பத்து ஆண்டு கால மோடி ஆட்சியில் கேள்விக்குறியான ஊடகச் சுதந்திரம்....!
ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை இருந்து வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஊடகங்கள், தங்களது பணியின் மூலம், ஊடகத்துறை மீதான நம்பிக்கையை காப்பாற்றி வருகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறம் சார்ந்த செய்திகள், தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், புலனாய்வு செய்திகள் என சிறப்பான தகவல்களை வழங்கி, அதன்மூலம் நல்ல பணியை ஆற்றி வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், சுமார் 140 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான மக்கள் அடித்தள மக்கள் ஆவார்கள். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், இந்திய மக்கள் இன்னும் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். சரியான கல்வி, முழுமையான சுகாதார வசதி, வேலை வாய்ப்புகள் இன்னும் மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் அவல நிலையை உலகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. இதேபோன்று, ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொறுப்பும் ஊடகங்களுக்கு உண்டு. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு காலமாக ஊடகங்கள் எப்படி செயல்பட்டன என கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ஊடகங்கள், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு பயந்து, தங்களுடைய ஜனநாயகக் கடமையை சரியாக, முறையாக நிறைவேற்றவில்லை என்ற பதில் தான் கிடைக்கிறது.
மோடிக்கு பயந்த ஊடகங்கள்:
கடந்த 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, 2024 மே மாதம் வரை பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வர துடிக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊடகத்துறை எப்படி செயல்பட்டது, செயல்படுகிறது? என கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ஊடகங்கள், தங்களது ஊடகத் தர்மத்தை மறந்து, தரத்தை இழந்து மிகவும் கேவலமாக செயல்பட்டன., செயல்படுகின்றன என்ற பதில் தான் கிடைக்கிறது.
இப்படி ஊடகங்கள் தரம் தாழ்ந்து பணிந்து செயல்பட காரணம், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் மீது இருக்கும் பயம் என கூறலாம்.
பிரபலமான தொலைக்காட்சிகளில் மோடி புகழ்பாடும் செய்திகள், நிகழ்ச்சிகள், தகவல்கள், பேட்டிகள், வாதங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள், அத்துமீறல்கள், ஜனநாயகத்தை நசுக்கும் செயல்கள் ஆகியவற்றை ஊடகங்கள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றன. எதிர்க்கட்சிகளின் செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. கண்டுக் கொள்ளாமல் குப்பையில் வீசப்படுகின்றன.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதுகூட, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட சில ஊடகங்கள் துணிச்சலுடன் செய்திகளை வெளியிட்டு, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றின. ஆனால் இப்போது உண்மையை எழுதினால், ஒளிபரப்பினால் எங்கே சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சம் காரணமாக, பல ஊடகங்கள் மோடி ஆதரவு ஊடகங்களாக மாறி விட்டன. இத்தகைய மோடி ஆதரவு ஊடகங்கள், நாட்டு மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை மட்டுமே பரப்பி வருகின்றன. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய ஊடகத்துறை நசுங்கி விட்டது. எனவே இந்திய ஊடகத்துறையில், கடந்த பத்து ஆண்டுகள் இருண்ட காலம் என்றே கூறலாம்.
துணிச்சலுடன் செயல்படும் ஊடகங்கள்:
மோடி மீது இருக்கும் அச்சம் காரணமாக பெரும்பாலான ஊடகங்கள், கோதி மீடியா என பெயர் எடுத்துவிட்ட நிலையில், ஜனநாயகத்தின் முக்கிய தூண் என மனதில் உள்வாங்கிக் கொண்டு, எந்தவித அச்சமும் இல்லாமல் துணிச்சலுடன் சில ஊடகங்கள் பணியாற்றி வருகின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 'தி இந்து ஆங்கில நாளிதழ்' 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ' தி டெலிகிராப்' 'தி வயர்' மற்றும் தமிழில் 'முரசொலி' 'விடுதலை' 'தினகரன்' 'மணிச்சுடர்' 'தீக்கதிர்' போன்ற நாளிதழ்கள் மோடியின் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள், இந்து-முஸ்லிம் வெறுப்பு பேச்சு போன்ற போக்குகளை எதிர்த்து அவ்வப்போது செய்திகள், தகவல்கள், புள்ளிவிவரங்கள், பேட்டிகள் என பிரசுரம் செய்து வருகின்றன. இதன்மூலம் மக்கள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை எடுத்து வைக்கின்றன. இப்படி தயங்காமல் செயல்பட்டதால், ஒன்றிய ஆட்சியாளர்களால் சில ஊடகத் தோழர்கள் சிறைக்கும் செல்ல நேரிட்டது. எனினும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பயந்து விடாமல் சில ஊடகங்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ராகுல் காந்தி விமர்சனம்:
கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய ஊடகங்களில் பெரும்பாலான ஊடகங்கள் மோடி ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டதை கண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை அடைந்துள்ளார். எனவேதான், இத்தகைய மோடி ஆதரவு ஊடகங்களை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஊடகங்கள் மிகவும் தரம் தாழ்ந்து செயல்படுவதை கண்டித்து வருகிறார்.
ஊடகங்களைச் சேர்ந்த சிலர், பிரதமர் மோடி எப்படி பேட்டி எடுக்கிறார்கள், அவர் கூறும் அபத்தமான பதிலை எப்படி புகழ்ந்து எழுகிறார்கள் என ராகுல் காந்தி அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரையும் சிந்திக்க வைத்தது.
மீண்டும் ஊடகச் சுதந்திரம்:
18வது மக்களவைத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைந்து, ஜூன் நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது உறுதி. ஒன்றியத்தில் இந்தியா ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் மீண்டும் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படும். தங்களுடைய ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்றும். இதை, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். எனவே ஜூன் நான்காம் தேதி ஊடகச் சுதந்திர நாள் கொண்டாட ஊடகத் துறையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்களும் தயாராக இருப்போம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment