Friday, October 10, 2025

காஸாவுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள்.....!

 " வேதனையின் வடுக்களுடன் காஸாவுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள் "

இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், பாலஸ்தீனியர்கள் மீண்டும் வடக்கு காஸாக்குத் திரும்புகின்றனர். ஹமாஸுடனான சமாதான ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ் இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி, பகுதியளவு வடக்கு காஸாவில் இருந்து விலகியதால், பல்லாயிரக்கணக்கான கணக்கில் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், வடக்கு காஸாவில் உள்ள பேரழிவிற்குள்ளான நகரங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

வேதனையின் வடுக்கள் :

கடந்த அக்டோபர், 7 2023 முதல் காஸா மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் ராணுவம், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று அழித்தது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் இஸரேல் கொன்று குவித்தது. காஸா மக்களின் வீடுகளை குண்டுகளைப் போட்டு சீரழித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  வேதனையின் வடுக்களுடன் காஸா மக்கள் வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக வடக்கு காஸாவை விட்டு, தெற்குப் பகுதிக்கு சென்றார்கள். இதனால், சோகமான அனுபவத்தின் நினைவுகளையும், அதனால் ஏற்பட்ட காயங்களையும் அவர்கள் சுமந்துகொண்டே இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். 

போர் காரணமாக காஸா மக்களின் மனதில் ஆழமாக பதிந்த வலியின் அடையாளம் காரணமாக,  மன உளைச்சலின் விளைவுக்கு அவர்கள் ஆளானார்கள்.  கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தின் காரணமாக  உடல் அல்லது மனரீதியான காயங்களை அவர்கள் சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் காஸா மக்களின்  வாழ்க்கையை நீண்ட காலம் பாதிக்கக்கூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. மனதிலிருந்து நீங்காத வேதனையான நினைவுகள், காஸா மக்களை எப்போதும் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தின் சோகமான நிகழ்வுகளால் அவர்களது வாழ்க்கையில் வடுக்கள் ஏற்பட்டுள்ளன.

போர் நிறுத்தம் அமல் :

இஸ்ரேல் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளதால், காஸாவில் மருத்துவ உதவி மற்றும் உணவு விநியோகம் செய்வதற்காக, ரஃபா உட்பட 5 எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் இருந்து வெளியேறி வருகிறது. தற்போது வடக்கு காஸாவில் மெல்ல மெல்ல அமைதி திரும்பிக் கொண்டு இருக்கிறது. எனினும், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் வடுக்குக்கள் இன்னும் மறையவில்லை. 

காஸாவில் பல கட்டடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் நிலைக்குலைந்து கிடக்கின்றன. அழகிய காஸாவின் முகம் தற்போது மிகவும் கோரமாக காட்சி அளிக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் அழகிய காஸாவை கோர முகமாக மாற்றிவிட்டது.  போர் நிறுத்தம் அமலுக்கு வந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் சந்தித்த வலிகள், வேதனைகள், துன்பங்கள் இன்னும் விலகவில்லை. இஸ்ரேல் ராணுவம் விலகி வருவதால், அச்சம் காரணமாக வடக்கு காஸாவில் இருந்து தெற்கு பகுதிக்குச் சென்ற பாலஸ்தீன மக்கள் தற்போது வடக்கு காஸாவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

 காஸாவுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள் :

இஸ்ரேல் ராணுவம் விலகியதைத் தொடர்ந்து வடக்கு காஸாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு இடம்பெயர தொடங்கியுள்ளனர். போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.

மத்திய காஸா பகுதியில் உள்ள ஒரு கடலோர சாலையில், தங்கள் வீடுகளில் என்ன மிச்சமிருக்கும் என்பதைப் பார்க்க வடக்கு நோக்கிச் செல்லும் ஒரு நிலையான மக்கள், பெரும்பாலானோர் கால்நடையாகவே சென்றனர். ஜனவரியில் முந்தைய போர்நிறுத்தத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளின் மறுநிகழ்வு இது. மற்றவர்கள் தெற்கில் உள்ள பாலஸ்தீன பிரதேசத்தின் பிற பகுதிகளுக்குச் சென்றனர்.

எதிர்காலம் குறித்த கவலை மற்றும் அதிர்ச்சியூட்டும் மரணம் மற்றும் அழிவின் நீடித்த வலி ஆகியவற்றால் போர் முடிவுக்கு வரக்கூடும் என்று பாலஸ்தீனியர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர். அதிக மகிழ்ச்சி இல்லை. ஆனால் போர் நிறுத்தம் மரணம் மற்றும் இரத்தக்களரியின் வலியையும், இந்தப் போரில் பாதிக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் சகோதரர்களின் வலியையும் ஓரளவு குறைத்தது என்று வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து திரும்பி வரத் திட்டமிட்டுள்ள ஜமால் மெஸ்பா கூறினார்.

காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில், இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேறிய பிறகு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்கள், இடிபாடுகள் மற்றும் அழிவைக் கண்டனர். எதுவும் மிச்சமில்லை. ஒரு சில துணிகள், மரத் துண்டுகள் மற்றும் பானைகள் மட்டுமே என்று கான் யூனிஸிடமிருந்து இடம்பெயர்ந்த ஃபத்மா ரத்வான் கூறினார். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை மீட்டெடுக்க மக்கள் இன்னும் முயன்று கொண்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

அடையாளம் காண முடியாத நகரம் :

பல கட்டடங்கள் தரைமட்டமாகின. அங்கு எதுவும் கிடைக்கவில்லை. சேதம் அடைந்த கட்டங்களுக்கு மக்கள் தங்கள் உடைமைகளைத் தேட திரும்பிச் சென்றனர். நாங்கள் அடையாளம் காண முடியாத இடத்திற்கு வந்தோம். அடையாளம் காண முடியாத நகரம். எல்லா இடங்களிலும் அழிவு உள்ளது என்று கான் யூனிஸிடமிருந்து இடம்பெயர்ந்த ஹனி ஓம்ரான் கூறினார். வடக்கு காஸா முழுவதும் இதே நிலைமை இருந்து வருகிறது.  இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில், காஸாவில் ஆயிரக்கணக்கான  பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். காஸா நகரம் தற்போது அடையாளம் காண முடியாத நகரமாக மாறிவிட்டது. சொந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள், தங்களுடைய வீடுகளை அடையாளம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

வடக்கு காஸாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த பூமியில் அடையாளம் தெரியாத வீடுகளில் வாழ வேண்டிய ஒரு துயரமான நிலைக்கு பாலஸ்தீன மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 75 ஆண்டுகளாக சொந்த பூமியில் பாலஸ்தீன மக்கள் சந்தித்துக் கொண்டு இருக்கும் வேதனைகளுக்கும் வலிகளுக்கும் எப்போது தீர்வு கிடைக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: