பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவது உறுதினால் அது மிகவும் வெட்கக்கேடானது.....!
மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் நவி பிள்ளை பேட்டி....!!
காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்களை முழுவதும் அழிக்கும் நோக்கில், இஸ்ரேல் முறையாக திட்டமிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மீது மட்டுமல்லாமல், சுகாதார கட்டமைப்புகளை முற்றிலும் அழிக்கும் நோக்கில் இந்த தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலை குறித்து கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்று, சர்வதே விசாரணை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆணையத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை நடத்தி வருகிறது என்பதை உறுதி செய்தார்.
செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட ஒரு புரட்சிகரமான அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு சமம் என்று முடிவு செய்தது. மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் நவி பிள்ளை தலைமையில், ஆணையம் இரண்டு ஆண்டுகள் உன்னிப்பாக ஆதாரங்களைச் சேகரித்து சரிபார்த்து, 18 ஆயிரம் குழந்தைகள் உட்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களின் உயிரிழப்புகளை ஆவணப்படுத்தியது. மேலும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு, சுகாதார வசதிகள் மற்றும் காஸாவின் மிகப்பெரிய கருவுறுதல் மருத்துவமனையை முறையாக அழித்தது என்றும் உறுதி செய்தது.
இத்தகைய சூழ்நிலையில், முனீப் கான் என்ற பத்திரிகையாளர் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளையிடம் நடத்திய சிறப்பு நேர்காணல் ஒன்றை, தி இந்து ஆங்கில நாளிதழ் 03.10.2025 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த நேர்காணலை மணிச்சுடர் நாளிதழ் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அழகிய தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அதை மணிச்சுடர் நாளிதழ் வாசர்களின் பார்வைக்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
கேள்வி : காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை தொடர்ந்து, உங்களது முக்கியமான அறிக்கை சட்ட ரீதியாக நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக உங்களுடைய ஆதாரங்கள் குறித்து சர்வதேச சமுதாயம் என்ன நினைக்கிறது. இதன் உடனடியாக தாக்கங்கள் என்னவாக இருக்கும்?
பதில் : எங்களுடைய ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி, அதை முழுமையாக ஆய்வு செய்து, ஒரு இறுதியாக முடிவுக்கு எட்டியது. எனவே சர்வதேச சமுதாயம் ஒருபோதும் தாமதம் செய்யாமல், ஐ.நா.வின் அறிக்கை மீது சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சட்டங்கள் இனப்படுகொலைகளை தடுக்க வேண்டும் என்று உறுதியாக செல்கிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச நீதிமன்றம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் எங்களது அறிக்கை காஸாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டு உண்மை என்பதை உறுதி செய்கிறது. எனவே உலக நாடுகள் இஸ்ரேல் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து காஸாவில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
கேள்வி : உங்களது ஆணையம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குழந்தைகள் 18 ஆயிரம் பேரும், பெண்கள் 10 ஆயிரம் பேரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் என்ன செய்தியை உலகிற்கு சொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் யார் ? எத்தகைய வகையான போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன? உங்களது கண்டுபிடிப்புகளின் உண்மை என்ன?
பதில் : காஸாவில் கொல்லப்பட்டவர்களின் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள், குழந்தைகள், மற்றும் மூத்த குடிமக்கள் ஆவார்கள். பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களின் சதித்திட்டங்களை வெளிச்சப்படுத்தியுள்ளது. ஹாமாஸ் போராளிகளை அழிப்பதற்காக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. மேலும் பிணைக்கைதிகளை விடுக்க வேண்டும் என்றும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பாலஸ்தீன் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே இருக்கிறது.
கேள்வி : காஸாவின் வாழ்க்கை தரம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே ஆண்டில் 75 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் இந்த ஜனநாயக சீர்குலைவு ஏற்பட்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது?
பதில் : இஸ்ரேல் தனது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் ஆயுதங்கள் மூலம் மட்டுமல்லாமல், பட்டினி, ஊட்டச்சத்து குறைப்பாடு, சுகாதார குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காஸாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை ஒரே ஆண்டில் மட்டும் இஸ்ரேல் செய்து முடித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேள்வி : காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனை ஐ.சி.எஃப்.யின் அழிவையும் அறிக்கை ஆவணப்படுத்துகிறது. இது இனப்படுகொலை மரபுகளுக்குள் எவ்வாறு பொருந்துகிறது. மேலும் குழுக்களுக்குள் பிறப்புகளைத் தடுப்பதைத் தடை செய்கிறது?
பதில் : மருத்துவமனையில் இருந்து 4 ஆயிரம் கரு மற்றும் ஆயிரம் விந்துகளின் மாதிரிகளை திரட்டப்பட்டு இருந்தன. இவற்றை இஸ்ரேல் முற்றிலும் சீரழித்துவிட்டது. மேலும் கரு மற்றும் விந்துகளை சேமிக்கும் வங்கிகளையும் இஸ்ரேல் அழித்துவிட்டது. இதன்மூலம் பாலஸ்தீன மக்களின் பிறப்பு விகிதம் திட்டமிட்டு குறைக்கும் வகையில் காரியங்கள் அரங்கேற்றப்பட்டன. பாலஸ்தீன மக்களின் ஜனத்தொகை உயரக் கூடாது என்ற நோக்கதில் இஸ்ரேலிய நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டதை எங்களது ஆணையம் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது.
கேள்வி : கடந்த மே 2025 முதல், உணவு வினியோகம் செய்யும் மையங்களில் மட்டும் ஆயிரத்து 300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எப்படி இனப்படுகொலையை இஸ்ரேல் செய்தது என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறீர்கள் ?
பதில் : நான் ஏற்கனவே சொல்லியது போல பாலஸ்தீன மக்களை கொல்லும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. காஸாவில் இருந்து பாலஸ்தீன மக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது இஸ்ரேலின் நோக்கமாகும். அப்பாவி மக்கள் மீது தாக்குதல், சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல் என பல்வேறு நிலைகளில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
கேள்வி : கடைசியாக உங்கள் அறிக்கையின்படி சர்வதேச சட்டத்தின் கீழ் எத்தகைய நடவடிக்கைளை உலக நாடுகள் எடுக்க வேண்டும். மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் எப்படி, வழக்கின் விசாரணை மேற்கொள்ள வேண்டும்?
பதில் : சர்வதேச விசாரணை ஆணையத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இஸ்ரேலுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விட வேண்டும். இனப்படுகொலைக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும். அத்துடன் இஸ்ரேல் மீது பல்வேறு சர்வேதேச நெருக்கடிகளை விதிக்க வேண்டும். சர்வதேச விசாரணைஆணையம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல நாடுகள் இஸ்ரேலுக்கு வினியோகம் செய்யும் ஆயுதங்கள் மூலம் மட்டுமே காஸாவில் இனப்படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச விசாரணை ஆணையத்தில் ஒரு நீதிபதி இருப்பதில் பெருமைப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அல்லது இராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் இந்தியா உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டால் அது அவமானம் மற்றும் கவலைக்குரிய விஷயமாகும். சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ்
- தமிழில் : சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,
No comments:
Post a Comment