Sunday, May 12, 2024

ஜனநாயகத்தை பாதுகாக்க....!

"தேசிய அரசியலும் இளைஞர்களும்"

ஜனநாயகத்தை பாதுகாக்க போராடும் மூத்த அரசியல் தலைவர்கள்...!


நாடாளுமன்ற 18வது மக்களவைக்கான தேர்தல் களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கும், பின்னர் இரண்டாவது கட்டமாக 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 93 தொகுதிகளில் மூன்றாவது கட்டமாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தற்போது நான்காவது கட்டமாக நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் இருக்கும் 96 தொகுதிகளில் 13.05.2024 அன்று திங்கட்கிழமை, வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்மூலம், மொத்தம் உள்ள 534 தொகுதிகளில் கிட்டத்தட்ட 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள தொகுகளில் வரும் 20, 25 மற்றும் ஜுன் ஒன்றாம் தேதிகளில் அடுத்தடுத்தக் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ள நிலையில், 18வது மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக எதிர்க்கட்சித் தலைவர்களால் மட்டுமல்லாமல், நாட்டு மக்களால் கூட கருதப்படுகிறது. இந்த தேர்தல் சர்வாதிக்காரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்தை பாதுகாக்க நடக்கும் தேர்தல் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. 

மூத்த அரசியல் தலைவர்கள்:

தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள், தங்களது வயது, உடல்நிலை ஆகியவற்றை பொருட்படுத்தால், நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் தழைத்து நிற்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், உறுதியாக அரசியல் களத்தில் இறங்கிப் பணிகளை செய்து வருகிறார்கள். 

குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பதற்கு முன்பும், அறிவிக்கப்பட்ட பின்னும், நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். 82 வயதை எட்டிவிட்ட கார்கே, தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல், நாள் தோறும் மூன்று நான்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, பேசி வருகிறார். ஆங்கிலம், இந்தி, கர்நாடகம் என பல மொழிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றும் மல்லிகார்ஜுன கார்கே, இந்த தேர்தல் நாட்டில் ஜனநாயகம் தழைத்து நிற்க, சர்வாதிகாரம் வீழ நடக்கும் முக்கிய தேர்தல் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இதேபோன்று, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, ஓய்வு எடுத்து வந்தாலும், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற உறுதியில், பீகார் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், முதிய வயதிலும் கூட, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் இருக்காது என உறுதிப்பட கூறி வருகிறார். 

இப்படி, ஒரு பக்கம் மூத்த அரசியல் தலைவர்கள், வேர்வை சிந்தி, அரசியல் களத்தை சந்தித்துவரும் நிலையில், மறுபக்கம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர், ராகுல் காந்தி, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும், 18வது மக்களவைத் தேர்தல் களத்தில் தங்களின் பங்களிப்பை அழகிய பிரச்சாரங்கள் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். இதன்மூலம் இந்தியா முழுவதும் மக்களிடையே தற்போது அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பா.ஜ.க.வை வீழ்த்தும் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என்பது உறுதி. 

தேசிய அரசியலும் இளைஞர்களும்:

பா.ஜக.வின் பெரும் அச்சுறுத்தலுக்கு எதிராக பல கட்சிகள் ஒன்றுப்பட்டு, இந்தியா கூட்டணி உருவாக்கி, தேர்தல் களத்தைச் சந்தித்து வந்தாலும், பல மாநிலங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டு செயல்படவில்லை. இன்றைய மிகப்பெரிய அரசியல் சோகம் என்னவென்றால், சித்தாந்தம் மற்றும் கொள்கை ரீதியாக உறுதியுடன் செயல்படும் தலைவர்கள், தொண்டர்கள் நாட்டில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.  இதன் காரணமாக தான், அடிக்கடி, கட்சி மாறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற சம்பவ நாடகங்கள் அதிகளவு அரங்கேற்றி வருகின்றன. 

எனவே, "இந்தியா" என்ற ஒற்றுமைக் கொடியின் கீழ் ஒன்றிணைந்து, நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடும் கட்சிகள், அவற்றின் தலைவர்களும், தொண்டர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவரையொருவர் சொல்வதைக் கேட்டு, நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் பழகிக் கொள்ள வேண்டும். 

கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மீது அவதூறு கூறி, அவர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தை நமது மாணவர்களும் இளைஞர்களும் எப்படிப் பார்க்கிறார்கள் தெரியுமா? அவை சரியா தவறா? என்ற கேள்வியை முன்வைத்தால், தற்போது இளைஞர்கள் மத்தியில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டால், நேரு குறித்து கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. 

புதிய தலைமுறையைச் சேர்ந்த மிகச் சிலரே தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் ஆர்வமாக உள்ளனர். இரண்டாவதாக, அவர்களில் பெரும்பாலோர் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் ரசனையை திருப்திப்படுத்துகிறார்கள். சமூக ஊடகங்கள் மாணவர்கள், இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன, எனவே புதிய தலைமுறையை அதிலிருந்து பாதுகாப்பது சமூக நலனில் அக்கறைக் கொண்டவர்களின் பொறுப்பாகும். 

கலந்துரையாடல்கள்:

எப்போதும் சமூக ஊடகங்களிலேயே மூழ்கி கிடக்கும் இளைஞர் சமுதாயம், நாட்டில் நடக்கும் அரசியல் விளையாட்டு குறித்து கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். 18வது மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், நாடு உண்மையான வளர்ச்சியை எட்டும் என்பதை உணர வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அனைத்துத் தரப்பு மக்களும், ஒற்றுமையுடன், அமைதியுடன் வாழ, தங்களது பங்களிப்பை இளைஞர் சமுதாயம் தர முன்வர வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

இதேபோன்ற, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை மற்ற கட்சிகளும், நாடு முழுவதும் நடத்த முன்வர வேண்டும். அதன்மூலம், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்தும், நாட்டின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத்தில் நாடு எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு உருவாகும். இந்த வாய்ப்பை அரசியல் கட்சிகள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. சமூக நலனில் அக்கறைக் கொண்டு, சமுதாய அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவது தங்களது கட்டாயக் கடமை என்பதை சமூக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சமுதாய தலைவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: