" மக்காவில் பிரமாண்டமாக உருவாகும் கிங் சல்மான் நுழைவாயில் "
உலக இஸ்லாமியர்களின் புனித நகரமாக இருக்கும் மக்காவில், சவூதி அரேபிய அரசு செய்துவரும் வளர்ச்சிப் பணிகள் இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் வியக்கும் வகையில் இருந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கா நகருக்குச் சென்று வந்த முஸ்லிம் யாத்ரீகர்கள், தற்போது அந்த நகருக்கு மீண்டும் சென்றால் நிச்சயம் மிகவும் ஆச்சரியம் அடைவார்கள். வியந்து போவார்கள். இதுபோன்ற ஒரு முன்னேற்றப் பணிகளை தாங்கள் வந்தபோது இல்லாமல் இருந்ததால், அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய புனிதப் பயணங்களின்போது ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தார்கள். அவை அனைத்து ஏக இறைவனின் இல்லத்தை காண வேண்டும்., புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இருந்தன. எனவே, சிரமங்களை அவர்கள் கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, அலட்சியம் செய்து புனித கடமைகளை உள்ளத்தில் பிறந்த மகிழ்ச்சியுடன் செய்தார்கள்.
தற்போது மக்கா மற்றும் மதீனா நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மூலம், புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் முஸ்லிம் பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எந்தவித சிரமங்களையும் சந்திக்காமல், தங்களுடைய கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதற்காக ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தும் முஸ்லிம்கள், புனிதப் பயணம் மேற்கொள்ளும் உலக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் சிறப்பான முறையில் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், சவூதி அரேபிய அரசு இதுவரை செய்த மற்றும் தற்போது செய்துவரும் வளர்ச்சிப் பணிகளையும் பாராட்டாமல் இருப்பதில்லை.
கிங் சல்மான் நுழைவாயில் :
இந்த வளர்ச்சிப் பணிகளின் ஒரு சிறப்பு அம்சமாக, மக்காவில் பிரமாண்டமாக கிங் சல்மான் நுழைவாயிலை உருவாக்கும் திட்டத்தை சவூதி அரேபிய அரசு முன்னெடுத்துள்ளது. மக்காவில் உள்ள கலப்பு பயன்பாட்டு இடமான "கிங் சல்மான் கேட்" திட்டத்தைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீபுக்கு அருகில் கிங் சல்மான் கேட் (நுழைவாயில்) திட்டத்தை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கி வைத்துள்ளார்.
12 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த கிங் சல்மான் கேட், மக்காவின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மற்றும் நிலப்பரப்பை, குறிப்பாக அதன் மையப் பகுதியை நிலையான நகர்ப்புற வளர்ச்சியின் உலகளாவிய மாதிரியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கான சேவைகளை மேலும் சிறந்த முறையில் மேம்படுத்தவும், அவர்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார பயணங்களை வளப்படுத்தவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சவூதி விஷன் 2030 இன் கீழ் யாத்ரீக அனுபவத் திட்டத்தின் நோக்கங்களுடன் இந்த பிரமாண்ட திட்டம் ஒத்துப்போகவும் முயல்கிறது.
பல சுவையான தகவல்கள் :
மக்காவின் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீபுக்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிங் சல்மான் கேட், புனித மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு, கலாச்சார மற்றும் சேவை வசதிகளை வழங்கும். அதன் உட்புற மற்றும் வெளிப்புற பிரார்த்தனைப் பகுதிகளில் சுமார் 9 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்று தொழுகையை நிறைவேற்றும் வகையில் திட்டம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீபை அணுகுவதை எளிதாக்குவதற்காக இந்த மேம்பாடு பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும். இது மக்காவின் வளமான கட்டடக்கலை பாரம்பரியத்தை நவீன நகர்ப்புற வடிவமைப்புடன் இணைத்து, நகரத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில் வசதியை உறுதி செய்கிறது.
இஸ்லாமிய பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தோராயமாக 19 ஆயிரம் சதுர மீட்டர் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மண்டலங்கள் மறுசீரமைக்கப்படும். 2036 ஆம் ஆண்டுக்குள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார பன்முகத்தன்மைக்கு பங்களிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கிங் சல்மான் கேட் திட்டத்தை பொது முதலீட்டு நிதியத்தின் துணை நிறுவனமான ரூவா அல்-ஹராம் அல்-மக்கி நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீபைச் சுற்றியுள்ள நகர்ப்புற மேம்பாட்டுத் தரங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுக்கிறது. உலகளாவிய ரியல் எஸ்டேட் மற்றும் நிலைத்தன்மை தரநிலைகளை கடைபிடிக்கும் அதேவேளையில், குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிலையான வள மேலாண்மை மற்றும் புதுமையான மேம்பாட்டுத் தீர்வுகளில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
அற்புதமான கிங் சல்மான் நுழைவாயில் திட்டம் :
மக்காவின் மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீபுக்கு அருகில் மிகவும் பிரமாண்ட முறையில் உருவாக்கப்படும் கிங் சல்மான் கேட் திட்டம், ஒரு அற்புதமான திட்டம் என்று இப்போதே நிச்சயமாக கூறலாம். அதற்கு காரணம், இனி வரும் காலங்களில் புனித யாத்திரைக்காக மக்கா செல்லும் முஸ்லிம்கள், அழகிய முறையில் தங்களுடைய இபாதத்களை செய்ய முடியும். தங்களுடைய முழு கவனத்தையும் இறைவனின் பக்கம் திருப்பி, அதன்மூலம் உள்ளதை அமைதியாக கொள்ள வைக்க முடியும். மன அமைதி கிடைப்பதன் மூலம், புனித பயணம் செல்லும் அவர்களின் வாழ்க்கையில் இனம்புரியாத ஒருவித மகிழ்ச்சி, ஆனந்தம் நிச்சயம் உருவாக்கும். இப்படி கிடைக்கும் மகிழ்ச்சி மூலம், அவர்களுடைய வாழ்க்கையில் எப்போது ஏக இறைச் சிந்தனை குடிபுகுந்து கொண்டு நிலைத்து இருக்கும்.
இந்த பிரமாண்ட திட்டத்தின்படி பாரம்பரியம் மற்றும் கலாச்சார மண்டலங்கள் மறுசீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுத் தகவல்களையும் புனித ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும். புனித இஸ்லாம் மனித இனத்தை தூய்மைப்படுத்தி, அழகிய, அமைதியான வாழ்க்கையை தர ஏக இறைவனால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மார்க்கம் என்பதை முஸ்லிம்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். அதன்மூலம் தாவாப் பணிகளை அதாவது, அழைப்புப் பணிகளை செய்ய மனம் தூண்டும். உள்ளத்தில் ஆவல் பிறக்கும். அதன்மூலம் திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய போதனைகளை தாங்களும் அறிந்து, மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்க, நேர்வழியில் செல்ல அழகிய அழைப்புப் பணிகளை செய்ய முஸ்லிம்களுக்கு வாய்ப்புகள் பிறக்கும். உலக மக்கள் மத்தியில் அனைவரையும் அரவணத்தைக் கொண்டு, சகோதர நேசத்துடன் வாழ உள்ளத்தில் ஒளி பிறக்கும். இந்த அழகிய ஒளி முஸ்லிம்களை மட்டுமல்லாமல், மற்றவர்களின் மத்தியிலும் பிரகாசமாக பரவும். அதற்கு மக்காவில் பிரமாண்டமாக உருவாகும் கிங் சல்மான் கேட் (நுழைவாயில்) முக்கிய அடித்தளம் போட்டுக் கொடுக்கும் என்று உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment