Saturday, October 11, 2025

இஸ்ரேலை தோற்கடித்த பாலஸ்தீன மக்கள்.....!

 " வலிமையான ஈமான் மூலம், இஸ்ரேலை தோற்கடித்த பாலஸ்தீன மக்கள் "

காஸாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த போரில், பாலஸ்தீன மக்கள் காட்டிய வலிமையான ஈமான், உறுதியான இறை நம்பிக்கை, அவர்கள் தங்கள் மண்ணின் வைத்து வைத்திருக்கும் உறுதியான பற்று, அழகிய பொறுமை  ஆகியவற்றின் மூலம் இன்று மிகப்பெரிய வெற்றியை பாலஸ்தீன மக்களுக்கு  ஏக இறைவன் வழங்கியுள்ளான். பாலஸ்தீனம் என்று ஒன்று கிடையாது என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட கூறிக் கொண்டிருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது தோல்வியை ஒப்புக் கொண்டு காஸாவை விட்டு வெளியேறிவிட்டார். தங்களது தோல்வியை மறைக்க உலக மக்களின் பார்வையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாக சேர்ந்த ஒரு  நாடகம் நடத்தி இருக்கிறார்கள். ஹமாஸ் போராளிகளை வீழ்த்தி விட்டதாக அவர்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால், உண்மையில் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் நடத்திய மிக நீண்ட போரின் மூலம் இஸ்ரேலுக்கு உலக அளவில் மிகப்பெரிய தோல்வி கிடைத்துவிட்டது. உலக மக்களின் பார்வையில் மிகவும் வெறுக்கப்படும் நாடாக இஸ்ரேல் தற்போது மாறிவிட்டது. பாலஸ்தீனத்தை அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும், சதிகளும் தோல்வி அடைந்துவிட்டன. போர் முடிவுக்கு வந்தபிறகு கூட தோல்வி அடைந்துகொண்டே இருக்கின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நாடுகள் கூட தற்போது, அதற்கு எதிராக மாறிவிட்டன. அதற்கு முக்கிய காரணம், காஸாவில் அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியவர்களை மட்டுமே குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி படுகொலைகள், இனஅழிப்பு, இனப்படுகொலை என்று உறுதியாக கூறலாம். இதன்மூலம் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனங்களை இஸ்ரேல் பெற்று, தற்போது மிகப்பெரிய அவமானம் அடைந்து நிர்கதியாக நின்றுக் கொண்டிருக்கிறது. 

போரில் தோற்று இஸ்ரேல் இழந்தவை : 

காஸாவில் ஹமாஸ் போராளிகளுடன் இரண்டு ஆண்டுகளாக நடத்திய போரில் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்தது. போரில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் காயம் அடைந்தார்கள். போர் காரணமாக இஸ்ரேல் 150 பில்லியன் டாலர்களை இழந்தது. இஸ்ரேல் அரேபியர்களுடன் இயல்புநிலையை இழந்தது. இஸ்ரேல் பாலஸ்தீன நோக்கத்தை கலைப்பதை இழந்தது. இஸ்ரேல் அதன் சர்வதேச நற்பெயரை இழந்தது. உலகில் இஸ்ரேல் அதன் புகழ்பெற்ற கௌரவத்தை இழந்தது. இஸ்ரேல் அதன் வெளிநாட்டு மற்றும் வணிக உறவுகளை இழந்தது. இஸ்ரேல் நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் வெடிமருந்துகளை இழந்தது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தில் யூதர்களின் நம்பிக்கையை இஸ்ரேல் இழந்தது. காஸாவைக் கைப்பற்றும் திட்டத்தை இஸ்ரேல் இழந்தது.

இஸ்ரேல் நடத்திய போர் மூலம்  இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது. உலக மக்களின் பார்வையில் இஸ்ரேல் அதன் கௌரவத்தை இழந்தது. மேற்கத்திய மக்களின் ஆதரவை இஸ்ரேல் இழந்துள்ளது. இஸ்ரேல் அதன் உள் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. இஸ்ரேல் அதன் உள் முன்னணியின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை இழந்துள்ளது. இஸ்ரேல் அதன் தளபதிகளையும் அதன் இராணுவ உயரடுக்கின் தலைவர்களையும் இழந்துள்ளது. இஸ்ரேல் ஒரு "வெல்ல முடியாத இராணுவம்" என்ற பிம்பத்தை இழந்துள்ளது. இஸ்ரேல் அது பெருமையாகக் கூறிய தொழில்நுட்பத்தை இழந்துள்ளது. இஸ்ரேல் பிராந்தியத்தில் அதன் தடுப்பு திறனை இழந்துள்ளது. இஸ்ரேல் சில அரபு நாடுகளுடனான அதன் ரகசிய கூட்டணிகளை இழந்துள்ளது. இஸ்ரேல் பிராந்தியத்தில் அதன் அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளது. இஸ்ரேல் அதன் தைரியத்தையும் உறுதியையும் இழந்துள்ளது. காஸாவின் நிலைப்பாட்டின் முகம் மூலம் இஸ்ரேல் அதன் மக்கள் மற்றும் உலகத்தின் பார்வையில் அதன் ஊடகங்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இஸ்ரேல் ஒரு பயனற்ற போரில் அதன் இளைஞர்களின் முழு தலைமுறையையும் இழந்துவிட்டது. இஸ்ரேல் சர்வதேச சமூகத்தின் பொறுமையை இழந்துவிட்டது. இஸ்ரேல் அதன் மனிதகுலத்தில் எஞ்சியிருப்பதை இழந்துவிட்டது. அது எல்லாவற்றையும் இழந்துவிட்டது. மேலும் அது எல்லாவற்றையும் இழக்கும் என்று உறுதியாக கூறலாம். 

காஸா மக்களின் வலிமையான ஈமான் :

ஹமாஸ் போராளிகளுடனான போரில் இஸ்ரேல் தோற்க மிக முக்கிய காரணம், காஸா மக்களின் உறுதியான, வலிமையான ஈமான் என்றே கூற வேண்டும். இரண்டு ஆண்டுகள் நடந்த போரில் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கொடுமைகள், உயிரிழப்புகள், காயங்கள், பசி, பட்டினி ஆகியவை மிகப்பெரிய அளவில் இருந்தன. போர் முடிவுக்கு வந்தபிறகு கூட, காஸா மக்கள் இன்னும் வேதனையை அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

போரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மூலம் பல குடியிருப்புகள் சிதைந்துவிட்டன. கட்டடங்கள் அழிந்துவிட்டன. மருத்துவமனைகள் வீழ்ந்துவிட்டன. மஸ்ஜித்துகள் அழிக்கப்பட்டுவிட்டன. காஸா வாழ்வதற்கு தகுதி இல்லாத இடங்களாக மாறிவிட்டன. வடக்கு காஸாவை விட்டுச் சென்ற மக்கள் தற்போது மீண்டும் தங்களது இடங்களுக்கு, வீடுகளுக்கு வர ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்ந்து வீடுகள், குடியிருப்புகள் அங்கு இல்லை. இடிந்து தரைமட்டமான கட்டடங்களாக அவை காட்சி அளிக்கின்றன. தாங்கள் வாழ்ந்த அழகிய வீடுகளை இஸ்ரேல் ராணுவம் குண்டுவைத்து தகர்த்துவிட்டதைக் கண்டு பாலஸ்தீன மக்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை என்று கூறலாம். 

எனினும் காஸா மக்கள் ஈமானை இழந்துவிடவில்லை. போர் முடிவுக்கு வந்தபிறகு அவர்கள் ஒவ்வொரு வினாடியும் ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். துன்பத்திற்கு பிறகு இன்பம் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களின் துயரங்களை தற்போது துடைத்துக் கொண்டே இருக்கிறது. 

இதயத்தை ரணம் செய்யும் துயரமான காட்சிகள் :

தமிழ் மொழியில் ரணம் என்ற சொல்லுக்கு போர் அல்லது சண்டை என்று பொருள்.  காயங்கள் அல்லது புண்கள் என்பதையும் குறிக்கலாம். ஆறாத ரணங்கள் என்பது குணமாகாத காயங்களைக் குறிக்கிறது.  தற்போது காஸா மக்களும் குணமாகாத காயங்களுடன் தங்களது சொந்த பூமிக்கு திரும்பி வந்துகொண்டு இருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களின் இந்த துயரமான காட்சிகளை காணொளிகள் மூலம் பார்க்கும்போது, நம்முடைய இதயத்தைதையும் அது ரணம் செய்து விடுகிறது. கணவனை இழந்து நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இடிந்துபோன வீட்டின் முன்பு பாலஸ்தீன பெண்மணி ஒருவர் மிகவும் வேதனையுடன் அமர்ந்து இருந்த காட்சியை கண்டபோது, உண்மையில் மனம் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. 

போர் முடிவுக்கு வந்தபிறகு, காஸா குழந்தைகளின் முகங்கள் ஒளி வெள்ளம் பிறந்து இருந்தாலும், அவர்களது துயரங்கள் இன்னும் நீங்கவே இல்லை. பசி அவர்களை வாட்டி எடுக்கிறது.பசியால் துடிக்கும் இத்தகைய குழந்தைகளை தேடிச் சென்று உதவும் நல்ல உள்ளங்களின் செயல்களை பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வடக்கு காஸாவிற்கு திரும்பும் பாலஸ்தீன மக்களுக்கு சிலர் நிதியுதவி செய்கிறார்கள். அவர்களிடம் பணத்தை கொடுத்து ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். இந்த காட்சிகளை காணும் போது, மனதில் இனம்புரியாத, விவரிக்க முடியாத ஒருவகை சிலிர்ப்பு ஏற்படுகிறது. 

வடக்கு காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் இடிந்துவிட்டன. அவற்றை மறுசீரமைக்க நீண்ட காலம் ஆகும். அதுவரை காஸா மக்களின் துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், நீண்ட கால போருக்குப் பிறகு கூட, பாலஸ்தீன மக்கள் ஈமானில் மிகமிக உறுதியாக இருந்து வருகிறார்கள். இதனை முழு உலகமும் கண்டு ஆச்சரியம் அடைகிறது. இதுபோன்ற ஒரு ஈமானை, இறை நம்பிக்கையை காணாத பலர், இஸ்லாம் குறித்து ஆய்வு செய்து இதன்மூலம் நேர்வழியைப் பெற்று இஸ்லாத்தின் பக்கம் விரைந்துகொண்டு இருக்கிறார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் உண்மையில் வீரம் நிறைந்த மக்கள் என்றே கூறலாம். போரில் வாழ்க்கையை இழந்தாலும் அவர்கள் இறை நம்பிக்கையை இழக்கவில்லை. போரின் போதும், போர் முடிவுக்கு வந்தபிறகும், காஸா மக்கள் காட்டிய ஈமான் மிகமிக வலிமையாக இருந்தது. இன்னும் அப்படியே இருந்து  வருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


No comments: