Friday, May 17, 2024

தலைவர்களின் பிரச்சாரம்....!

மக்களவைத் தேர்தலும், தலைவர்களின் பிரச்சாரமும்....!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்றுவரும் தேர்தல், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 18வது மக்களவைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று, 20 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளிலும் முதல் கட்டத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 88 தொகுதிகளிலும் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளிலும், மே 13 தேதி 96 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி ஐந்தாவது கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர், மே 25ஆம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும், ஜுன் ஒன்றாம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதன்மூலம் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள், வரும் ஜும் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. 

தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம்:

18வது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, நாட்டு மக்களை சந்தித்து வந்தார்கள். தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டப்பிறகு, இந்த பிரச்சாரம் மேலும் வேகம் எடுத்தது. 

தேர்தலுக்கு முன்பாகவே அடுத்த முறை 400 தொகுதிகள் என்ற முழக்கத்துடன் பா.ஜ.க.தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது. இதேபோன்று, காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பை பாதுகாக்க, ஏழை, எளிய மக்களின் உரிமைகளை மீட்க பா.ஜ.க. வீழ்வது அவசியம் என்ற முழக்கத்துடன் தனது தேர்தல் பணியை தொடங்கியது. இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு, அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி, மக்களை சந்திக்க தொடங்கினார்கள். பா.ஜ.க.வின் தோல்வி குறித்து அவர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். இப்போதும் செய்து வருகிறார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடைப்பிடித்த கண்ணியம், பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்ததா என்றால், இல்லை என்பதாகும். 

மோடி, அமித்ஷாவின் பிரச்சார பாணி:

பா.ஜ.க. தலைவர்கள், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இரண்டு பேர், கடந்த இரண்டு மாதங்களாக எப்படி பிரச்சாரம் செய்தார்கள்? அவர்களின் தேர்தல் பிரச்சார பாணி எப்படி இருந்தது? போன்ற கேள்விகளை நாம் எழுப்பினால், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களை மட்டுமல்லாமல் உலகில் உள்ள மக்களையும், வெறுப்பு அடையும் வகையில் இருந்தது என்றே பதில் வருகிறது. 

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பிரச்சாரம் செய்தபோது அந்த மாநிலங்களை உயர்வாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநிலங்களில் தேர்தல் நிறைவு அடைந்தபிறகு, தென் இந்தியா, வட இந்தியா என்ற பாணியில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இதேபோன்று, ஒவ்வொரு கூட்டத்திலும் சிறுபான்மையின முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்தே பிரச்சாரம் செய்து வருகிறார். முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது என குற்றம்சாட்டுகிறார்.  ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவீதம் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் ஒதுக்கியதாக  புகார் தெரிவிக்கிறார். 

தற்போது, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இப்படி பேசி மக்களிடைய மோடி குழப்பத்தை உருவாக்கி வருகிறார். இலவச பேருந்து பயணம் குறித்தும் பிரதமர் மோடி, விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எந்தளவுக்கு பயன் அடைந்து வருகிறார்கள் என்பதும், அவர்கள் பொருளாதார நிலை எப்படி உயர்ந்து வருகிறது என்பதையும்  மறந்துவிட்டு மோடி பேசி வருகிறார். 

இதேபோன்று, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க மாட்டோம் என அமித்ஷா பேசி வருகிறார். போகும் இடமெல்லாம், முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமே குறிவைத்து பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்கள் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனை பணிகள் குறித்து பிரதமரோ, பா.ஜ.க. தலைவர்களோ சொல்வது இல்லை. வேலைவாய்ப்புகள், விலைவாசி குறைப்பு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த திட்டங்கள் ஆகியவை குறித்து பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பிட்டு பேசுவதில்லை. ஆனால், மத ரீதியாக மட்டுமே அவர்களின் பிரச்சாரம் அமைந்து இருக்கிறது. சமூக ஆர்வலர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்து வருகிறது. 

ராகுல், கார்கேவின் பிரச்சார பாணி:

பா.ஜ.க. தலைவர்களின் பிரச்சாரம், வளர்ச்சிப் பணிகள் குறித்து இல்லாமல், மத ரீதியாக, வெறுப்பு அளிக்கும் வகையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் எப்படி இருக்கிறது? என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.  காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்களும், மிகவும் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை, மக்கள் மத்தியில் முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும்போது கூட, அவர்கள் குறித்து கண்ணியம் இல்லாத வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்துவதில்லை. 

இளைஞர்களுக்காக வேலைவாய்ப்புகள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், நாட்டில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்களின் மக்களும் சம வாய்ப்புகளை பெற சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம், நீட் தேர்வு விவகாரம் ஆகியவை மட்டுமே தங்களுடைய பிரச்சாத்தின்போது, ராகுல்  காந்தியுடம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். அத்துடன், ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்யும்போது, அந்த தொகுதி வளர்ச்சி அடைய செய்யப்பட வேண்டிய பணிகள், திட்டங்கள் ஆகியவை குறித்தும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதேபோன்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராட்டீரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், வளர்ச்சிப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள், நாடு அமைதியாக, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து செயல்பட என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள். 

மேலும், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் காக்கப்பட வேண்டும் என்றும், சர்வாதிகார மனப்பான்மை ஒழிய வேண்டும் என்றும், எனவே, இது இரண்டாவது சுதந்திர போராக கருதி மக்கள் தங்களுடைய வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். 

உன்னிப்பாகக் கவனிக்கும் மக்கள்:

மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், நாட்டு மக்கள், குறிப்பாக 97 கோடி வாக்காளர்கள், ஒவ்வொரு தலைவர்களின் பிரச்சாரத்தையும், மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தை பல ஊடகங்கள் மறைத்துவிட்டாலும், தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஒவ்வொரு பிரச்சாரமும் மக்களிடம் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் என்ன பேசுகிறார்கள். நாளுக்கு நாள் தங்களுடைய நிலையை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரம் குறித்தும் நாட்டு மக்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, இரு சமுதாய மக்கள் மத்தியில் வெறுப்பு விதைக்கப்பட்டு, அதை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகள், இளைஞர்கள், மகளிர், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்கள் காக்கப்படவில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும், மிகவும் வேதனையுடன் இருந்து வருகிறார்கள். எனவே, நாட்டிற்கு ஒரு நல்ல விடியல் பிறக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட மக்கள், அதை தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குரிமை மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். அடுத்த மூன்று கட்டத் தேர்தல்களிலும் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை நாட்டின் நலன் கருதி பயன்படுத்துவார்கள் என்பது உறுதி. அதன்மூலம், வரும் ஜுன் நான்காம் தேதி, நல்ல செய்தி நாட்டிற்கு கிடைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு அமைதியான பாதையில் பயணித்து, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி, முன்னேற்றத்தை முன்எப்போதும் இல்லாத வகையில் அடையும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: