அற்புதமாக பாடுபட்டனர்.
நல்ல செய்தி நிச்சயம்:
இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக ராகுல் காந்தி உள்ளிட்ட 'இந்தியா'வின் இளம் தலைவர்கள் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பு மூலம் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது உறுதி. ஜுன் நான்காம் தேதிக்குப் பிறகு, நாட்டில் இனி எல்லாமே நல்லது நடக்கும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில், இந்தியா கூட்டணி ஆட்சி இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்ததாந்தத்தை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையில் இனி நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும். அந்த ஒளி மூலம் நாட்டு மக்கள் இனி இருட்டில் இருந்து மீண்டு, நல்ல வெளிச்சத்திற்கு வருவார்கள். வெளிச்சம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment