Monday, May 6, 2024

வெற்றி பெறுவது கடினமே கிடையாது....!

"சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது கடினமே கிடையாது"

-    பயிற்சி வகுப்பில் சேராமல், தேர்ச்சி பெற்ற கிராமத்துப் பெண் சீரத் பாஜி கருத்து  -

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஃப்.எஸ். உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் முதல்நிலை, முதன்மை நிலை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களை தாண்டி, தேர்வில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் வெற்றி பெற வேண்டும். இதில் தகுதி பெறும் நபர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயரிய பணியிடங்களில் அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். 

சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து பொதுவாக இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து இருந்து வருகிறது. அந்த தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். பல நிலைகளை தாண்டி வர வேண்டும். அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். மிகமிக அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். இப்படி பல கருத்துகள் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. 

நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கூட, என்னுடைய நண்பர்கள் சிலர், சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பேச்சு வரும்போது, அதெல்லாம் வசதியானவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் தேர்வு என பொதுவாக கருத்து கூறுவார்கள். மிகவும் கடினமான தேர்வில் வெற்றி பெற்று தேர்வு பெறுவது இயலாத ஒன்று என்றும் நண்பர்கள் பேசுவதை நான் கேட்டு இருக்கிறேன். எனவே, அதுபோன்ற தேர்வுகள் நம்மால் எழுத முடியாது என நானே கருதிக் கொண்டு, அதற்கான முயற்சியில் சிறிதும் கூட இறங்கவில்லை. ஆனால் தற்போது, இளம் தலைமுறையினர், சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் கூறும் கருத்துகளை கேட்கும்போது, நாமும் முயற்சி செய்து இருக்கலாமே என மனம் நினைக்கிறது. 

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்த முறை ஆயிரத்து 16 பேர் தேர்வு பெற்ற நிலையில் அவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 50 பேர் என்பது சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்த தேர்வில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த கிராமத்து முஸ்லிம் பெண் ஒருவர் தேர்வு பெற்று சாதனை புரிந்து இருக்கிறார். எந்தவித வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்த அந்த பெண், தனது இலட்சிய கனவை எட்டி, பெற்றோர்களுக்கும், அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

சீரத் பாஜியின் சாதனை:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தோல் என்ற தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த முஷ்டாக் பாஜியின் மகள்தான்  சீரத் பாஜி. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த முஷ்டாக் பாஜி, தனது பிள்ளைகள், நன்கு படித்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என அழகிய கனவை தினமும் கண்டு, அதற்கான வசதிகளை, குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தார். 

தந்தையின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், முஷ்டாப் பாஜியின் பிள்ளைகளுக்கும் கல்வி மீது நல்ல ஆர்வம் இருந்து வந்தது. அந்த வகையில், மகள் சீரத் பாஜி, நன்கு படித்து சிறப்பான தேர்ச்சி பெற்றதுடன், உயரிய பணியில் சேர வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார். அந்த ஆர்வத்திற்காக ஒவ்வொரு நாளும், கடின உழைப்பை செலுத்த தொடங்கினார். 

குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்துகொண்டு, தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தொடர்ந்து இருந்துகொண்டே வந்தது. அந்த எண்ணத்தை செயல்படுத்த தொடங்கிய சீரத் பாஜி, இந்த முறை தனது இரண்டாவது முயற்சியில் தேர்வில் வெற்றி பெற்றார்.  யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய தரவரிசையில் அவர் 516வது இடத்தைப் பெற்று, பெற்றோர்களுக்கும், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்ததுடன், அவர்கள் பெருமை அடையும் வகையிலும் தனது வெற்றியின் மூலம் சாதித்துள்ளார். 

ஒரு அழகிய கனவு:

தனது வெற்றிப் பயணம் குறித்து கருத்து கூறியுள்ள சீரத் பாஜி, "கந்தோல் கிராமத்தில் இருந்து நிறைய பெண்கள் கல்வியில் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். சாதித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், சிவில் சர்வீஸ் தேர்வு தேர்ச்சி பட்டியல் வெளியாகும் போதெல்லாம், இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணாவது இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற பெற்றோர்கள் தங்கள் மகள்களை தேர்வில் கலந்துகொள்ள தூண்டுகிறது. இப்படித்தான் என்னுடைய பெற்றோர்களும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி சூழலை மாற்றி அமைத்தனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மற்றும் எனது ஒரு அழகிய கனவு, இன்று நிறைவேறியுள்ளது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களும், தங்கள் கனவுகளைப் பின்பற்ற அதிகமான பெண்களை ஊக்குவிக்கும்” என்று சிவில் சர்வீஸ் தேர்வில் 516வது இடத்தைப் பெற்ற சீரத் பாஜி பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

மேலும், “எதிர்காலத்தில், அதிகமான பெண்கள் யுபிஎஸ்சி தேர்வில் உயர்தரத்துடன் தேர்ச்சி பெற்று பலரின் சாதனைகளை முறியடிப்பார்கள். அதற்கு கடின உழைப்புடன், விடாமுயற்சியும் முக்கியம் என கூறியுள்ள சீரத் பாஜி, பெண்கள் முயற்சி செய்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு  சாதாரண கிராமத்தைச் சேர்ந்த தாமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்துள்ளார். 

பெருமை அடைந்த கிராமம்:

சீரத் பாஜியின் தேர்வு சாதனை மூலம் கந்தோல் கிராம மக்கள் பெருமை அடைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய சீரத் பாஜிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதேபோன்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீரத் பாஜியின் தந்தை முஷ்டாக் பாஜி, “ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சீரத் பாஜியை ஐஏஎஸ் படிப்புக்கு செல்ல தூண்டி வருகிறோம். அவள் ஆர்வம் இழந்த போதெல்லாம் நாங்கள் அவளை ஊக்கப்படுத்தினோம். நம் சமூகத்தில் உள்ள பல மகள்கள் திறமைசாலிகள். பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்காமல் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியும். மகள்கள் முறையாக கல்வி கற்க வேண்டும். இன்று, ஒவ்வொரு கிராமத்திலும் இணையம், பள்ளி மற்றும் கல்லூரி வசதிகள் உள்ளன. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் உயர்படிப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள்" இவ்வாறு கூறியுள்ள முஷ்டாக் பாஜி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து தனது அழகிய செயல் மூலம் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லியுள்ளார். 

பயிற்சி வகுப்பில் சேராமல் சாதனை:

சிவில் சர்வீஸ் தேர்வில் 516வது இடத்தைப் பிடித்து, சொந்த கிராமம் திரும்பிய சீரத் பாஜிக்கு, கிராமத்துப் பெண்கள் கட்டித் தழுவி, தங்களது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், சீரத் பாஜி, எந்தவொரு பயிற்சி வகுப்பில் சேராமல், தனது கடின உழைப்பின் மூலம் மட்டுமே இந்த சாதனையை நிகழ்ச்சி உள்ளார். சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு, தோல்வியை கண்டு தளர்ந்து விடாதப் பண்பு போன்றவற்றால், இந்த சாதனையை அவரால் செய்யப்பட்டுள்ளது. 

பல லட்சம் ரூபாய் செலவழித்து, நல்ல பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சிபெற்று, பின்னர் சிவில்  சர்வீஸ் தேர்வில் கலந்துகொண்டு பலர் வெற்றி பெறும் நிலையில், தனது சுய முயற்சியால், கடின உழைப்பால், நன்கு திட்டமிட்டு, ஒரு பெரிய சாதனையை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் சீரத் பாஜி, செய்து இருப்பது இஸ்லாமிய சமுதாயத்திற்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் கிடைத்த பெருமை என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: