Tuesday, May 14, 2024

உறவுகளை வலுப்படுத்தும் நேரம் இது...!

குடும்பங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நேரம் இது...!

மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அழகிய குடும்பம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குடும்பங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் மத்தியிலும் நல்ல உறவுகள் நீடிக்கும்போது, அந்த குடும்பமே சிறந்த, நல்ல குடும்பம் என உறுதியாக கூற முடியும். கூட்டுக் குடும்பம் என்ற நிலை தற்போது மாறி, மனிதன் தனித்தனியாக வாழ ஆரம்பித்துவிட்டான். இதன்மூலம், உறவுகள் மெல்ல மெல்ல சிதைந்து வருகின்றன. ஆண்டிற்கு ஒருமுறை பண்டிகை நாட்களில் மட்டும், உறவினர்களை சந்திக்கும் நிலைக்கு மனிதன் தற்போது தள்ளப்பட்டுள்ளான். 

குடும்பங்களில் உறவுகள் சிதைக்கப்படுவதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பை சந்திக்கிறான் என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை தற்போது நவீன உலகம் பல்வேறு சம்பவங்கள் மூலம் அறிந்துகொண்ட வருகிறது.  இத்தகையை சூழ்நிலையில், குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் உணர வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தில், கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், மே 15ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை சார்பில், சர்வதேச குடும்பத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளை அங்கீகரிப்பதற்கான பயணம் கடந்த 1980-களில் தொடங்கியது. ஐக்கிய நாடுகள் சபை குடும்பங்களின் வளர்ச்சியடைந்த கட்டமைப்பு மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்களில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1989-வாக்கில், ஐ.நா.பொதுச் சபை அந்த ஆண்டை, குடும்பத்தின் சர்வதேச ஆண்டாக அறிவித்தது.  இது 1992-இல் சர்வதேச குடும்ப தினத்தை நிறுவ வழிவகுத்தது.

சிதைக்கப்படும் உறவுகள்:

உலகம் அனைத்துத் துறைகளிலும்  மிக வேகமாக முன்னேறி வரும் இந்த நவீன யுகத்தில், மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தற்போது தொடர்ந்து கொண்டு இருக்கிறான். எப்போதும் பரபரப்பு. எப்போதும் வேகம். எப்போது பணி என்ற நிலைக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள மனிதன் மறந்து விடுகிறான். குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் மக்கள்தொகை சார்ந்த சவால்களைப் புரிந்துகொள்ள மனித சமுதாயம் கவனம் செலுத்து மறுப்பதால், பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. 

கூட்டுக் குடும்பம், தாய்-தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் அனைத்து உறவினர்களிடம் செலுத்த வேண்டிய அன்பு, பாசம் உதவும் பண்பு ஆகியவை தற்போது மனிதர்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவிட்டது. ஏன், பொதுவாக இல்லை என்றே கூறும் நிலைதான் தற்போது இருந்து வருகிறது. நல்ல உறவுகளை அனுபவித்தவர்களுக்குதான், உண்மையில் குடும்ப உறவுகளில் எத்தகைய ஆனந்தம், மகிழ்ச்சி கிடைக்கிறது என அறிந்துகொள்ள முடியும். 

அற்புதமான குடும்ப உறவுகள் தற்போது சிதைந்து வருவதால், மனிதன் தனிமையில் தவித்து மகிழ்ச்சியை இழந்து வாழ்ந்து வருகிறான். ஒருவர் மிகப்பெரிய அளவுக்கு வாழ்க்கையில் செல்வம் ஈட்டி சாதித்ததாலும், குடும்பங்களில் உறவுகள் சிதைந்துவிட்டால், அவருக்கு உண்மையான மன மகிழ்ச்சி இருக்காது. நிம்மதி கிடைக்காது. 

குடும்ப உறவுகள் குறித்து இஸ்லாம்:

இஸ்லாமிய மார்க்கம், குடும்ப உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, மனிதனை நெறிப்படுத்தி, அழகிய வாழ்க்கையை வாழ அறிவுறுத்துகிறது. இஸ்லாத்தில் குடும்ப உறவைச் சேர்ந்து வாழும்படியும் அதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் புனித குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே வலியுறுத்தியிருக்கின்றன.

ஏக இறைவன் தனது திருமறையில் உறவுகள் குறித்து இப்படி கூறுகிறான்: "மனிதர்களே! உங்களை ஒரே ஆத்தமாவிலிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அந்த ஆத்மாவிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விரண்டு ஆத்மாக்களிலிருந்து அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். எவரைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் (உதவி பெற்றுக்) கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும் இரத்த உறவுகளை(த்துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன்: 4:1.)

இதேபோன்று மற்றொரு வசனத்தில், "அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினருக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வங் கொண்டு, பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்: 4:36) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ, அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. 

மேலும், “தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி உறவுகளை நல்ல முறையில் பேணுவது குறித்து நிறைய அறிவுரைகள் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுரைகளின்படி, மனிதன் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் விரும்புகிறது. 

சின்னச் சின்ன விஷயங்கள்:

குடும்பங்களில் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடும் இந்த நேரத்தில், சின்னச் சின்ன விஷயங்களுக்காக, குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகி, பின்னர், மிகப்பெரிய அளவுக்கு உறவுகள் சிதைந்துவிட அவை காரணமாக அமைந்துவிடுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் முதுகெலும்பாக பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற குடும்பங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

குடும்பங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிந்து, குடும்பங்களுக்குள் நாம் பகிர்ந்து கொள்ளும் அன்பு, பிணைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி காட்டும். உலக நாடுகளில் தற்போது பல்வேறு நோய்கள் உருவாகி மனிதனை மிகவும் கவலையில் ஆழ்த்தி வருகின்றன. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள் மட்டுமே காரணம் என கூற முடியாது. உணவு முறைகளால் 50 சதவீத நோய்கள் உருவானால், மீதமுள்ள 50 சதவீத நோய்கள், மனிதனின் பழக்க வழக்கங்கள் மற்றும் உறவுகளை சிதைப்பதன் மூலம் ஏற்படுகின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

மனிதன் தனியாக வாழ படைக்கப்படவில்லை. மற்ற மனிதர்களோடு இணைந்து, அன்பு செலுத்தி, பாசத்தைப் பொழிந்து வாழ வேண்டும் என்ற அழகிய நோக்கத்தில்தான் படைக்கப்பட்டுள்ளான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, விட்டுக் கொடுத்து, மற்றவர்கள் வாழ்க்கையில் உயர, நல்ல வழியை ஏற்படுத்தினால் ஒருவர் எப்போதும், சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருப்பார். 

சர்வதேச குடும்ப தினத்தை ஆண்டிற்கு ஒருநாள் மட்டுமே கொண்டாடி விட்டு, மற்ற நாட்களில் குடும்ப உறவுகளை மதிக்காமல், உதாசீனம் செய்துவிட்டு இருப்பது அழகான செயல் அல்ல. ஒவ்வொரு நாளும், நமது உறவுகளை நேசிக்க வேண்டும். அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத் தோழர்கள் என அனைத்து உறவுகளிடம் அன்பையும் பாசத்தையும் செலுத்தி வாழ்ந்து பாருங்கள். பின்னர் எப்போதும் தனிமையை உணரவே மாட்டீர்கள். 

உங்கள் குடும்பத்தின் அரவணைப்பையும் ஆதரவையும் பரந்த சமூகத்திற்கு நீட்டிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி செயல்படுங்கள். பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு கற்பித்தல், உள்ளூர் தங்குமிடங்களில் உள்ள முதியோர்களுக்கு உதவுதல் போன்ற செயல்கள் மூலம் உறவுகள் மேம்படும் என்பதை, நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: