Friday, May 10, 2024

வணிகத்துறையில் தனி முத்திரை....!

"வணிகத்துறையில் தனி முத்திரை பதித்து, சாதனை புரியும் இந்திய முஸ்லிம் பெண்  ஃபரா மாலிக் பன்ஜி"

இஸ்லாமிய மார்க்கம் அழகிய முறையில், பெண்களுக்கு அனைத்து உரிமைகளை வழங்கி கண்ணியப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி அழகிய வாழ்வியலை வாழ வழிக்காட்டும் மார்க்கம், கல்வி கற்கவும், வணிகம் செய்யவும், வாழ்க்கையை தேர்வு செய்யவும் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தி, தற்போதைய நவீன உலகில் முஸ்லிம் பெண்கள் பலர், பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். 

குறிப்பாக, கல்வி, அறிவியல், மருத்துவம், வணிகம் உள்ளிட்ட துறைகளில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் பெண்கள், பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதித்து வருகிறார்கள்.  விளையாட்டு துறையிலும் முஸ்லிம் பெண்கள் அதிக ஆர்வம் செலுத்தி, சாதனைகளைப் புரிந்து வருவதை அண்மைக் காலமாக நாம் அறிந்து வருகிறோம். 

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயரியப் பணிகளில் சேர முஸ்லிம் பெண்கள் ஆர்வம் செலுத்தி, அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு, கடின உழைப்பிற்குப் பிறகு வெற்றி பெற்று வருகிறார்கள். இதன்முலம், இஸ்லாம் பெண்களுக்கு எந்தவித உரிமையையும் தரவில்லை என்ற குற்றச்சாட்டை தங்களுடைய அழகான செயல்கள், சாதனைகள் மூலம் முஸ்லிம் பெண்கள் உடைத்து வருகிறார்கள்.  அந்த வகையில் வணிகத்துறையிலும் சிறப்பான பங்களிப்பை இந்திய முஸ்லிம் பெண்களில் சிலர் வழங்கி நாட்டிற்கு பெருமை அளித்து வருகிறார்கள். 

புதுமையின் கலங்கரை விளக்கம்:

மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஃபரா மாலிக் பன்ஜி,  வணிகத்துறையில் வெற்றி மற்றும் புதுமையின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறார் என்றால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உண்மைதான், சந்தை மதிப்பில், சுமார் 28 ஆயிரத்து 773 கோடிக்கு அதிகமான நிகர மதிப்பை தாண்டி, அவரது சொத்து மதிப்பு இருந்து வருகிறது. 

மெட்ரோ ஷூஸின் தலைவரான தொழில் அதிபர் ரஃபிக் மாலிக்கின் மகளான ஃபரா மாலிக் பன்ஜி, தனது பாட்டனார் மாலிக் தேஜானி கடந்த 1955ஆம் ஆண்டு நிறுவிய மெட்ரோ ஷு நிறுவனத்தை, தற்போது அழகிய முறையில் நிர்வகித்து இந்தியாவின் பணக்கார முஸ்லிம் பெண் எந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார். பிரீமியம் காலணி வழங்கல்களுக்காக புகழ்பெற்ற மெட்ரோ பிராண்டின் தலைமையை வழிநடத்தும் ஆற்றல்மிக்க சக்தியான ஃபரா மாலிக் பன்ஜி, நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்றபிறகு, நிறுவனத்திற்கு ஒரு மாற்றமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஃபரா மாலிக் பன்ஜியின் இந்த முயற்சி, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது.

ஃபராவின் வழிகாட்டுதலின் கீழ், மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் சந்தை மூலதனம் 35 ஆயிரத்து 117 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஃபராவின் சாதுர்யமான வணிக புத்திசாலித்தனம் மற்றும் திறமையான பார்வைக்கு இது ஒரு நல்ல சான்றாகும். காலணித் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ஃபரா, டைனமிக் மார்க்கெட் நிலப்பரப்புகளின் மூலம் நிறுவனத்தை திறமையாக வழிநடத்தி, மெட்ரோ ஷூக்களை முன்னோடியில்லாத வகையில் வெற்றியை நோக்கித் தள்ளியுள்ளார்.

ஃபரா மாலிக் பன்ஜியின் சாதனை:

டெக்சாஸ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்த ஃபரா மாலிக் பன்ஜி, இயல்பாகவே, வணிகத்துறையில் ஆர்வத்துடன் இருந்ததால், தனது நிறுவனத்தின் தொழில்நுட்ப வரைபடத்தை மறுவடிவமைப்பதில் இருந்து அதிக கவனம் செலுத்தினார். அதன்மூலம் ஸ்கெச்சர்ஸ், க்ராக்ஸ் மற்றும் கிளார்க்ஸ் போன்ற உலகளாவிய டைட்டான்களுடன் ஒருங்கிணைந்து கூட்டணிகளை உருவாக்குவது வரை, ஃபரா ஒரு தொழில்துறை தலைவராக மெட்ரோ ஷூஸின் நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உன்னிப்பான கவனம், பாணியின் தீவிர உணர்வுடன் இணைந்து, பிராண்டிற்கு புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், நிறுவனத்திற்குள் புதுமை மற்றும் சிறந்த கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தது.

மும்பையில் கடந்த 1947ஆம் ஆண்டில் ஒரு சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட மெட்ரோ ஷு நிறுவனம், தற்போது பரந்து விரிந்து அடைந்து புகழ்பெற்று இருப்பதற்கு, ஃபரா மாலிக் பன்ஜியின் உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவையே முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. வணிகத் திறமைக்கு அப்பால், வளர்ச்சியை வளர்ப்பதில் ஃபராவின் அர்ப்பணிப்பால், 136 இந்திய நகரங்களில் 598க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட விரிவான நெட்வொர்க்காக மெட்ரோ ஷூ நிறுவனம் விரிவடைந்துள்ளது. 250க்கும் மேற்பட்ட நம்பகமான விற்பனையாளர்களுடன் உறவுகளை வளர்ப்பதன் மூலம், நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வெற்றிக்கு எரிபொருளாக இருக்கும் ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை ஃபரா மாலிக் பன்ஜி வளர்த்துள்ளார்.

பங்குச் சந்தையில் மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஃபரா மாலிக் பன்ஜியின் வணிக நிலப்பரப்பில் அழியாத முத்திரை, ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை பிரமுகர்களுக்கு ஒரு உத்வேகமாக உதவுகிறது. ஒவ்வொரு முன்னேற்றத்திலும், ஃபரா தனிப்பட்ட திறமை மற்றும் பங்களிப்பு மூலம் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இதன்மூலம்,  இளம் தலைமுறையினருக்கு வெற்றி மற்றும் அதிகாரமளிக்கும் கதையை தனது சாதனைகள் மூலம் ஃபரா மாலிக் பன்ஜி அழகாக சொல்லி தருகிறார்.

வளர்ச்சி அடைந்த பாதை:

ஃபரா மாலிக் பன்ஜி, செல்வ குடும்பத்தின் மகளாக பிறந்தாலும், தனது பாட்டனார்,  உருவாக்கிய நிறுவனத்தை இன்று மூன்றாவது தலைமுறையாக மிகச் சிறப்பான முறையில் கட்டிக் காத்து நிர்வகித்து வருகிறார்.  அதன்மூலம் வளர்ச்சி அடைந்த பாதையை அவர் எட்டியுள்ளார். தொழில் அதிபர்களின் பிள்ளைகள் அனைவரும் தங்கள் நிறுவனத்தை சிறப்பான முறையில் கொண்டு செல்கிறார்களா என்ற கேள்வி எழுப்பினால், அதற்கு ஒருசிலர் தவிர என்ற பதில் கிடைக்கிறது. அந்த வகையில் தனது பாட்டனார் தொடங்கிய சிறிய நிறுவனத்தை, இன்று விரிவடைந்த நிறுவனமாக மாற்றி அமைத்துள்ள முஸ்லிம் பெண்ணான ஃபரா மாலிக் பன்ஜியின் சாதனையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: