Sunday, May 5, 2024

தன்னம்பிக்கை தரும் ஒரு வெற்றி பயணம்...!

தையல் கலைஞர் இர்பான் ரசாக், ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறியது எப்படி? தன்னம்பிக்கை தரும் ஒரு வெற்றி பயணம்...!

"வெற்றி என்பது ஒரு பயணம். அது ஒரு இலக்கு அல்ல" என ஒரு அழகிய பழமொழி இருந்து வருகிறது. வாழ்க்கையில் உயர்ந்த இலக்கை அடைய வேண்டுமானால், வெற்றிக்கான பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த பயணத்தை இடையில் நிறுத்தக் கூடாது. பல்வேறு துயரங்களை கண்டு அச்சம் அடையாமல், பயணத்தை தொடர்ந்தால், நிச்சயம், அது ஒரு வெற்றி பயணமாக அமையும். 

வாழ்க்கையில், மிகப்பெரிய அளவுக்கு சாதித்த மக்கள், தங்களுடைய வாழ்க்கையில், தங்களுடைய இலட்சியத்தில், எப்போதும் உறுதியாக இருந்து பயணத்தை தொடர்ந்துகொண்டே வந்து இருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடியும். பல்வேறு நெருக்கடிகள், தடங்கல்கள், பிரச்சினைகள் என அனைத்தையும் துணிவுடன் சந்தித்து, அந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கண்டு, வாழ்க்கையில் சிலர் சாதித்து இருக்கிறார்கள். 

அப்படி சாதித்த சிலரில், கர்நாடகா மாநிலம் பெங்களூருரை சேர்ந்த இர்பான் ரசாக்கும் ஒருவர் ஆவார். அவரது வெற்றி பயணம், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கையை தரும். புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும். ஒரு வெற்றி பயணத்தின் அழகிய பாதைகளை நாமும் கொஞ்சம் அறிந்துகொள்வோம். 

தையல் கலைஞர் இர்பான் ரசாக்:

வாழ்க்கையில் உத்வேகம் பெற எண்ணற்ற கதைகள் உள்ளன. அந்த கதைகளில் ஒன்றுதான், இர்பான் ரசாக்கின் எழுச்சியை விவரிக்கும் மிகவும் உத்வேகம் தரும் கதைகளில் ஒன்றாகும். இர்பான் ரசாக் தற்போது ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் திட்டங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். மேலும், இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவராகவும் உயர்ந்துள்ளார். 

இந்தளவுக்கு அவர் உயர, விதைக்கப்பட்ட விதைகளும், ஆழமான வேர்களும், எவ்வளவு அடக்கமானவையாக இருந்து எப்படி வளர்ச்சி பெற்றன? அதை அறியும்போது உண்மையில் ஆச்சரியமாகதான் உள்ளது. இர்பான் ரசாக் ஒரு சிறிய தையல் கடையில், தனது தொழிலைத் தொடங்கினார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

1953-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இர்ஃபான், தனது தந்தை ரசாக் சத்தார், பெங்களுரூவில் நடத்தி வந்த ஒரு சிறிய தையல் கடையில், தையல்காரராக வேலை செய்து வந்தார். தையல் கலைஞராக வாழ்க்கையை தொடங்கினாலும், மிகப்பெரிய அளவுக்கு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், சிந்தனை எப்போதும் இர்பான் ரசாக்கிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. இதற்கு அவரது தந்தை நல்ல அடித்தளம் ஒன்றை அமைத்து  கொடுத்தார். இர்பானின் தந்தை சர்தார் அமைத்து கொடுத்த பிரெஸ்டீஜ் குழுமத்தின் அடித்தளத்தை கொண்டு பின்னர், இர்பான் ரசாக் தனது திறமையால் ஒரு புகழ்பெற்ற பிராண்டாக அதை மாற்றினார். 

ரியல் எஸ்டேட் துறையில் பெரும் சக்தி:

இர்பான் ரசாக்கின் வழிகாட்டுதலின் கீழ், ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் திட்டங்கள், இன்று இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரும் சக்தியாக மாறியுள்ளது. நிறுவனம் குடியிருப்பு, வணிகம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. தற்போது வரைஇ 285 திட்டங்களை இது நிறைவு செய்துள்ளது. தற்போது மேலும் 54 வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

இர்பான் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர், இப்போது ஒரு பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்ட சொத்துகளுக்கு அதிபர்களாக உள்ளனர், இது தோராயமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு சமமானதாகும். நிறுவனத்தின் பங்குகள் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளன, இர்பான் ரசாகின் நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய பட்டியலிடப்பட்ட சொத்து நிறுவனமாக மாறியது.

வெற்றிக்கு என்ன வழி?

இர்பான் ரசாக் தனது இரண்டாவது ரியல் எஸ்டேட் திட்டத்தை 1990-இல் விற்ற பிறகு, பிரஸ்டீஜ் குழுமத்தை நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் பிராண்டாக மாற்ற முடிவு செய்தார். அவர் தனது வெற்றிக்கு இரண்டு விஷயங்கள் காரணம் என கூறுகிறார். ஒன்று அர்ப்பணிப்பு மற்றென்று தொலைநோக்கு பார்வையாகும். வேலைக்கான அவரது அர்ப்பணிப்பு அவரது வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது. அதேநேரத்தில் தெளிவான பார்வை அவரது வணிகத்தை விரிவுபடுத்த உதவியது.

ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் திட்டங்களின் தடம் பெங்களூரைத் தாண்டி சென்னை, கொச்சி, கோழிக்கோடு, ஹைதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு நீண்டுள்ளது. அவரது வணிக முயற்சிகளுக்கு தனி கவனம் செலுத்தும் இர்பான் ரசாக், சாகச விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.  இது, அவரது சாகச உணர்வையும் வாழ்க்கையின் ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது.

இர்பான் ரசாகின் சகோதரர்கள் ரிஸ்வான், நௌமான், ஆகியோரும், தங்களது மூத்த சகோதரருக்கு பக்க பலமாக இருந்து வருவதால், ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம் வளர்ச்சி மேல் வளர்ச்சி அடைந்தே வருகிறது. 

ஒரு தையல் கலைஞர் மிகப்பெரிய அளவுக்கு உயர என்ன காரணம்? என ஆய்வு செய்தால், அதற்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்  கடின உழைப்பு இருந்தால் மட்டுமே முடியும் என்ற விளக்கம் கிடைக்கிறது. வாழ்க்கையில் சாதிக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தற்போதைய நிலையை குறித்து சிறிதும் கவலைப்படாமல், உங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்து, வெற்றியை நோக்கி பயணம் செய்யுங்கள். அந்த பயணத்தை வெற்றி பயணமாக மாற்ற கடினமாக உழைத்து மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாறுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: