Saturday, May 4, 2024

மனதைக் கவரும் அழகிய செயல்...!

"மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்ட முட்டை - மனதைக் கவரும் அழகிய செயல்"

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மஸ்ஜித்திகளின் பாதுகாப்பு குறித்து முஸ்லிம்கள் இடையே ஒருவித அச்சம் எப்போதும் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகும். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபரி மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, அங்கு தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 

அத்துடன், மதுரா, காசி மஸ்ஜித்துகள் மீது இந்துத்துவ அமைப்புகள் குறிவைத்து, அதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றன. ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் இருந்து வருகிறார்கள். 

18வது மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து இரண்டு கட்டத் தேர்தல்கள் நடந்துமுடிந்த நிலையில் வரும் 7ஆம் தேதி மூன்றாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், தங்களுடைய பத்து ஆண்டுக் கால ஆட்சியில் செய்த சாதனைகளைக் கூறி, வாக்குகளை கேட்காமல், தொடர்ந்து முஸ்லிம்களை குறிவைத்து மட்டுமே, பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர மாட்டோம், ராகுல் காந்தி பிரதமராக வர பாகிஸ்தான் முஸ்லிம்கள் விரும்புகிறார்கள், இப்படி வாய்க்கு வந்தபடி, பேசி, மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை அவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். 

தெளிவாக இருக்கும் மக்கள்:

பா.ஜ.க. தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மிகவும் தெளிவாக இருந்து வருகிறார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் மதநல்லிணக்கச் சம்பவங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன. 

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்கள் மஸ்ஜித் கட்டுவதற்காக நிலமும், நிதியையும் வழங்கி சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திருவிழாக்காலங்களில் சகோதரச் சமுதாய மக்கள் மீது இஸ்லாமியர்கள் காட்டும் அன்பு மிகவும் அலாதியானது. அத்துடன் அது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

இதுஒருபுறம் இருக்க, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்கள் குறித்து தவறான கண்ணோட்டம் கொண்டு, இன்னும், ஒருவித வெறுப்பான மனநிலையில் சிலர் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக மஸ்ஜித்கள் மீது அவர்கள் குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்துகிறார்கள். இதனை நாம் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் மூலம் காண முடிகிறது. 

மஸ்ஜித்திற்காக முட்டை தானம்:

நாட்டில் ஒருபுறம் முஸ்லிம்களுக்கும், மஸ்ஜித்திற்கும் எதிராக சிலர் வெறுப்பை விதைத்து வரும் நிலையில், காஷ்மீரில் ஒரு அழகிய சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த அழகிய சம்பவம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. 

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆப்பிள் நகரத்தில், புதிதாக மஸ்ஜித் கட்ட நிதி திரட்டப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோபோரில் உள்ள மல்பூர் கிராமத்தில் மஸ்ஜித் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்காக நிதி திரட்டும் முயற்சிகளில் மஸ்ஜித் நிர்வாகக் குழு ஈடுபட்டது. 

பொதுமக்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் நன்கொடையை, பணமாகவும், பொருளாகவும் கொடுக்கலாம் என மஸ்ஜித் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஏராளமான மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர். சிலர் பொருள்களையும் வழங்கினர். இவற்றை மஸ்ஜித் நிர்வாகம் சேகரிக்கத் தொடங்கியது. 

இத்தகைய சூழ்நிலையில், பெயர் கூற விரும்பாத வயதான பெண்மணி ஒருவர், தாம் வளர்க்கும் கோழி புதிதாக இட்ட முட்டையை தானம் செய்வதாகக் கூறி, அதனை மஸ்ஜித் நிர்வாகக் குழுவிடம் அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அதிக விலைக்கு ஏலம் போன முட்டை:

வயதான பெண்மணி அளித்து முட்டையை மஸ்ஜித் நிர்வாகக் குழு மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு, தங்களது அன்பையையும் நன்றியையும் அந்த முதிய பெண்ணிடம் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அளித்த அனைத்து வகையான நன்கொடைகளும் ஏலத்தில் விடப்பட்டன. 

பொருட்கள் ஏலம் விடப்பட்டபோது, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு, பொருட்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்து வாங்கிச் சென்றனர். அதன்படி, வயதான பெண்மணி தானம் செய்த முட்டையும் ஏலத்தில் விடப்பட்டது. 

இந்த முட்டையை ஒவ்வொருவரும் போட்டி போட்டு வாங்கி, பின்னர் மீண்டும் மஸ்ஜித் நிர்வாகத்திடமே கொடுத்தனர். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் முட்டை ஏலத்திற்கு விடப்பட்டது. இறுதிநாளில், டேனிஷ் அகமது என்ற இளம் தொழிலதிபர் 70 ஆயிரம் ரூபாய்க்கு முட்டையை வாங்கினார். 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள டேனிஷ் அகமது, "நான் ஒரு பெரிய பணக்காரன் அல்ல. ஆனால்  புனிதமான மஸ்ஜித் கட்ட வேண்டும் என்ற எனது ஆர்வமும் உணர்ச்சியும் மட்டுமே அதிக விலைக்கு முட்டையை ஏலத்தில் எடுக்க வைத்தது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  இப்படி பல சுற்று ஏலத்திற்குப் பிறகு ஒரு முட்டையின் மட்டும், 2 லட்சத்து 26 ஆயிரத்து 350 ரூபாய் நிதியை மஸ்ஜித் நிர்வாகக் குழு திரட்டியது. 

மக்களை கவரும் மஸ்ஜித்துகள்:

இப்படி, மஸ்ஜித்திற்காக நிதி திரட்டிய மல்பூர் கிராம மஸ்ஜித் நிர்வாகம், தற்போது அழகிய மஸ்ஜித்தை கட்டும் பணியில் முழுவீச்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, பக்கத்து வார்போரா பகுதியைச் சேர்ந்த அஹ்மத், “இந்த மஸ்ஜித்தியின் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். மஸ்ஜித் பெரியதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால், தேவையான நிதியும் பெரிய அளவில் உள்ளது" என்று கூறியுள்ளார். 

ஒருபுறம் முஸ்லிம்களுக்கும், மஸ்ஜித்திற்கும் எதிராக ஒருசில அமைப்புகள் பிரச்சாரம் செய்யும் நிலையில், ஒரு சிறிய முட்டையை தானம் செய்து, அழகிய மஸ்ஜித் கட்ட தன்னால் முடிந்த உதவியை செய்த அந்த முதிய பெண்மணி போன்றவர்கள், நாட்டில் நிறைய பேர் இருந்து வருகிறார்கள்.  இவர்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கும் வரை, நாட்டில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது. மக்களிடம் உள்ள சகோதரத்துவ அமைதியை, வெறுப்பின் மூலம் சிதைக்க முடியாது. முஸ்லிம்களை மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் மஸ்ஜித்துக்கள் கவர்ந்து வருவதால், அவற்றை அழிக்க நினைக்கும் தீங்கு எண்ணம் கொண்டவர்களின் செயல்கள் நிச்சயம் நிறைவேறாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: