Sunday, May 26, 2024

முஸ்லிம்களின் மத நல்லிணக்கம்...!

தமிழகத்தில் நிலவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமை:

கோவில் கட்ட நிலத்தை தனமாக வழங்கி  முஸ்லிம்கள் காட்டிய மத நல்லிணக்கம்...!

திருப்பூர், மே27- தமிழகத்தில் இந்து-முஸ்லிம்கள் இடையே நல்ல ஒற்றுமை நிலவி வருகிறது என்பதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகின்றன. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சிகள் செய்து வந்தாலும், அவர்களின் கனவுகள் நிறைவேறவில்லை. அமைதியை விரும்பும் மக்கள், அனைத்துச் சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தங்களது மத நல்லிணக்கத்தை அவ்வவ்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைவரும் வசித்து வரும் இந்த பகுதியில், முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் இருந்து வருகிறது. ஆனால், இந்துக்கள் வழிப்பாடு செய்ய கோவில் இல்லாத நிலை இருந்தது. இதனால் கோவில் கட்ட வேண்டும் என எண்ணிய இந்து மக்கள், அதற்கான நிலத்தை தேடி வந்தனர். 

முஸ்லிம்களின் தாராளம்:

இச் செய்தியை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள், ஆர்.எம்.ஜே.கார்டன் முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினார்கள். முஸ்லிம்கள் தானமாக வழங்கிய நிலத்தில் கோவில் கட்டும் பணிகள் நிறைவு அடைந்து, கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அப்போது, முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் நிர்வாகிகளிடம் வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் முஸ்லிம்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு தமிழ்நாடுதான்:

தற்போது நாட்டின் சில பகுதிகளில் சாதி, மதம் என இனபாகுபாடுகள் மூலம் பலரும் பிரிந்துள்ள நிலையில், அனைவரும் மனிதர்கள், அனைவரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவில் கட்ட முஸ்லிம்கள் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை தனமாக வழங்கியிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அனைத்து மக்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 


=======================


No comments: