Wednesday, May 22, 2024

கோரிக்கைகள்.....!

இந்து-முஸ்லிம் வெறுப்பு பேச்சு....!

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி  விலக வலுக்கும் கோரிக்கைகள்...!!

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும், இந்து-முஸ்லிம் என்ற பாணியிலேயே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகளை மீறி இவர்கள் பிரச்சாரம் செய்து வந்தாலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் மவுனம் கடைப்பிடித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்கள் மீது எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்பு பேச்சு தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஓடிசாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக பேசியதையும் தேர்தல் ஆணையம் கண்டுக் கொள்ளவில்லை. இவர்களின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இரட்டை நாக்கு:

இந்து-முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் காசியில் ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மோடி, "தாம் அதைப் போன்று, அதாவது இந்து-முஸ்லிம் வெறுப்பு பாணியில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அப்படி பிரச்சாரம் செய்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகி விடுவேன்" என்றும் பதில் அளித்தார்.

மேலும், அப்படி பிரச்சாரம் செய்தால் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறி விடுவேன் என்றும் மோடி பதில் அளித்தார்.

இப்படி, பெண் பத்திரிகையாளரிடம் விளக்கம் அளித்த மோடி, மறுநாள் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்து வாக்கு சேகரித்தார். இப்படி பிரச்சாரம் செய்தால் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவனாக மாறிவிடுவேன் என்று கூறிய மோடி, தன்னுடைய வார்த்தைகளில் உண்மையாக இருக்கவில்லை. உண்மையாக நடந்து கொள்ளவில்லை. மீண்டும் பொய் பிரச்சாரம் செய்து இரு சமூகங்கள் மத்தியில் வெறுப்பை பரப்பி வருகிறார். தற்போது, தென் இந்தியா, தமிழகம் என தன்னுடைய பிரச்சாரத்தில் குறிப்பாக குறிப்பிட்டு பேசி வருகிறார்.

இதுபோன்று பேசினால் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்றும் பொது வாழ்க்கையில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறிய மோடி, தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கவில்லை.

வலுக்கும் கோரிக்கைகள்:

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும் பிரதமர் மோடி, தான் அளித்த உறுதிமொழியை ஏற்று பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் தற்போது கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள கார்கே, பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் இந்து-முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் செய்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மோடி இப்படி பேசி வருவது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் நிதியை காங்கிரஸ் ஒதுக்கியது என்ற மோடியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் கார்கே மறுத்துள்ளார்.

பிரதமர் மோடி பொய்யான தகவல்களை பரப்பி, நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள கார்கே, தனது பதவிக்கு ஏற்ற முறையில் கண்ணியமாக மோடி நடந்து கொள்ளவில்லை என்றும் சாடியுள்ளார். எனவே, தாம் அளித்த உறுதிமொழியை ஏற்று, நாள்தோறும் இந்து-முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும் மோடி, பொது வாழ்க்கையில் இருந்து உடனே விலக வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தி இருக்கிறார்.

மதம் பார்த்து உதவக் கூடாது:

இந்திய நாட்டில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சிறந்த முறையில் பணியாற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. இதனால் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம் சமுதாயம் பயன் அடைந்தது. இதை வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் சாதகமாக இருக்கிறது என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மோடி தாம் சொல்லிப்படி பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் கிரேக்க விடுத்துள்ளர்.

நிச்சயம் நடக்கும்:

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, மோடி தான் விரும்பியபடி பொது வாழ்க்கையில் இருந்து நிச்சயமாக விலகப் போவது உறுதி. நாட்டு மக்களின் எழுச்சி தற்போது பா.ஜ.க.விற்கு எதிராக மாறிவிட்டது. இந்தியா கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடிவு செய்துவிட்ட மக்கள், பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சிக்கு பிரியாவிடை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜூன் நான்காம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி இந்தியாவை ஆளும். பிரதமர் மோடி, தனது விருப்பத்திற்கு ஏற்ப, பொது வாழ்க்கையில் விலகப் போவது உறுதி.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: