" உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை "
- சவூதி பல்கலைக்கழகம் 250 இடங்கள் முன்னேறி சாதனை -
உலக அளவில் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் கவரும் வகையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா இருந்து வருகிறது. நவீன விஞ்ஞான யுகத்திற்கு ஏற்ப, கல்வி, அறிவியல், பொருளாதாரம், சுற்றுலா என அனைத்துத் துறைகளிலும் சவூதி அரேபியாவின் வளர்ச்சி விண்ணை தொடும் அளவுக்கு இருந்து வருகிறது. பல இஸ்லாமிய நாடுகள் கூட எதிர்பார்க்காத வகையில், சவூதி அரேபியாவின் முன்னேற்றம் இருப்பது அதனுடைய வளர்ச்சிப் பணிகள் மூலம் மிகவும் தெளிவாக தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டின் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவூதி அரேபியா, அந்த தொழிலாளர்களின் நலனினும் அக்கறை செலுத்தி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. சுற்றுலாத் துறையில் சவூதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல வளர்ச்சிப் பணிகள் மூலம், அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் இருந்து புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை செய்ய வரும் முஸ்லிம்களின் வசதிக்காக, சவூதி அரசு செய்துவரும் ஒவ்வொரு பணிகளும் வியப்பு அடையும் வகையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக எந்தவித சிரமமும் புனித கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நல்ல சூழல் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் சாதனை :
இத்தகைய சூழ்நிலையில், கல்வித்துறையில் சவூதி அரேபியாவின் ஒவ்வொரு சாதனைகளும் வியப்பு அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. சவூதி அரேபியாவில் அரசாங்க செலவினங்களில் கல்வி இரண்டாவது பெரிய துறையாகும். சவூதி அரேபியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 புள்ளி 8 சதவீதம் கல்விக்காக செலவிடுகிறது. இது உலக சராசரியான 4 புள்ளி 6 சதவீதத்தை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். சவூதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு. எனவே இஸ்லாம் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், கல்வியிலும் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சவூதி அரேபியா தனது கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் பள்ளி வருகையை உறுதிப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களின் வருகைப் பதிவு தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படும். பள்ளிக்கு வராத நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மூன்று நிலை எச்சரிக்கைகள் வழங்கப்படும்.மாணவர்களின் வருகைக்கு பெற்றோரே முழுப் பொறுப்பு. தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை வரை விதிக்கப்படலாம் என்பன உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தொடர்ச்சியான கல்வி பெறுவதன் அவசியத்தை சமூகத்திற்கு உணர்த்துதல். குழந்தைகளின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பை ஊக்குவித்தல். பள்ளி இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல். கல்வியின் மூலம் சமூக-பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகிய அம்சங்கள் மூலம் சவூதி அரேபியா தற்போது கல்வித்துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. உலகின் பல நாடுகளில் கல்வியை மேம்படுத்த பல்வேறு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. எனினும், சவூதி அரேபியாவின் இந்த அணுகுமுறை மிகவும் கடுமையானதாக இருந்தாலும், கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அந்நாட்டு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகம் :
இப்படி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்ததன் மூலம், சவூதி அரேபியாவில் கல்வி குறித்து மிகப்பெரிய அளவுக்குவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் சவூதி பல்கலைக்கழகங்கள் சாதனை புரிந்து வருகின்ற்ன. அந்த வகையில் சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சத்தாம் பின் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகம் 2026 டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னேறியுள்ளது. அதாவது 601-800 வரம்பிலிருந்து 250க்கும் மேற்பட்ட இடங்களை கடந்த 401-500க்கு தனது தரவரிசையை நகர்த்தியுள்ளது. இது கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உலக கல்வி உச்சி மாநாட்டில் இந்த முன்னேற்றம் அறிவிக்கப்பட்டது.
தகுதிவாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பது, ஆராய்ச்சி வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் தரம் சார்ந்த முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் பல்கலைக்கழகம் கவனம் செலுத்துவதே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சிறப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூரில் இந்த பல்கலைக்கழகம், சவூதி பல்கலைக்கழகங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னணி நிறுவனமாக அதன் பங்கை வலுப்படுத்துகிறது.
கல்வித்துறையில் அதிக முதலீடு :
கல்வித்துறையில் சவூதி நிகழ்த்தி வரும் சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள சவூதி அரேபியாவின் கல்வி விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மேஷாரி அல்-ஒசைமி, "கல்வித் திறமை மற்றும் ஆராய்ச்சி வசதிகளில் எங்கள் முதலீடுகளையும், பல்கலைக்கழகத்தின் நற்பெயரை மேம்படுத்திய முயற்சிகளையும் இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கிறது"என்று பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் "தேசிய அளவில், சவூதி பல்கலைக்கழகங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இந்தப் பல்கலைக்கழகம், முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக அதன் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று அல்-ஒசைமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான விஷன் 2030 இன் இலக்கிற்கு இணங்க, தரமான கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை சவூதி அரேபியாவின் சாதனை பிரதிபலிக்கிறது என்று உறுதியாக கூறலாம். தங்கள் நாட்டு குடிமக்களின் கல்விக்காக சவூதி அரேபியா அரசு செய்து வரும் முதலீடுகள் மற்றும் ஆற்றிவரும் பணிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது. இதன்மூலம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இஸ்லாம் சொல்லும் போதனைகளை, அறிவுரைகளை சவூதி அரசு தற்போது உறுதியாக கடைப்பிடித்து, அதனை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment