மூடிய அலமாரியின் கண்ணாடியில் எட்டிப் பார்க்கும் புத்தகங்கள்.....!
ஏக இறைவனாகிய, எல்லாம் வல்ல அல்லாஹ், ஹஸ்ரத் ஆதம் (அலை) முதல் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) வரை, ஏறக்குறைய ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் தீர்க்கதரிசிகளை அனுப்பி, ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் ஒரு புத்தகம் அல்லது வேதத்தை வழங்கினான். இந்த புத்தகம், அந்தக் காலத்தின் 'வாழ்க்கைக் குறியீடுடாக' இருந்து வந்தது. கடைசி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வழிகாட்டுதலின் கடைசி புத்தகம் திருக்குர்ஆன் ஆகும். இந்த புத்தகம் நித்தியமானது என்றும் அழியாதது. உலகம் அழியும் வரை மனித குலத்தின் நலனுக்கான உத்திரவாதம் அளிக்கும் அற்புதமான நூல் திருக்குர்ஆன்.
அற்புதமான திருக்குர்ஆன், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் வாசிக்கப்படாமல் கைகள் எட்டாத உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஹதீஸ் வடிவில் இருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், நபி மொழிகளையும் மார்க்க அறிவைப் பெற்றவர்களைத் தவிர, மற்ற முஸ்லிம்கள் வாசிப்பது மிகவும் அரிது. நம் அறிஞர்கள் வாழ்க்கையின் அனைத்து தலைப்புகளிலும் விரிவான வழிகாட்டல் புத்தகங்களை எவ்வளவு மரபுவழியாக விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவை அனைத்தும் அலமாரிகளின் கண்ணாடியில் பூட்டி வாசகர்களுக்காக காத்திருக்கின்றன.
சிறந்த நட்பு புத்தகங்களே:
உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தாலும், குழந்தைகளுக்கு அவர்களின் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு அறிவியல் புத்தகங்கள் கிடைக்கவில்லை. எனவே, இன்றைய உயர்கல்வி பெற்றவர்கள் கூட, குறைந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நம் முன்னோர்களின் சாதனைகள் நமக்குத் தெரியவில்லை. முஸ்லிம் விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம்.
ஒருவருக்கு சிறந்த நண்பர்கள் கிடைப்பது மிகவும் அரிது. அந்த வகையில் சிறந்த நட்பு உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால், புத்தகங்களுடனான நட்பை நீங்கள் வளர்த்துக் கொண்டு, பேண வேண்டும். ஒரு மனிதரின் சிறந்த பொழுதுபோக்கு நூல்கள் வாசிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. இந்த இயந்திர யுகத்தைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது, புத்தகங்களின் கடைசி நூற்றாண்டு என்று தோன்றுகிறது. புத்தகங்களின் அசல் நூற்றாண்டு என்று சொல்லக்கூடிய அதிர்ஷ்டசாலிகளில் நாமும் இருக்கிறோம். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், வாரத்தின் தொடக்கத்திலும், ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் நாளிதழ்கள், மாத, வார இதழ்களுக்காக ஆவலுடன் காத்திருந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. வீட்டில் கொடுக்கப்படும் வாரச் செலவுக்கான பணத்தை செலவழிக்காமல், புத்தகங்களை வாங்க சேமித்து வைத்து இருந்து, பின்னர் அந்த பணத்தில் நூல்களை வாங்கி, ஆர்வத்துடன் வாசித்து மகிழ்ந்தது இன்றும் என் மனக் கண் வந்து செல்லும் காட்சிகளாக இருந்து வருகின்றன.
கிடைத்த பணத்தைச் சேகரித்து, குறைந்த விலையில் பழைய புத்தகங்களைக் கொண்டு வந்து படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்ததும், விருந்தினர் மாளிகைக்குச் சென்றாலும், கண்கள் புத்தகங்கள், சமய, அறிவியல், சமூக, அரசியல் புத்தகங்களைத் தேடிக் கொண்டே இருந்தன என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், தற்போது அப்படி ஒரு நிலை இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களை படித்து முடித்தபிறகு, கவிதை நூல்கள், அரசியல் கட்டுரைகள், அறிவியல் நூல்கள், ஆகியவற்றின் மீது கவனம் சென்றது. இப்படி எப்போதும் புத்தகங்களை தூக்கி அலைந்தவர்கள், புத்தகப் புழு என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்கள்.
மன அழுத்தத்தைப் போக்கும் நூல்கள்:
புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது ஒரு சிறந்த வாழ்க்கை முறையாகும். படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மறதி நோய் ஏற்படாது. மன அழுத்தத்தை நீக்கி முடிவெடுக்கும் சக்தியை புத்தகங்கள் படித்து பெறலாம். படிக்கும் குழந்தைகளின் ஐ.கியூ அளவு, மற்ற குழந்தைகளை விட 6 புள்ளிகள் அதிகம். அவர்கள் அதிக நம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களைக் கொண்டுள்ளனர். எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பது முக்கியம்.
சிறு வயதிலேயே உங்கள் தலைமுறையை புத்தகங்களுக்கு வெளிப்படுத்துங்கள். சிறிய நூலகமாக இருந்தாலும் வீட்டில் நூலகம் இருப்பது அவசியம். வீட்டில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்வித் திறனுக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த நோக்கத்திற்காக உங்களை ஒரு முன்மாதிரி அமைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
புத்தகங்களிலிருந்து கதைகளைச் சொல்லுங்கள். சரியான உச்சரிப்பைக் கற்றுக்கொள்ள இது உதவும். சரளமும் மேம்படும், கற்பனையும் மேம்படும். எனவே சத்தமாக படியுங்கள். கேள்விகளைக் கேட்க குழந்தைகள் ஊக்குவித்து ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். ஒரு உண்மையான, பொது அறிவு புத்தகத்தை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து, அதை சத்தமாக வாசிக்கவும், கேள்விக்கான பதிலைக் கண்டறியவும். புத்தகத்தை ஆய்வு செய்ததற்கு வெகுமதி அளிக்கவும் முயற்சி செய்யுங்கள். இன்று கணினியில் பிடிஎப் வடிவில் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் படிப்பதால் நினைவாற்றல் ஏற்படுவதில்லை.
புத்தகங்களை பரிசாக கொடுங்கள்:
உங்கள் குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். படக் கதைகள், பட அகராதிகளைப் பதிவிறக்க செய்ய சொல்லிக் கொடுங்கள். தொலைக்காட்சி, கணினி, செல்பேசி ஆகியவற்றின் மீது, கவனம் செல்லாமல் இருக்கும் வகையில், கவனச்சிதறல்கள் இல்லாமல் படிக்கும் பகுதியை வைத்திருங்கள். திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, நல்ல புத்தகங்களை வாங்கி, அவற்றை பரிசாக கொடுத்து உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
பயணத்தின் போது புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். நல்ல நூல்களை உங்கள் அண்டை வீட்டாராக ஆக்குங்கள். ஆரோக்கியமான சமுதாயத்தின் நிறைவு, உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஆய்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மிகவும் முக்கியமானது என்பதால், ஒவ்வொரு சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் நபரிடமிருந்தும் தேவைப்படும் ஒரு நிலையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவது அவசியம். குழந்தைகளிடம் புத்தக அன்பை வளர்ப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பிஸியான, அவசரமான வாழ்க்கையிலிருந்து, ஒரு புத்தகத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள். வெளிப்படையாக, இது ஒரு கடினமான பணி, ஆனால் சாத்தியமற்றது அல்ல.
முன்மாதிரி தலைவர்கள்:
புத்தகங்களை எப்படி தேடிதேடி வாங்க வேண்டும்? அதை எப்படி படிக்க வேண்டும்? குறிப்புகளை எப்படி எடுத்து, தேவையான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்? என்பதற்கு மறைந்த பல தலைவர்கள் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகிறார்கள். தற்போது நாம் கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், புத்தகங்களை படிப்பதில் எப்படி ஆர்வத்துடன் இருந்தார் என்பதை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், ஒருமுறை சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
"கலைஞர் அவர்கள், ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், அதை முழுவதும் வாசிக்காமல் கீழே வைக்கமாட்டார். அத்துடன், அந்த நூலில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கோடிட்டி, குறிப்பு எடுத்துக் கொள்வார். மிகப்பெரிய புத்தகம் என்றால், அதிகம் பக்கங்களைக் கொண்ட நூல் என்றால், வேலைப் பளுக்கு மத்தியிலும், நேரம் கிடைக்கும்போது அதை படித்து முடித்துவிடுவார். கலைஞர் அவர்களின் இந்த பழக்கத்தை நான் அறிந்தபோது, எனக்கும் அதைப் போன்று செயல்பட வேண்டும் என ஆர்வம் பிறந்தது. அதை தற்போது நான் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்துவிட்டால், அதை முழுவதும் படிக்காமல் நிறுத்துவது இல்லை"
இப்படி பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் சொன்னபோது, எனக்கு மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதனால் தான் கலைஞர் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சவாலைகளை சந்தித்தபோதும், மிகவும் உறுதியாக நின்று வெற்றி பெற முடிந்தது. குறளோவியம் போன்ற அற்புதமான நூல்களை எழுத முடிந்தது என நினைத்துக் கொள்வேன். கடைசியாக இன்றைய 'வாசகன்' நாளைய 'தலைவன்' என்று கூறப்படுகிறது. ஆகவே, மூடிய அலமாரியின் கண்ணாடியில் எட்டிப் பார்க்கும் நல்ல புத்தகங்கள் மீது நம் கவனத்தை செலுத்துவோம். அலமாரியின் கண்ணாடிகளை திறந்து நூல்களை எடுத்து வாசிப்பதை பழக்கமாகவும் வழக்கமாகவும் மாற்றிக் கொள்வோம்.
- எஸ்.ஏஅப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment