பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் :
மெகா கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு....!
தேஜஸ்வி யாதவிற்கு பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி கடிதம்.!
புதுடெல்லி, அக்.09- அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிடீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள மெகா கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை வழங்கும் என பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் :
243 தொகுதிகளைக் கொண்டு பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்குல் வெள்ளிக்கிழமை 10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம் முறைக்கேடுகளை தடுக்க 800க்கும் மேற்பட்ட சிறப்பு பறக்கும் படைகளை பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மெகா கூட்டணிக்கு ஆதரவு :
இந்நிலையில், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இணைந்துள்ளன. பல்வேறு முறைகேடுகள் மூலம் ஆட்சியை கைப்பற்றும் பாஜக கூட்டணியை வீழ்த்தும் வகையில் வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்கும் வகையில் மெகா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி, மெகா கூட்டணி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, இந்தியா கூட்டணி கட்சிகள் மெகா கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளன.
குஞ்ஞாலிக்குட்டி கடிதம் :
அந்த வகையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பீகார் தேர்தல் குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முழுமையாக ஆலோசனை செய்து, மெகா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மிகவும் நெருக்கடியான நேரத்தில் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும். சமூக நீதி நிலை நாட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும், பீகாரில் தற்போது நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நல்ல முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக குஞ்ஞாலிக்குட்டி கூறியுள்ளார். அனைத்து தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் மெகா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா கட்சிகளுடன் தோளோடு தோள் இணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயணிக்கும் என்றும் கூறியுள்ள குஞ்ஞாலிக்குட்டி, இந்தியா கூட்டணியில் ஒரு குடையின் கீழ் இணைந்துள்ள இ.யூ.முஸ்லிம் லீக், மெகா கூட்டணியுடனும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
நிபந்தனையற்ற ஆதரவு :
பீகார் தேர்தலில் மெகா கூட்டணிக்கு எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், நிபந்தனையற்ற ஆதரவை இ.யூ.முஸ்லிம் லீக் வழங்கும் என்றும் தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு எப்படி ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோன்று ஆதரவு பீகாரிலும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பீகாரில் மதசார்பற்ற அரசு அமைய இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்றும், இதன்மூலம் சமூக நீதி மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்க இ.யூ.முஸ்லிம் லீக் துணை நிற்கும் என்றும் குஞ்ஞாலிக்குட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பீகார் நிலைமை குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்துவரும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை, ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு பேரும் ஆற்றிவரும் பணிகளையும் பாராட்டுவதாகவும் இதன்மூலம் பீகாரில் மதசார்பற்ற அரசு அமைய வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், மெகா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்றுவார்கள் என்றும், இதன்மூலம் மாநிலத்தில் விரைவில் மதசார்பற்ற அரசு அமைவதை காண முடியும் என்றும் குஞ்ஞாலிக்குட்டி கூறியுள்ளார். இதன்மூலம் பீகாரில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பலன் அளிக்கும் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment