Thursday, October 9, 2025

காஸாவில் பிறந்த அமைதி ஒளி....!

 " இரண்டு வருட துயரங்களுக்குப் பிறகு பிறந்த அமைதி ஒளி "

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, அக்டோபர் 9, 2025 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தை காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டு வருட பேரழிவு மோதலுக்குப் பிறகு பல குடியிருப்பாளர்களுக்கு இந்தச் செய்தி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்தது. கான் யூனிஸ் மற்றும் நுசைரத் அகதிகள் முகாம் போன்ற பகுதிகளில், குடியிருப்பாளர்கள் வீதிகளில் இறங்கி கோஷங்கள், பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெய்ர் அல்-பலாவில் உள்ள முகாம்களில் இடம்பெயர்ந்தவர்கள் போர் நிறுத்தத்தை ஒரு நிவாரணமாக விவரித்தனர். இது நீண்ட கால இடப்பெயர்ச்சி மற்றும் அழிவுக்குப் பிறகு அவர்களுக்கு தற்காலிக அமைதி உணர்வைத் தந்தது. இருப்பினும் சிலர் எதிர்காலம் குறித்து எச்சரிக்கையாகவும் நிச்சயமற்றவர்களாகவும் உள்ளனர்.

காஸாவில் இரண்டு வருட துயரங்கள் :

காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதல்கள் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. இஸ்ரேலிய ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். ஆகியோரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. 

இந்த தாக்குதல்கள் காரணமாக காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் சந்தித்த துயரங்கள், துன்பங்கள், கொடுமைகள், பசி, தாகம், பட்டினி, நோய், வேதனை ஆகியவற்றை சொல்ல வார்த்தைகளே இல்லை. அழகிய காஸாவில் வாழும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் நாள்தோறும் துயரங்களை, துன்பங்களை சந்தித்துக் கொண்டே இருந்தார்கள். இப்படி பல்வேறு கொடூமைகளை இஸ்ரேல் ராணுவம் மூலம் அவர்கள் சந்தித்தபோதும், அழகிய பொறுமையை ஒருபோதும் கைவிடவில்லை. ஏக இறைவன் மீதான நம்பிக்கையை, ஈமானை இழக்கவில்லை. 

தங்களது சொந்த மண்ணை காக்க அவர்கள் போராடிக் கொண்டே இருந்தார்கள். பொறுமையுடன் ஏக இறைவனிடம் கையேந்திக் கொண்டே இருந்தார்கள். நாள்தோறும் தொழுகைகளில் அழுது பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார்கள். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு முடிவு எட்டப்பட்ட வேண்டும் என கண்ணீர் விட்டு அழுது, அவர்கள் துஆ கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பாலஸ்தீன மக்களின் இந்த பொறுமை உலக மக்களை மிகவும் வியப்பு அடையச் செய்தது. இரண்டு வருடங்கள் பாலஸ்தீன மக்கள் சந்தித்து வரும் துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் ஆகியவற்றைக் கண்டு, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள், இஸ்லாம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினார்கள். இத்தகைய அழகிய பொறுமை பாலஸ்தீன மக்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். அந்த தேடலின் மூலம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள், இஸ்லாத்தை தழுவினார்கள். 

இஸ்ரேலுக்கு எதிராக திரண்ட உலகம் :

இஸ்ரேல் மூலம் துயரங்கள், துன்பங்கள், கொடுமைகள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் பாலஸ்தீன மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. போர்க்களத்தில் அவர்கள் நாள்தோறும் சந்தித்த துன்பங்களை காணொளி காட்சி மூலம் கண்ட உலக மக்கள் மிகவும் வேதனை அடைந்தார்கள். காஸா மக்களுக்கு ஆதரவாக முழு உலகமும் திரண்டு நின்றது. இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டாகள். உலக தலைவர்கள் மட்டுமல்லாமல், மக்களும் பெஞ்சமின் நெதன்யாகுவை வெறுக்க ஆரம்பித்தார்கள். இப்படி நிலைமை இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியதால் வேறு வழியில்லாமல் தற்போது இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன்  போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொண்டுள்ளது. 

தொடர்ந்து ஈரான், ஏமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்திய காரணத்தால் இஸ்ரேல், தற்போது தனது பொருளாதார நிலையில் மிகவும் மோசம் அடைந்துள்ளது. அந்நாட்டு மக்கள் கூட, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெறுக்க ஆரம்பித்தார்கள். காஸா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்படி நிலைமை மோசம் அடைந்துகொண்டே செல்வதால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இதை ஹமாஸ் போராளிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக வியாழன்கிழமை 09.10.2025 அன்று முதல் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேலிய ராணுவம் நிறுத்திவிட்டது. 

காஸா மக்களின் விவரிக்க முடியாத மகிழ்ச்சி :

காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, போர் நிறுத்தம் குறித்த தகவல்கள் வெளியானதும், காஸாவில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள் தென்பட்டன. காஸா மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். காஸாவில் உள்ளவர்கள் இந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாதது என்று அழைத்தனர். போரின் போது அவர்கள் அனுபவித்த நிலைமைகள் மற்றும் இழப்பு மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்று காஸா மக்கள் பிரார்த்தனை செய்தனர்.  போர் நிறுத்தம் அவர்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அழிக்கப்பட்ட தங்கள் வீடுகளையும் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவதற்கும் ஒரு முதல் படியாக இருக்கும் என்று காஸா மக்களின் பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.

நீண்டகால சோகத்திற்குப் பிறகு, சிலர் போர் நிறுத்தத்திற்காக மகிழ்ச்சியின் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனால் தாங்கள் இழந்த பல அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். எனினும் சில குடியிருப்பாளர்கள் சந்தேகத்துடன் இருந்தனர். போர் நிறுத்தம் தற்காலிகமாகவோ, முழுமையடையாததாகவோ அல்லது கடந்த காலத்தில் நடந்தது போல இஸ்ரேலால் இறுதியில் மீறப்பட்டதாகவோ இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சினர். போர் நிறுத்தத்திற்கு அடுத்த நாள், இடம்பெயர்ந்த ஒருவர், தாங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், வாழ்க்கை இன்னும் மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு என்று குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்தம் எட்டப்படுவதற்கு முன்பு, ஹமாஸ் நிர்வாகத்திற்கும் போருக்கும் எதிராக பல போராட்டங்கள் காஸா முழுவதும் நடந்தன. இது மக்களில் சிலரிடையே ஆழ்ந்த விரக்தியை வெளிப்படுத்தியது. மார்ச் 2025 இல் தொடங்கி பல மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், போரை தூண்டியதற்காகவும், பொதுமக்களின் தொடர்ச்சியான துன்பங்களுக்காகவும் ஹமாஸுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. எனினும் தற்போது ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காஸா மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் 09.10.2025 அன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இனி, காஸா மக்களின் வாழ்க்கையில் எப்போது அமைதி நீடிக்க வேண்டும். அவர்களின் அமைதி ஒளி நீடித்து நிலைக்க வேண்டும். காஸா மக்களின் துயரங்களில் பங்கேற்ற உலக மக்கள் அனைவரும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றே கூற வேண்டும். உலக மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தான் இந்த போர் முடிவுக்கு வந்து இருக்கிறது என்பதும் உண்மையாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: