"நாகரீக சமுதாயத்தில் சகிப்புத்தன்மையும், இனிமையான பேச்சும் கட்டாயம் தேவை"
உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளின் அரசியலமைப்புகள் மற்றும் அவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள், மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. மனித உரிமைகள் குறித்த உலகளாவிய பிரகடனம், சிவில், அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார சாசனம் போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்து சர்வதேச ஆவணங்களும், மத சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு ஆகியவற்றிக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. அந்த ஆவணங்களில் மனித உரிமைகள் குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய உத்தரவாதம் ஜனநாயக நாடுகளில் மட்டுமல்ல, ஜனநாயக அமைப்பு அல்லது மத அரசாங்கம் என்று அழைக்கப்படும் நாடுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மீறி, இன்றும், சில இடங்களில் மத சகிப்புத்தன்மை இல்லாத போக்கு இருந்து வருகிறது.
மதிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்:
ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள், பிற மதங்களுக்கிடையேயான தொடர்புகள், அவர்கள் விரும்பும் அளவுக்கு நேர்மறையான தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றும் கூட, பல சிறு தகராறுகள் வகுப்புவாத சாயலைப் பெறுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்திலோ, பிற சட்டங்களிலோ மதச் சுதந்திரம் அளித்தால் மட்டும் போதாது, ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மதத்தினரை முழு மனதுடன் மதிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் செய்யக் கூடாது.
ஒரு நாகரிக மற்றும் நாகரீகமற்ற நாட்டிற்கு இடையிலான வேறுபாட்டின் ஒரு கோடு, நிச்சயமாக, மக்கள் எவ்வளவு மத சுதந்திரத்தை உண்மையிலேயே அனுபவிக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடலாம். மேலும், ஒருவரின் மதம் மற்றும் நம்பிக்கைகள் எவ்வளவு மதிக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில் வரையப்படலாம். ஒரு உண்மையான நாகரீகமான நாடு அல்லது நாகரீகமான தேசம் என்பது மத சுதந்திரம் மட்டுமல்ல, அவற்றை அந்த நாடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதே மிகவும் முக்கியமாகும்.
மத சகிப்புத்தன்மை பற்றிய கேள்வி வரும்போதெல்லாம், யாரும் பாகுபாடுகளை உணர மாட்டார்கள். உண்மையில் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு தனிநபரும், அவர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மதத்தை முழுமையாக மதிக்க வேண்டியது கடமை.
மத சகிப்புத்தன்மைக்கு முக்கியத்துவம்:
உலகில் உள்ள மற்ற சட்ட ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் வளர்ந்த நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், அதன் அரசியலமைப்பில் மட்டுமல்ல, பிற சட்டங்களிலும், மத சுதந்திரம் மற்றும் மத சகிப்புத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும் எதையும் செய்யக்கூடாது. அப்படி செய்வதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் வரும் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், வணக்க வழிபாடு, அதற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது தீட்டுப்படுத்தப்படவோ கூடாது என்றும், எந்த மதக் கூட்டத்தையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் அல்லது எந்த மதத்தையும் அவமதிக்கும் எதையும் தெரிந்தே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் செய்யக்கூடாது என்றும் உறுதிப்படுத்துகிறது.
ஆனால் இதையெல்லாம் மீறி, சில சமயங்களில் பொறுப்புள்ளவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட வகுப்பினரைப் பற்றி வெறுப்பு விஷயங்களைச் சொல்கிறார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். வெறுப்பு குறித்து மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.
சில சமயங்களில் சிலர் வழிபாட்டுத் தலத்தையோ அல்லது ஒரு பிரிவினரால் புனிதமானதாகக் கருதப்படும் பொருளையோ சேதப்படுத்துகிறார்கள். மற்ற தரப்பினரின் மனதை புண்படுத்தும் வகையில் சில மோசமான செயல்களைச் செய்கிறார்கள். அவர்களின் குறிக்கோள்கள், அரசியலமைப்பு அல்லது சட்ட நடவடிக்கைகளை விட, தாங்கள் மேலானவர்கள் என்ற சிந்தனை இருந்து வருவதே முக்கிய காரணமாகும்.
சிந்தனை முறையில் மாற்றம் தேவை:
இந்த சிந்தனை மற்றும் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இது ஒவ்வொரு நபரின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு நபருக்கும் கற்பிக்கப்பட வேண்டிய பாடமாகும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் எதையும் செய்யவோ அல்லது செயல்படவோ அல்லது பேசவோ கூடாது.
இந்த செய்தி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய வேண்டும். இப்பணியில் அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியம். எந்த நாகரீக சமூகத்திலும் மத வெறுப்புக்கு இடமில்லை. எந்தவொரு நபருக்கும் மதத்தின் பெயரால் எந்த உரிமையும் பறிக்கப்பட்டாலோ அல்லது பாகுபாடு காட்டப்பட்டாலோ, இந்த பாரபட்சமான சூழலில் எந்த நாடும் அது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் கொள்கைகளுக்கு இணங்குவதாகக் கூற முடியாது.
பாகுபாடு இல்லாத சமூகத்தில்தான் மக்களிடையே உண்மையான நல்லிணக்கமும் உண்மையான அன்பும் உருவாகும். இந்த ஒற்றுமை உணர்வு ஒரு சிறிய நாட்டை சிறந்த நாடாக மாற்றும். எனவே, விமர்சனத்திற்காக எந்த மதத்தையும் விமர்சிப்பது நியாயமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நல்ல அம்சங்களைப் பார்ப்பது கடமை:
ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல விஷயங்களைப் பார்ப்பது நம் அனைவரின் கடமையாகும். எந்த மதத்திலும் நாம் குறை காண முயலக்கூடாது. விவாதம் அல்லது ஒப்பீடு தேவையில்லை. ஆனால் அனைத்து மதங்களின் தலைவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்து, அனைத்து மதங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கி, பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு வழி வகுக்கும் செயல்திட்டத்தை தயாரிப்பது மிகவும் அவசியம். மக்கள் ஒன்றுபட்டு மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றால், இந்த உலகத்தை உலகளாவிய கிராமம் என்று அழைப்பதில் அர்த்தமில்லை.
கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத சகிப்புத்தன்மை விஷயத்தில் நேர்மறையான பங்கை வகிக்க வேண்டும். ஆசிரியர்கள், அனைத்து மதங்களின் நல்ல விஷயங்களை மாணவர்களிடம் எடுத்துரைத்து, சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து அவர்களை விலக்கி வைத்து, அவர்கள் நாளைய நல்ல குடிமக்களாக மாற்றி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்தவொரு மதத்திற்கோ அல்லது பிரிவினருக்கோ எதிரான எதையும் எந்தவொரு மாணவரின் மனதிலும் பதிய வைப்பது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இடையூறாக அமையும். ஏனெனில் பாரபட்சமான சிந்தனை ஒருபோதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியாது.
- நன்றி: கவாஜா அப்துல் முந்தக், ரோஸ்நாமா ராஷ்ட்ரிய சஹாரா உர்தூ நாளிதழ்
- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment