Thursday, May 9, 2024

கட்டுக்கதைகள்...!

தோல்வி உறுதியாகி விட்டதால் முஸ்லிம்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்படும் கட்டுக்கதைகள்...!

18வது மக்களவைத் தேர்தல் களம் விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கும். சூழலில், முதல் மூன்று கட்டத் தேர்தல் நிறைவு அடைந்துள்ளது. வரும் 13ஆம் தேதி நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 20ஆம் தேதி 5வது கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிகிறது. முதல் மூன்று கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு கிடைத்த தரவுகளின்படி, பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்துள்ளனர். 

எனவே, தங்களுடைய பிரச்சாரங்களில், பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டு வாக்குகளை கேட்பதற்கு பதிலாக, நாட்டில் அமைதியாக வாழும் சிறுபான்மையின மக்களை, குறிப்பாக, முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கி, வெறுப்பு பேச்சுகளை பேசி, பெரும்பான்மையின மக்களை குழப்பி வருகிறார்கள். 

முஸ்லிம்கள் மீது எப்போதும் வெறுப்பு:

நாடாளுமன்றத் தேர்தல் களம் தொடங்கியது முதல், பெரும்பான்மையின மக்களுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முஸ்லிம்கள் குறித்து பேசாமல் தங்கள் பேச்சை நிறைவு செய்வது இல்லை. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுக்க மாட்டோம். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவோம். இப்படி தொடர்ந்து இருவரும் பேசி வருகிறார்கள். 

பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களும் இதேபோன்ற நிலையில், தங்களுடைய பிரச்சாத்தைச் செய்து வருகிறார்கள். நாட்டின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறந்துவிட்டு, அமைதியாக, ஒற்றுமையாக வாழும் இஸ்லாமியர்கள் மீது ஏன் இந்தளவுக்கு அவர்களுக்கு வன்மம் இருக்கிறது என கேள்வி எழுப்பினால், கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் எந்த சாதனையும், வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை என பதில் கிடைக்கிறது. 

எனவே, சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியாமல், பெரும்பான்மை மக்களை குழப்பி, வாக்குகளை அள்ளலாம் என்ற நினைவில், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிய கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். 

முஸ்லிம் மக்கள் தொகை குறித்து சர்ச்சை:

நாட்டில் கடந்த 1950ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்துக்களின் எண்ணிக்கை 7 புள்ளி எட்டு இரண்டு (7.82) சதவீத சரிவை சந்தித்து இருப்பதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43 புள்ளி ஒன்று ஐந்து சதவீதமும், (43.15) கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 5 புள்ளி மூன்று எட்டு சதவீதம் (5.38) உயர்வை கண்டு இருப்பதாக, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் பா.ஜ.க. கடந்த பத்து ஆண்டு காலமாக வெளியிடாத இந்த ஆய்வறிக்கையை, தற்போது வெளியிட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியிட்ப்பட்டது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 

கடந்த 2020-21ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. அரசு இதுவரை நடத்தவில்லை. தற்போது நாட்டு மக்களை குழப்ப புதிய கட்டுக்கதையை பா.ஜ.க. பரப்பி வருகிறது. உண்மையில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது. 

மக்கள்தொகை அறக்கட்டளை விளக்கம்:

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சமீபத்திய ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து கருத்து கூறியுள்ள இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை, இந்த தகவல்கள் "தவறான மற்றும் ஆதாரமற்றது" என குறிப்பிட்டுள்ளது.  65 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதக் குழுக்களின் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வின் தகவல்களை ஊடகங்கள் எவ்வாறு தவறாகச் சித்தரித்தன என்பது குறித்தும்  இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை  ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

"முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பை முன்னிலைப்படுத்த ஊடகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு சித்தரிப்பு, பரந்த மக்கள்தொகை போக்குகளை புறக்கணித்த தவறான சித்தரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா கூறியுள்ளார். 

மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி, 1981 மற்றும் 1991-க்கு இடையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் 32 புள்ளி 9 சதவீதத்திலிருந்து 2001 மற்றும் 2011-க்கு இடையில் 24 புள்ளி 6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சரிவு இந்துக்களின் வளர்ச்சியை விட அதிகமாகக் காணப்படுகிறது.

கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சிறந்த அணுகல் உள்ள மாநிலங்களில் அனைத்து மதக் குழுக்களிலும் குறைவான மொத்த கருவுறுதல் விகிதத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கை நழுவிபோன வெற்றி:

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கை நழுவிபோனதால், முஸ்லீம்களை வேட்டையாடும் ஒரு கட்டுக்கதையை தற்பொது மோடி அரசு வெளியிட்டுள்ளது. அதை ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் வெளியிட்டுள்ளது. ஆனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, உள்ளிட்ட பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வரும் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும், இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப இனி தயாராக இல்லை. 

நாட்டு மக்கள் அனைவரும் மிக தெளிவாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக சந்தித்து வரும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தான் அது. எனவே, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பும் கட்டுக்கதைகளை மக்கள் இனி காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். நம்ப மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாக இன்னும், 24 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்ற வெறுப்பு பேச்சுகள், தகவல்கள் ஆகியவற்றை பா.ஜ.க. பரப்பிக் கொண்டே இருக்கும். ஆனால், அதற்கு தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: