Wednesday, May 29, 2024

வேலை தேடும் இளைஞரா....!

 

வேலை தேடும் இளைஞரா நீங்கள் ....!

உங்களுக்காக சில பயனுள்ள டிப்ஸ்...!!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதால், கடந்த பத்து ஆண்டுகளாக, இளைஞர்கள் தொடர்ந்து வேலைகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது மிகவும் அரிதாகவும், சிரமமாகவும் இருந்து வருகிறது. இதனால் விரக்தியின் உச்சத்திற்கு இளைஞர்கள் சென்று இருக்கிறார்கள். நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டத்தின் விகிதம் சுமார் 8 சதவீதம் அளவுக்கு இருந்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.

18வது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒரு உறுதிமொழியை நாட்டின் இளைஞர்களுக்கு அளித்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 30 லட்சம் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும் என்ற உறுதிமொழிதான் அது. இந்த உறுதிமொழி, இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை உருவாக்கி உள்ளது. இதேபோன்று, ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்படும் என்றும் ஆக்னிவீர் திட்டம் ரத்து  செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட இளம் தலைவர்கள் உறுதிப்பட கூறி வருகிறார்கள். இத்தகையை சூழ்நிலையில், வேலை தேடும் இளைஞர்கள் எப்படி, தங்களை தயார்படுத்திக் கொண்டு, நல்ல பணியில் சேருவது தொடர்பாக சில பயனுள்ள டிப்ஸ்களை கொஞ்சம் பார்ப்போம்.

கல்வி மற்றும் வேலையின் முக்கியத்துவம்:

இன்றைய நவீனக் காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகி விட்டது. எனவே, இந்திய இளைஞர்களின் கவனம் தற்போது கல்வியின் பக்கம் திரும்பியுள்ளது. நல்ல கல்வியை பெற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். இப்படி உயர்கல்விப் பெறும் இளைஞர்கள், நல்ல பணியில் சேருகிறார்களா என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. நல்ல முயற்சி செய்தும் அதற்கான பலனை நம் இளைஞர்கள் காண முடியவில்லை. கடின உழைப்பாளிகள் ஒவ்வொரு அடியிலும் தடுமாற வேண்டிய நிலை உள்ளது.

தற்போது, ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வேலை, தேவையாக உள்ளது. பலர் தங்களுக்கு வேலை கிடைக்காத போது தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தவறான பாதையில் செல்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் குறைய ஆரம்பிக்கும் நாளில்,  இந்த நாட்டின் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும். வேலை கிடைக்காவிட்டால் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று படித்த இளைஞர்கள் பலர் நினைக்கிறார்கள். இதனால், வேலையின்மைச் சேற்றில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

சில ஆலோசனைகள்:

உங்களுக்காக வேலை தேடுவது உங்களுடைய பெற்றோர் அல்லது நண்பர்கள் உள்ளிட்ட யாருடைய பொறுப்பும் அல்ல. நீங்கள்தான் வெளியே சென்று வேலை தேட வேண்டும். ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்களோ, அவ்வளவு அதிகமான மக்கள், உங்கள் இருப்பை உணருவார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் சிந்தனை மற்றும் நடத்தை மூலம் நிரூபிக்க வேண்டும்.

வேலை தேடலில் வெற்றி பெற்றவர்களுடன் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெறுங்கள். இந்த விஷயத்தில், உங்கள் திறமைகளை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஒரு சிறந்த வேலை உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். எனவே, இந்த வேலையில் முழு ஆர்வம் காட்டுங்கள். எங்கே வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் கண்டிப்பாக சென்று தொடர்பு கொள்ளுங்கள். வேலை தேடுவது முழு நேர வேலை போல இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த வேலையைப் பெற 24 மணிநேரமும் ஒரே சிந்தனையுடன் வாழ்ந்தால், இந்த மனநிலையும் இதயமும் இருந்தால், சிறந்த வேலையைப் பெறுவது எளிதாகிவிடும்.

இரண்டு அல்லது மூன்று முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் கைவிட்டால், உங்களால் எதுவும் செய்ய முடியாது. இப்போதெல்லாம், பெரும்பாலான நிறுவனங்கள், திறமையானவர்களைத் தேடும் முயற்சிகள் செய்து, பல்வேறு திறன்களைக் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. நீங்கள் ஒரு சிறந்த வேலையைத் தேடுகிறீர்களானால், விதிவிலக்கான திறமைகளைத் திரையிடும் திறன் கொண்ட முதலாளிகளைத் தொடர்ந்து தேடுங்கள். வேலை தேடுதல் பொதுவாக இரண்டு முதல் ஆறு மாதங்கள் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வலுவான ஆனால் கவர்ச்சிகரமான வேலை இன்னும் அதிக நேரம் எடுக்கும்.

சில பயனுள்ள டிப்ஸ்...!

நீங்கள் செய்து கொண்டிருந்த அதே வேலையை நீங்கள் மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. எனவே கிடைப்பதைத் தாண்டி வேலை தேடுங்கள். அதை அடையும் போது நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். இந்தப் பணியில் பொறுமையே அடிப்படைத் தேவை. சிறந்த வேலைகளைத் தேடுவதில் பிஸியாக இருப்பவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகைய குழு இல்லை என்றால், அதை நீங்களே உருவாக்க வேண்டும். நீங்கள் விரும்பும் வேலையைப் பற்றி உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். இதனால் அவர்கள் திறப்புகளைக் கண்காணித்து, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் காலியிடம் இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்க வாய்ப்பு உருவாகும்.

பல நிறுவனங்களுடன் தொடர்பில் இருங்கள். ஒரு நிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் தகவலை நீங்கள் வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் திறன்களை முன்னிலைப்படுத்தலாம். வருங்கால முதலாளிகள் எளிதாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமாகவும் அவற்றை அணுகலாம். இதன்மூலம் உங்களின் நிலை குறித்து அவர்களுக்கு சிறந்த முறையில் வழங்க முடியும்.

சில சமயங்களில் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை இருக்கிறது, உங்களுக்கும் வழங்கப்படும். ஆனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக நீங்கள் மறுக்கிறீர்கள். நம்பிக்கை குலைந்து, குறையை மனதில் கொண்டு பேசினால் இதுதான் நடக்கும். உங்கள் எல்லா குறைபாடுகளையும் புறக்கணித்துவிட்டு, குறைபாடுகளை அகற்றுவதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களில் உங்கள் திறமைக்கு ஏற்ப வேலை இல்லை என்றால், ஒரு வேலை தொடர்பாக நிராகரிக்கப்படுவது, உங்கள் நம்பிக்கையை இழப்பது தவறல்ல.

நேர்காணலின் போதும், அதற்குப் பிறகு நடக்கும் சந்திப்புகளிலும் உங்கள் நடத்தை கண்ணியமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் நேர்காணலுக்கு செல்ல வேண்டும். இந்த போக்கு, வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையை அளிக்கும். அவர்கள் உங்களை நினைவில் கொள்வார்கள். மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும்! மனித வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பான ஒன்று என்பதை உணர்ந்துகொண்டு, அழகிய முறையில் முயற்சிகளை தொடர்ந்தால், நிச்சயம் நல்ல பணி கிடைக்கும் என்பது உறுதி.

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்:

ஏக இறைவன் ஒவ்வொருவருக்கும் அற்புதமான திறமைகளை அள்ளி வழங்கியுள்ளான். அந்த திறமைகளை நல்ல முறையில் பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும். தங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை கண்டுபிடித்து, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்படி, வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால், நீங்கள் கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். இவ்வுலகில் கடினமாக உழைக்கிறவர்கள் கண்டிப்பாக மதிக்கப்படுவார்கள்.

திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது நன்கு படித்த பல இளைஞர்கள், தங்களுடைய படிப்புக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்காதபோதும், அதற்காக மனம் கலங்கி ஒதுங்கிவிடாமல், தங்களுடைய திறமையின் மூலம், சொந்தமாக தொழில் தொடங்கி, வாழ்க்கையில் வெற்றி பெற்று இருப்பதுடன், பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாடத்தின் வீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், நம்பிக்கையை மட்டும் இழக்காமல், கடின உழைப்புடன் பயணம் தொடர்ந்தால் நிச்சயம், வாழ்க்கையில் சாதிக்க முடியும். இப்படி, சாதித்த ஏராளமான இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகிறார்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: