Wednesday, May 8, 2024

ஆரோக்கியமற்ற உணவு முறைகளால்....!

 ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படும் 50 சதவீத நோய்கள்....!

நவீன யுகத்துடன் உலகம் படுவேகமாக பயணம் செய்துகொண்டிருக்கும் நிலையில், மனிதர்களின் வாழ்க்கையில் நோய்களுக்கும் பஞ்சம் இல்லை என்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்கு என்ன காரணம்?  என ஆய்வு செய்தால், மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சிந்தனைகளில் உருவாக்கியுள்ள மாற்றங்கள், உணவு முறைகளில் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் என தெரிய வருகிறது. 

ஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கியமான எண்ணங்கள் மிகவும் அவசியம் என்பதை மனித இனம் ஏனோ மறந்துவிட்டு, படுவேகமாக தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. இந்த நவீன வாழ்க்கையில் பல நன்மைகள் இருந்தாலும், உடல்நலம் விரைவில் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது. இதை ஏனோ மனிதர்கள் மறந்துவிட்டு, தங்களுடைய வாழ்க்கை முறையில் திருத்தங்களை செய்துகொண்டு பயணம் செய்வது இல்லை. இதனால் அடையும் துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் ஏராளம் என்பதை அவர்கள் நன்கு அறிந்தும் இருக்கிறார்கள். எனினும் தங்களுடைய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, நல்ல வாழ்க்கையை சீர்குலைத்துக் கொள்கிறார்கள். 

ஆராக்கியமற்ற உணவு முறைகள்:

இந்தியாவில் ஏற்படும் மொத்த நோய்ச் சுமையில் 56 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படுகின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில்,  ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்க 17 உணவு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று அல்லாத நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது என்றும் எச்சரித்துள்ளது. 

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம் இதய நோய்  மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் கணிசமான விகிதத்தை குறைக்கலாம் என்றும்,  நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுக்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் கணிசமான அளவு, அகால மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் அந்த ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது. 

சமச்சீர் உணவின் முக்கியத்துவம்:

சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள ஊட்டச்சத்து நிறுவனம், இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள், ஊட்டச்சத்து குறைபாடுகளின் அனைத்து பாதகமான விளைவுகளையும் தடுக்க உகந்த வளர்ச்சியை உறுதிப்படுத்த ஆரோக்கியமான உணவு முறைகள் உதவும் என்றும் கூறியுள்ளது. 

சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், குறைந்த உடல் செயல்பாடு மற்றும் பல்வேறு உணவுகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் இந்தியர்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளை அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற, அதிக பதப்படுத்தப்பட்ட, அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உணவுகள், ஆரோக்கியமான மாற்றுகளை விட மிகவும் மலிவு மற்றும் அணுகக்கூடியதாக மாறியுள்ளன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே சமச்சீர் உணவின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இவை, சீரான உணவை உண்பதில் கவனம் செலுத்துகின்றன. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உணவு, முதியோருக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்பட பாதுகாப்பான, சுத்தமான உணவை உண்ணுதல், மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது,போன்ற வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காய்கறிகள், பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், வேர்கள் மற்றும் கிழங்குகளுடன் குறைந்தபட்சம் எட்டு உணவுக் குழுக்களில் இருந்து நுண்ணூட்டச் சத்துக்களைப் பரிந்துரைக்கின்றன. மற்ற முக்கிய பகுதி தானியங்கள் மற்றும் தினைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பருப்பு வகைகள், சதை உணவுகள், முட்டை, கொட்டைகள், எண்ணெய் விதைகள் மற்றும் பால் அல்லது தயிர் ஆகியவை உள்ளன.

முக்கியமான அம்சங்கள்:

தானியங்களின் உட்கொள்ளல் மொத்த ஆற்றலில் 45 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். பருப்பு வகைகள், முட்டை மற்றும் சதை உணவுகளுக்கு, மொத்த ஆற்றல் சதவீதம் 14 முதல் 15 வரை இருக்க வேண்டும். மொத்த கொழுப்பு உட்கொள்ளல் 30 சதவீத ஆற்றலை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும். அதே சமயம் கொட்டைகள், எண்ணெய் விதைகள் மற்றும் பால் பொருட்கள் முறையே ஒரு நாளைக்கு மொத்த ஆற்றலில் 8 முதல் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும். உடல் எடையைக் கட்டியெழுப்புவதற்கு புரதச் சத்துக்களைத் தவிர்க்க வேண்டும். உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும், எண்ணெய் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும், முறையான உடற்பயிற்சியைப் பேணவும், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு பட்டியலில் உள்ள தகவல்களைப் படித்து பயன்பெற வேண்டும் என்றும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது

ஒரு நாளைக்கு மொத்த ஆற்றலில் 50 முதல் 70 சதவீதம் வரை தானியங்கள் பங்களிக்கின்றன என்றும் பருப்பு வகைகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை ஒரு நாளைக்கு மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 6 முதல் 9 சதவீதம் வரை பங்களிக்கின்றன என்றும், இந்த உணவுகளிலிருந்து மொத்த ஆற்றலில் 14 சதவீதம் பரிந்துரைக்கப்படுகிறது என்றும் ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக  இந்தியர்களின் உணவுப் பழக்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இது தொற்றாத நோய்களின் பரவல் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. அதேநேரத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டின் சில பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கின்றன என்றும்  ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளது. 

கவனத்தில் எடுத்துகொள்வோம்:

ஏக இறைவன் மனிதர்களுக்கு வழங்கியுள்ள வாழ்க்கையை மிகவும் அற்புதமாக வாழ வேண்டிய வாழ்க்கையாகும். அதற்கு இயற்கை பல்வேறு நல்ல வழிகளை மனிதர்களுக்கு அமைத்துகொடுத்து, ஆரோக்கியமாக வாழ நல்ல நெறிமுறைகளையும் சொல்லிக் கொடுத்துள்ளது. எனவே, ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். அதற்கு ஆரோக்கியமான எண்ணங்களுடன், ஆரோக்கியமான உணவு முறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இப்படி, பின்பற்றி வாழ்ந்தால், தொற்றாத நோய்களின் பரவலில் இருந்து தப்பிக்கலாம். ஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலும்  முக்கியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  நல்ல எண்ணங்கள், நல்ல உணவு பழக்க வழக்கங்கள், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மூலம் உயர்ந்த வாழ்க்கையை வாழ இனி நாம் முயற்சி செய்வோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: