Friday, May 3, 2024

புதிய முயற்சி....!

 கல்விக்காக ஒரு மஸ்ஜித்தின் புதிய முயற்சி....!

நாட்டின் புதிய தலைமுறை, சிறப்பான முறையில் செயல்பட்டு சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். கல்வி என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. கல்விக்காண நல்ல வழிகளை உருவாக்கி தர வேண்டியது ஒரு அரசின் முக்கிய கடமையாகும். அப்போதுதான், நல்ல அறிவுசார் கொண்ட மக்களை நாடு பெற முடியும். 

ஆனால், தற்போது கல்வி என்பது ஒரு வியாபாரமாகிவிட்டது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் வசதியானவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. நல்ல கல்விக்கான சூழல் உருவாக்கப்படுகிறது. பணத்தை வாரி இறைத்து, கல்வியை பெறும் நிலை தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

நல்ல வசதி கொண்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை உயரிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கிறார்கள். சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், ஏதோ ஒரு பள்ளியில் தங்கள் குழந்தைகள் படித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து வருகிறார்கள். தங்களுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப, கிடைக்கும் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்தாலும், கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், குழந்தைகள் கல்வியில் எப்படி ஆர்வத்துடன் இருக்கிறார்கள்? நன்கு படிக்கிறார்களா? அவர்களது கல்வியறிவு எப்படி உள்ளது? போன்ற கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி அதற்கு விடை காண முயற்சி செய்வதில்லை. 

இதன் காரணமாக, நாட்டில் உள்ள ஏழை, மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைப்பதில்லை. நல்ல கல்வி கிடைக்காமல், இளம் தலைமுறையினர், தங்களது மனித சக்தியை வீணடிக்கிறார்கள். இது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதை சமுதாயம் அறிந்தும் அறியாமல் இருந்து வருகிறது. 

கல்வியில் முஸ்லிம்கள்:

இந்தியாவின் மக்கள் தொகையில் 25 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். உலகில் அதிகமாக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அப்படி இருந்தும், முஸ்லிம்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. இஸ்லாம் கல்வி குறித்து உயர்ந்த கருத்துகளை சொல்லி இருக்கும் நிலையில் கூட, முஸ்லிம் சமுதாயம் கல்வியில் அதிக அக்கறை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். இதனால் பல்வேறு நெருக்கடிகளை முஸ்லிம்கள் சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. பள்ளி கல்வியில் மட்டுமல்லாமல், உயர்கல்வியில் கூட, முஸ்லிம்கள் அதிக கவனம் அல்லது அக்கறை செலுத்தவில்லை. இதனை பல புள்ளிவிவரங்கள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகளில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்து வருகிறது. 

முஸ்லிம் சமுதாயம் நல்ல கல்வி பெறக் கூடாது என ஒருசில சக்தியாக சதி வேலைகளில் இறங்கி இருக்கும் நிலையில், கல்வி குறித்து மிகவும் உயர்வாக இஸ்லாம் தெரிவித்து இருக்கும் நிலையில் கூட, முஸ்லிம் சமுதாயம் கல்வியில் அதிக அக்கறை, கூடுதல் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கடந்த 20190-20ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 21 லட்சம் அளவுக்கு இருந்தது. ஆனால், அது 2020-21 கல்வியாண்டில், 19 லட்சத்து 21 ஆயிரமாக குறைந்துவிட்டது. 

இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் முஸ்லிம் குடும்பங்களின் பொருளாதார நிலை, வறுமை, அரசு வழங்க மறுக்கும் சலுகை போன்றவை முக்கியமாக இருந்து வருகின்றன. இதையும் மீறி, பல முஸ்லிம் இளைஞர்கள், வறுமையை உடைத்து, கல்வியில் சாதித்து வருகிறார்கள். இத்தகைய இளைஞர்கள் சமுதாயம் நாட்டிற்கு பலன் அளிக்கும் வகையில் தங்களுடைய பணிகளை அமைத்துகொண்டு செயல்படுகிறார்கள். 

கல்விக்காக புதிய முயற்சி:

தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தென் மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வு இருப்பதால், அவர்கள், கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன்மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து நல்ல படிப்பு படித்து, வாழ்க்கையில் சாதிக்க ஆரம்பிக்கிறார்கள். 

தென்மாநிலங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள், ஏழை, எளிய மக்கள் மத்தியில் கல்வி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களிடையே கல்வி ஆர்வத்தை உருவாக்கிறார்கள். 

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹைதராபாத்தின் தெற்கில் உள்ள ஜல்பல்லி மஸ்ஜித் நிர்வாகம் ஒன்று, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான பாலம் என்ற பள்ளியை நிறுவியுள்ளது. ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு இங்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 27 சதவீத குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், ஐந்து சதவீதத்தினர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால், இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டதாக ஏழை குடும்பத்தினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அரசு பள்ளி இல்லாத சூழ்நிலை மற்றும்,  அரசு நடத்தும் பள்ளிகளில் மோசமான உள்கட்டமைப்பு ஆகியவை காரணமாக, முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவில்லை என தெரியவந்தது. 

தீர்வு காண முடிவு:

இதன் காரணமாகப் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் குழந்தைகள் சில மோசமான அல்லது தீய செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தி நல்ல ஒரு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்த ஹைதராபாத் ஜல்பல்லி மஸ்ஜித் நிர்வாகம், தன்னார்வு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய முயற்சியை தொடங்கி அதில், ஓரளவுக்கு நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது.  

ஜல்பல்லி, பஹாடி ஷரீஃப் சாலையில் உள்ள மஸ்ஜித்-இ-ரஹ்மத்-இ-ஆலமில் கல்விக்கான ஒரு பாலம் அமைக்கப்பட்டு, ஆரம்ப நிலை முதல் இடைநிலை வரை 110 மாணவர்கள் முதல் குழுவில், சேர்க்கப்பட்டுள்ளனர். 

குடிசைப் பகுதிகளில் மட்டுமல்லாமல், நகர்ப்புற குடிசைப் பகுதிகளைச் சுற்றிச் சென்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கணக்கெடுப்பு நடத்தி, நல்ல கல்வி கிடைக்காமல் இருக்கும் ஏழை, மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்விக்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. 

சிறந்த கல்விக்கு வழி:

மஸ்ஜித்-இ-ரஹ்மத்-இ-ஆலமில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியில், ஆரம்பக் கால படிப்புகள் வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகின்றன. அடித்தள நிலை பாடநெறி, ஆங்கிலம், கணிதம், ஆகியவற்றின் அடிப்படை அம்சங்களை வலியுறுத்தும் 60 நாள் பாட திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து யு.கே.ஜி. மற்றும் முதல் வகுப்புக்கான மேம்பட்ட தலைப்புகளைக் கொண்ட பாடத்திட்டமும், பின்னர், மூத்த நிலை பாடநெறியானது 2 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான மேம்பட்ட கற்றல் நிலைகளை ஆராயும் இறுதி 90 நாள் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தில், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மதிப்பீடுகள் மூலம் முன்னேற்றத்தின் மதிப்பீடு நடத்தப்படுகிறது.. குழந்தையின் செயல்திறன் பிரதான கல்விக்கான மாற்றத்தை தீர்மானிக்கும் என்பதால், ஒவ்வொரு மாணவருக்கும் இலவச போக்குவரத்து மற்றும் மதிய சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அத்துடன் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறு சிற்றுண்டி, மற்றும் முட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் குழந்தைகளின் உடலுக்கு நல்ல சக்தி கிடைப்பதால், அவர்கள் ஆரோக்கியத்துடன் பள்ளிக்கு வர ஆர்வம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சமூக சேவையிலும் கல்வியிலும் ஆர்வம் உள்ள ஆசிரியர்கள், இந்த மஸ்ஜித்தின் பாலம் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களைச் சொல்லித்தருவது கூடுதல் அம்சமாக இருந்து வருகிறது. ஒரு புதிய பாலம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் இந்த மஸ்ஜித்-இ-ரஹ்மத்-இ-ஆலமின் திட்டம், ஹைதராபாத் மட்டுமல்லாமல், நாட்டின் பிற நகர முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறது. 

இதுபோன்ற, புதிய முயற்சிகளை ஒவ்வொரு நகரங்களிலும் தொடங்கப்பட வேண்டும். அதன்மூலம், கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம், நல்ல கல்வி பெற்று வாழ்க்கையில் சாதிக்க தொடங்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: