Saturday, May 11, 2024

அன்னையர் தினம்...!

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான்...!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச அளவில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான அன்னையர் தினம் 12.05.2024 அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்வில், முக்கிய பங்கு வகிக்கும், அபரிமிதமான அன்பைக் காட்டும் மற்றும் தியாகங்களைச் செய்யும் அனைத்துப் பெண்களைக் கௌரவிப்பதற்கும் பாராட்டுவதற்கும் நோக்கமாக  இந்த அன்னையர் தினம் கொண்டுள்ளது. 

ஒவ்வொரு அன்னையரும், தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கும், அவர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்கும் தன்னலமின்றி பங்களிப்பை அளித்து வருகிறார்கள். எனவே, உங்கள் தாயார் வழங்கும் நிபந்தனையற்ற கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்தும் மற்றொரு சிறப்பு சந்தர்ப்பமாகும் அன்னையர் தினம்.

அன்னையர் தினம், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து கொண்டாடப்படும் ஒரு தினமாக இருந்து வருகிறது. இந்த தினத்தின் வரலாற்று வேர்கள் பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானிய மரபுகளுடன் தொடர்புடையவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் அன்னையர் தின கொண்டாட்டத்தின் இதேபோன்ற பாரம்பரியம் இருந்து வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடங்கிய இந்த கலாச்சாரம் தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அன்னையர் தினத்தில், தாய்மார்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பரிசுப் பொருட்கள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் குடும்பத்தில் ஆனந்தம் ஏற்படுகிறது. 

உண்மை நிலை என்ன?

அன்னையர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை நாம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாக இருக்கிறது என புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த முதியோரின் எண்ணிக்கை வரும் 2050ஆம் ஆண்டிற்குள் 35 கோடியாக அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்படி ஆண்டுக்கு ஆண்டு முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இருக்கும் முதியோர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டின் கணக்கெடுக்கின்படி 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை சுமார் 54 லட்சமாக இருக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 60 விழுக்காட்டினர் உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றி தவித்து வருகின்றனர் என்ற ஒரு புள்ளிவிவரம் மூலம் அறியும்போது, மனம் உண்மையில் வேதனை அடைகிறது. 

கேரளாவில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதம் பேர் முதியோர் என்றும், தமிழகத்தில் இது 14 சதவீதமாக இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பினால், மிகவும் மோசமான, பரிதாபமான நிலையில் முதியோர்கள் இருந்து வருகிறார்கள் என்ற பதில்தான் கிடைக்கிறது. 

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் பிள்ளைகள் வசதி வாய்ப்போடு வாழ்ந்தும், முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கட்டண முதியோர் இல்லங்கள் உள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தாயின் காலடியில் சொர்க்கம்:

இஸ்லாமிய மார்க்கம், தாய்-தந்தையருக்கு மிகவும் கண்ணியம் அளிக்கும்படி, அவர்களின் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகிறது. தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன அழகிய பொன்மொழி. தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்பது இதன் பொருளாகாது. மாறாக, தாயை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

நபிகளாரிடம் நண்பரொருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! அறப்போரில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து தங்களிடம் ஆலோசிக்கவே வந்தேன்” என்றார். 

அப்போது நபிகளார், “உமக்கு அன்னை இருக்கிறாரா?” என வினவ, அவர் ‘ஆம்’ என்றார். அப்போது, “தாயை (முதலில்) கவனி! சொர்க்கம் அவரது காலுக்கு அடியில் உண்டு” என்றார்கள். நபியவர்கள். (நஸயீ)

மனிதன் பிறப்பதற்கு, இறைவனுக்கு அடுத்து தாய்தான் காரணம். அவனை வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்குவதற்குள் தாய் படும்பாடு சொல்லி மாளாது. உலகத்தில் சுயநலமே கலக்காத ஒரு தியாகி உண்டென்றால், அது தாயாகவே இருக்க முடியும். தியாகத்தின் மொத்த உருவம் தாய்தான். அந்தத் தியாகச் சுடரை நீருற்றி அணைக்கலாமா?

இதனாலேயே இறைவன் தன் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்: "பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனை, அவன் தாய் சிரமத்துடனேயே சுமந்தாள்; சிரமத்துடனேயே பெற்றெடுத்தாள். அவனை (வயிற்றில்) சுமப்பதற்கும் பால்குடி மறக்கவைப்பதற்கும் முப்பது மாதங்கள் பிடிக்கின்றன்." (46:15)

சீ என்றுகூடச் சொல்லாதீர்கள்:

தாய், தந்தையை எப்படி நடத்த வேண்டும்; எப்படி நடத்தக் கூடாது என்பதை இறைவன் ஒரு வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:

"பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை நோக்கி, ‘ச்சீ’ என்றுகூடச் சொல்லிவிடாதீர்; அவர்களை விரட்டாதீர்; அவர்களிடம் கண்ணியமான சொல்லையே சொல்வீராக. பணிவு எனும் சிறகைக் கனிவுடன் அவர்களுக்காகத் தாழ்த்துவீராக!" (17:23,24)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தாய், தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம்) யார் சொர்க்கம் செல்லத் தவறிவிட்டானோ அவன் பேரிழப்புக்குரியவன்." (ஸஹீஹ் முஸ்லிம்)

ஏக இறைவன் வழங்கிய திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளிய பொன்மொழிகள் மூலம், பெற்றோரிடம் ஒருவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அவர்களை எப்படி கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. 

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே:

இஸ்லாமிய மார்க்கம் முதியோர்களையும், பெற்றோர்களையும் கண்ணியத்துடன் நடத்தும்படி, அறிவுறுத்தும் நிலையில் கூட, மேலை நாடுகளின் கலாச்சாரத்திற்கு அடிமையாகி முஸ்லிம் இளைஞர்களில் சிலர், தங்கள் பெற்றோர்களை சிறிதும் மதிக்காமல், அவமானப்படுத்தி வருகிறார்கள். நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகள் வரும்போதும், அதை படிக்கும்போதும், ஏன் நம் இளைஞர் சமுதாயம் இப்படி இருக்கிறது என மனம் வேதனை அடைகிறது. 

தாய், தந்தையை கண்ணியப்படுத்தாமல், அலட்சியம் செய்த பலர், பின்னாளில் மிகவும் வேதனைகளை அனுபவித்ததை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். எனவே, இதுபோன்ற நிலைமை நம்மில் யாருக்கும் ஏற்படாமல் இருக்க நாம் அன்னையை மதிக்க வேண்டும். கண்ணியப்படுத்த வேண்டும். 

ஆண்டுக்கு ஒருமுறை அன்னையர் தினம் கொண்டாடிவிட்டு, பிறருக்கு காட்டுவதற்காக அன்னையர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, வேதனை செய்வதால் எந்தவித நன்மையும் இல்லை என்பதை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

வீட்டில் முதிய வயதுடைய அன்னை இருக்கும்போது, அந்த வீடே ஒளிமயமான வீடாக, அழகிய வீடாக இருக்கும். நமக்கு துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்போது, ஆறுதல் கூற, அன்பு செலுத்த முதியோர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகள் மனத்திற்கும், இதயத்திற்கும் ஒரு நல்ல மருந்தாக இருக்கும். அதன்மூலம், துயரம் என்ற நோய் விரைவில் குணம் அடையும். 

கடைசியாக, நாமும் ஒருநாள் முதுமை அடைவோம்; இன்றைக்கு நம் தாயை, தந்தையை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதை நம் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். நமது முதுமையில் நம்மை அவர்கள் அப்படித்தானே நடத்துவார்கள் என்பதை யோசித்து, தாய், தந்தையரைக் கண்போல் காப்போம். அவர்களின் மனம் நோகாமல் நடப்போம். ஆண்டு ஒருநாள் மட்டுமே அன்னையர் தினம் கொண்டாடாமல், ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே என்ற எண்ணத்தில் இருந்துகொண்டு, அன்னையை கண்ணியப்படுத்தி, பெருமை அடைவோம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: