Saturday, May 25, 2024

நடைப்பயிற்சி....!

ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு நேர நடைப்பயிற்சி.....!

ஒவ்வொரு மனிதரும் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். அதன் காரணமாக, பலர் தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை ஏற்று, அதன்படி செயல்பட்டு, தங்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறார்கள். இப்படி நாள்தோறும், தங்களுடைய பழக்க வழக்கங்கள் மூலம் வாழ்க்கையின் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டாலும், பல்வேறு நோய்கள் மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. 

உலகில், உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் 50 சதவீத நோய்கள் உருவாகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொண்டால், ஒரளவுக்கு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என மனிதர்களுக்கு மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை தருகிறார்கள். அத்துடன், ஆரோக்கிய வாழ்வுக்கு நடைப்பயிற்சி மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்கள் தரும் ஆலோசனையாக இருந்து வருகிறது. 

நடைப்பயிற்சியின் முக்கியத்துவம்:

தினமும் அதிகாலை நேரத்தில், நம்மில் பலர் நடைப்பயிற்சி செய்வது வருவதை நாம் கண்டு வருகிறோம். சென்னையில் உள்ள மெரினா கடற்கரைக்கு சென்றால், காலை நேரத்தில்,  நூற்றுக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி செய்யும் காட்சிகளை காணலாம். இதேபோன்று, முக்கிய பூங்காக்களில், ஏராளமான ஆண்கள், பெண்கள் மூச்சு இறைக்க வேகமாக நடைப்பயிற்சி செய்வதையும் காண முடியும். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஆண்கள், பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு தற்போது நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக உடல் பருமனை குறைப்பது, நீரழிவு நோயை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை இருந்து வருகின்றன. 

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம்  சென்றால், அவர் கேட்கும், முதல் கேள்வி "தினமும் வாக்கிங் போறீங்களா" என்பதாக இருந்து வருகிறது. இதன்மூலம் ஆரோக்கிய வாழ்விற்கு நடைப்பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைப்பயிற்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டு, பழக்கமாக மாற்றிக் கொண்டு, செய்து வந்தால், ஓரளவுக்கு நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். 

இரவு நேர நடைப்பயிற்சி:

இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருந்து வருகிறது. சாப்பிட்டவுடன், உறங்கச் செல்வது நல்ல பழக்கம் இல்லை என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இரவு உணவிற்குப் பிறகு, நடைபயிற்சி செய்வது ஆயுர்வேதக் கொள்கைகளுடன் அழகாக ஒத்துப்போகிறது. இது உணவுக்குப் பிறகு அமைதியான, செரிமானத்தை ஊக்குவிக்கும் செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

பல தலைமுறைகளாக, இரவு உணவுக்குப் பிறகு நிதானமாக நடப்பது பல இந்திய குடும்பங்களில் கடைப்பிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. சாதாரண நடைப்பயணத்தை விட, இந்த நடைமுறை ஆயுர்வேதக் கொள்கைகளில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் வியக்கத்தக்க அளவிலான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இந்த பழமையான பாரம்பரியத்தின் பின்னால் உள்ள அறிவியலை விளக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவர், கே.சோம்நாத் குப்தா, "இரவு உணவுக்குப் பிறகு நடப்பது செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, மென்மையான உணவு இயக்கத்தை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார்.  இரவு நேர நடைப்பயிற்சி உடல் வீக்கம் மற்றும் அஜீரணத்தைத் தடுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  "இரவு உணவிற்குப் பிந்தைய நடைப்பயிற்சி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவும் என்றும், இது இன்சுலின் கூர்முனைகளைத் தடுக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது" என்றும் அவர் கூறியுள்ளார். 

நடைப்பயிற்சியால் நன்மைகள்:

இரவு உணவுக்குப் பிறகு உலா செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என கேள்வி எழுப்பினால், நடைபயிற்சியின் மென்மையான செயல்பாடு சிறந்த தூக்க தரத்தையும் ஊக்குவிக்கிறது என்று கூறுகிறார் டாக்டர் குப்தா. இலேசான உடற்பயிற்சி உங்கள் உடலைத் தளர்த்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், அமைதியான இரவுக்கு உங்களைத் தயார்படுத்துகிறது. கூடுதலாக, நடைபயிற்சி கலோரிகளை எரிக்கிறது, எடை மேலாண்மைக்கு உதவுகிறது மற்றும் தேவையற்ற எடை அதிகரிப்பதை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வது ஆயுர்வேதக் கொள்கைகளுடன் அழகாக ஒத்துப்போகிறது என்றும், இது உணவுக்குப் பிறகு அமைதியான, செரிமானத்தை ஊக்குவிக்கும் செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும் மருத்துவர் கூறியுள்ளார். பாரம்பரியமாக, நடைபயிற்சி சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த நடைப்பயிற்சிகள் "பெரும்பாலும் குடும்பம் அல்லது சமூக உறுப்பினர்களை உள்ளடக்கியது என்றும், அவை சமூக பிணைப்புகளை வளர்க்கின்றன, மேம்பட்ட மன நலத்திற்கு பங்களிக்கின்றன." என்றும் குப்தா கூறியுள்ளார். 

காலையில் செய்யும் நடைப்பயிற்சிகள், நாள் முழுவதும் மக்களின் வளர்சிதை மாற்றத்தை மிகவும் திறம்பட அதிகரிக்கும். மேலும் அவை நாளின் பிற்பகுதியில் குறைவான சாத்தியமான இடையூறுகள் காரணமாக மிகவும் சீரானதாக இருக்கும். காலை சூரிய ஒளியின் கூடுதல் போனஸ் இந்த விருப்பத்தை மேலும் உயர்த்துகிறது, ஏனெனில் இது செரோடோனின் அளவை அதிகரிக்கிறது, மனநிலை மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. “நடையின் தீவிரமும் மிதமானதாக இருக்க வேண்டும், மிகவும் தீவிரமான செயல்பாடு தசைப்பிடிப்பு அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். தனிப்பட்ட அனுபவங்கள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயது, சுகாதார நிலைகள் மற்றும் உடற்பயிற்சி நிலைகள் போன்ற காரணிகள் அனைத்தும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன." என்றும் குப்தா தெரிவித்துள்ளார். 

இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி சரியாக இல்லை என்றால், காலை அல்லது மாலை போன்ற மாற்று நேரங்களில் செய்வது நல்லது என்றும், நீட்டித்தல் அல்லது யோகா போன்ற மென்மையான செயல்பாடுகளும் சிறந்த மாற்றாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். "உங்கள் உடலைக் கேட்டு, உங்களுக்கு மிகவும் பொருத்தமான அணுகுமுறையைத் தேர்வுசெய்ய வேண்டும் என ஆலோசனை கூறும் மருத்துவர் குப்தா, ஆனால் நீங்கள் இரவு உணவிற்குப் பிறகு நடைபயணத்தின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மாற்று விருப்பங்களை ஆராய்ந்தாலும், உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் லேசான உடல் செயல்பாடுகளை இணைப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும்" என்றும் தெரிவித்துள்ளார். 

முடிந்த அளவுக்கு:

தற்போது செல்பேசி யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இரவு நேர நடைப்பயிற்சி சாத்தியமானதா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். செல்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு, இரவு உணவுக்குப் பிறகு 30 நிமிடங்கள் நடப்பதை பழக்கமாகவும், வழக்கமாகவும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை உடடினயாக நம்மிடம் வந்துவிடாது. ஆனால், முடிந்த அளவுக்கு அதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்தால், பின்னர், நம்முடைய உடல் ஆரோக்கியமாக மாற, மாற, இரவு நேர நடைப்பயிற்சி மீது நமக்கு ஆர்வம் பிறந்துவிடும். அந்த ஆர்வம் நல்ல நடைப்பயிற்சியை செய்ய வாய்ப்பை உருவாக்கும். இரவு நேர நடைப்பயிற்சி ஆரோக்கிய வாழ்வை தரும் என்பதை நினைவில் கொண்டு, இன்றில் இருந்து அதை செய்ய தொடங்குவோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: