" ஹாஜிகளின் கைகளில் தவழும் மணிச்சுடர் "
ஒவ்வொரு பக்கத்தையும் ஆர்வத்துடன் படித்து பாராட்டு
- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -
மணிச்சுடர் நாளிதழ் தனது நாற்பதாவது ஆண்டு பயணத்தில், மிகச் சிறப்பான முறையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்காக, இஸ்லாமியர்களால், ஆங்கிலம், உர்தூ, மலையாளம் வங்கம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வார, மாத இதழ்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருசில மொழிகளில் நாளிதழ்களும் வெளியாகின்றன.
நாட்டிலேயே தமிழ் மொழியில், முஸ்லிம்களுக்காக மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய மக்களையும் ஒருங்கிணைந்து செல்லும் வகையில் ஒரு நாளிதழ் நடத்தப்படுகிறது என்றால், அது மணிச்சுடர் நாளிதழ் மட்டுமே என்று உறுதியாக கூறலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சவால்களை சந்தித்தும், மணிச்சுடர் நாளிதழ் தனது அற்புதமான பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களின் இல்லங்களிலும் மணிச்சுடரை கொண்டு சென்று சேர்க்கும் வகையில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, 'நாள்தோறும் குறைந்த பட்சம் 10 சந்தாக்களாவது வரவேண்டும்' என்ற வேண்டுகோளை முன்வைத்து, நாற்பதாவது ஆண்டு தொடக்க நாளில் இருந்து, தொடர்ந்து மணிச்சுடர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுத்து பணியாற்றி வருகிறார்.
பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் இந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன் காரணமாக, இந்தாண்டு இறுதிக்குள் பத்தாயிரம் சந்தாக்கள் வந்துவிடும் என்ற நம்பிக்கை பேராசிரியருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும், மணிச்சுடர் நாளிதழை மிகச் சிறப்புடன் கொண்டு வர பல்வேறு முயற்சிகளையும் பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் செய்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், தற்போது மணிச்சுடர், தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இல்லங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளது.
ஹாஜிகளின் கைகளில் தவழும் மணிச்சுடர்:
மணிச்சுடர் ஆசிரியர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகளுக்கும், முயற்சிகளுக்கும் மணிச்சுடர் செய்திக்குழுவினர் மற்றும் ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மணிச்சுடர் நாளிதழ் அனைத்து சமுதாய மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மணிச்சுடர் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, மேலாளர் எஸ்.முஹம்மது மொய்தீன், எஸ்.ஹெச்.முஹம்மது அர்ஷர், ஏ.பி. முஹம்மது ஜலால், திருச்சி மணிச்சுடர் செய்தியாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் மட்டுமல்லாமல், மணிச்சுடர் நாளிதழ் மீது அக்கறைக் கொண்ட முஸ்லிம் லீகர்கள், ஒவ்வொரு நாளும் பம்பரமாக சுழன்று மணிச்சுடரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கடும் உழைப்பு வழங்கி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணம் செல்லும் ஹாஜிகள் மற்றும் அவர்களை வழியனுப்பி வைக்க வரும் உறவினர்கள் அனைவரிடமும், மணிச்சுடர் நாளிதழை கொண்டு சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தமிழகத்தில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 746 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இவர்கள் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் செல்கிறார்கள். அதன்படி, 326 பேர் கொண்ட முதல் குழுவினர், கடந்த 26.05.2024 அன்று சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் சவுதி அரேபியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு, ஹாஜிகளுக்காக சென்னையில் உள்ள ஹஜ் இல்லத்தில் சிறப்பு துஆ செய்யப்படுகிறது. மேலும், ஹாஜிகளுக்காக வழிக்காட்டிகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், செல்லும் குழுவில் இடம்பெற்ற ஹாஜிகளுக்கு அற்புதமான முறையில் ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. சிறப்பு துஆ மன்ஜிலும் நடைபெறுகிறது.
இந்தாண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை ஹஜ் இல்லத்தில், குழு குழுவாக வந்து தங்கி, சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் மற்றும் அவர்களை வழியனுப்பி வைக்க வரும் உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரிடமும், மணிச்சுடர் நாளிதழை கொண்டு சேர்க்கும் பணியில் மணிச்சுடர் ஊழியர் தோழர் ஏ.பி. முஹம்மது ஜலால் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் ஹாஜிகளின் கைகளில் மணிச்சுடர் நாளிதழ் தற்போது தவழுகிறது. இப்படி தங்கள் கைகளில் தவழும் மணிச்சுடரின் ஒவ்வொரு பக்கத்தையும் அவர்கள் ஆர்வத்துடன் படித்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
குவியும் பாராட்டுகள்:
கடந்த இரண்டு நாட்களாக ஹஜ் இல்லத்திற்கு மணிச்சுடர் வினியோகம் செய்யப்பட்டு வருவதன் மூலம், மணிச்சுடரின் அருமை, பெருமையை இதுவரை அறியாமல் இருக்கும் இஸ்லாமிய பெண்கள், அதன் சிறப்பைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 25ஆம் தேதி வெளியான மணிச்சுடரில், கே.எம்.கே. அவர்களின் 'படைத்தவனே கற்பித்த பண்பட்ட சட்டம்தான் ஷரீஅத்: அதை யாராலும் உடைக்க முடியாது' என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்ததாக ஹாஜிகளும், அவர்களின் உறவினர்களும் கூறியதைக் கேட்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன், அறிவுலகப் பேரொளி‘ இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் 'ஹஜ்ஜின் தத்துவம்' கட்டுரை, பேராசிரியர் கே.டி.கிஸர் முஹம்மது தொடர்ந்து எழுதிவரும் 'இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்' கட்டுரை, பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர் எழுதிவரும் +2 முடித்த மாணர்களுக்கான படிப்புகள் தொடர்பான கட்டுரைகள், 'தேச-நேச திருப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் நூல் வெளியீடு' குறித்த செய்திகள் மட்டுமல்லாமல், அரசியல், சமூகம் சார்ந்த் பொதுச் செய்திகள், எஸ்.ஏ.அப்துல் அஜீஸின் 'ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு நேர நடைப்பயிற்சி' 'நேரம் ஒதுக்குங்கள்' போன்ற கட்டுரைகள் நன்றாக இருப்பதாக ஹஜ் இல்லத்தில் மணிச்சுடர் படித்தவர்கள் கூறி பாராட்டு தெரிவித்தார்கள். குறிப்பாக, இஸ்லாமிய பெண்கள், மணிச்சுடர் நாளிதழின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆர்வதுடன் படித்ததைக் கண்டபோது, உண்மையிலே மகிழ்ச்சி ஏற்பட்டது.
வாழ்த்துகளுடன் வளரும் மணிச்சுடர்:
மணிச்சுடர் நாளிதழை தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில், ஹாஜிகளின் கைகளில் தவழும் மணிச்சுடர், அவர்களின் வாழ்த்துகள் மற்றும் துஆவுடன் மிகச் சிறப்பான முறையில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்பது உறுதி. பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் எப்போதும் கூறுவது போன்று, 'தவாக்கள் தோற்கலாம். துஆக்கள் தோற்காது' (அதாவது, மருந்து பயன் அளிக்காமல் போகலாம். ஆனால், ஏக இறைவனிடம் கேட்கும் துஆ நிச்சயம் பலன் அளிக்கும்) என்ற அற்புத மொழியின்படி, ஹாஜிகளின் துஆக்கள், மணிச்சுடரை மேன்மேலும் வளர்ச்சி அடையச் செய்யும். ஹாஜிகளின் துஆக்கள் தோற்காது. ஏக இறைவனிடம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே மணிச்சுடர் நாளிதழ் இனி, பேராசிரியர் கே.எம்.கே. அவர்களின் விருப்பப்படி, வளர்ச்சியுடன் இன்னும் சிறப்பான இதழாக மலரப் போவது உறுதி.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment