Saturday, October 4, 2025

காஸா - ஹமாஸ்.....!

  "காஸாவும், ஹமாஸ் போராளிகளும் "

உலகின் உள்ள அழகிய நகரங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும் இருக்கும் காஸாவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் சீரழித்துவிட்டு வருகிறது. காஸா மக்களை துன்பங்களுக்கு மேல் துன்பங்களை சுமக்கும் வகையில் இஸ்ரேல் பல்வேறு கொடுமைகளை, திட்டங்களை, சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. உலக மக்களின் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து இஸ்ரேல் அட்டகாசம் செய்து வந்தாலும், காஸா மக்களில் பெரும்பாலானோர், தங்களுடைய சொந்த மண்ணைவிட்டு வெளியேற மறுத்து வருகிறார்கள். தற்போது போர் நிறுத்தம் செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் காஸா குறித்தும் ஹமாஸ் போராளிகள் குறித்தும் பல சுவையான தகவல்களை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். 

அழகிய காஸா :

காஸா பகுதி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் காஸா, மேற்கு ஆசியாவின் தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலஸ்தீன பிரதேசமாகும். இது உலகளவில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். தென்மேற்கில் எகிப்தையும் கிழக்கு மற்றும் வடக்கில் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்டுள்ளது. தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் கொண்ட பகுதி காஸா நகரம் ஆகும். சுமார் 21 லட்சம் மக்கள் வாழும் காஸாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் 44 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.

காஸாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ஆவார்கள். ஒரு சிறிய பாலஸ்தீனிய கிறிஸ்தவ சிறுபான்மையினர் காஸாவில் வசித்து வருகிறார்கள். காஸா பல ஆண்டுகளாக தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இங்கு 46 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் இருந்து வருகிறது. இளைஞர்களில் 70 சதவீதம் பேர் வேலையில்லாமல் வாழ்க்கையில் வேதனைகளை சுமந்துகொண்டே இருக்கிறார்கள். 

இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் மையப் புள்ளி :

1990 ஆண்டுகளில் பாலஸ்தீன ஆணையம் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதால், காஸா எகிப்திய மற்றும் இஸ்ரேலிய ஆட்சி உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளின் கீழ் உள்ளது. இஸ்ரேலுக்கும் காஸாவில் ஆளும் அதிகாரமான ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள், பதட்டங்கள் நிலவி வருவதால், காஸா முற்றுகைகள், மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. காஸா பகுதி இஸ்ரேலிய -பாலஸ்தீன மோதலின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. குடியேற்றங்கள், எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் வளங்களை அணுகுவது போன்ற பிரச்சினைகள் சிக்கலுக்கு பங்களிக்கின்றன. அவ்வப்போது வன்முறை வெடிப்புகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்த கவலைகளுடன் நிலைமை நிலையற்றதாகவே உள்ளது. 

ஹமாஸ் போராளிகள்  : 

ஹமாஸ் இயக்கம், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் என்ற இராணுவப் பிரிவைக் கொண்ட ஒரு பாலஸ்தீனிய சன்னி இஸ்லாமிய அமைப்பாகும். 1987 ஆம் ஆண்டு பாலஸ்தீன இஸ்லாமிய அறிஞர் அகமது யாசினால் நிறுவப்பட்ட ஹமாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான முதல் இன்டிபாடாவின் போது உருவானது. இதன் முதன்மை நோக்கம் பாலஸ்தீனத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதாகும். அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு என்பது ஹமாஸின் ஆயுதப் பிரிவாகும். இது இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகும். பாலஸ்தீன சட்டமன்றத்தில் பெரும்பான்மையை வென்ற பிறகும், போட்டி பிரிவான ஃபதாவிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகும், 2007 முதல் ஹமாஸ் காஸா பகுதியை ஆட்சி செய்து வருகிறது.

இஸ்ரேலுடனான மோதல் : 

கடந்த 2008, 2009, 2012, 2014, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த மோதல்கள் உட்பட ஹமாஸ் போராளிகள் குழு, இஸ்ரேலுடன் பல போர்களில் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் நடத்தியது.  ஹமாஸின் 1988 சாசனத்தில் யூத எதிர்ப்பு மொழி இருந்தது. ஆனால் அதன் 2017 சாசனம் இந்த மொழியை நீக்கி சியோனிசத்திற்கு எதிரான எதிர்ப்பில் கவனம் செலுத்தியது. 1967 எல்லைகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு ஈடாக 10 ஆண்டு ஹுட்னா (போர் நிறுத்தம்) உட்பட இஸ்ரேலுடன் போர் நிறுத்தங்களை குழு முன்மொழிந்துள்ளது. ஜூலை 2024 இல் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் காஸாவில் ஹமாஸின் தலைவரான யஹ்யா சின்வார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஹமாஸின் தலைமை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. பின்னர் 2024 அக்டோபரில் இஸ்ரேலிய துருப்புக்களால் சின்வார் கொல்லப்பட்டார். முகமது சின்வார் உட்பட குழுவின் தற்போதைய தலைமை இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

ஈமானில் உறுதி :

பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வந்தாலும், ஹமாஸ் போராளிகள் தங்களுடைய ஈமானில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்கள். இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை குறையவே இல்லை. அவர்களுடைய வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருவது இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காஸா மக்களின் துயரங்களை துடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கிலும் ஹமாஸ் போராளிகள் தங்களுடைய உயிர்களையும் துச்சம் என மதித்து, தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள். காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்களும் ஈமானின் மிகமிக உறுதியாக இருந்து வருவதை, இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு அவர்கள் சொந்த மண்ணைவிட்டு செல்லாமல் இருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். காஸா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து நிச்சயம் விடுபடும். அதற்கு முக்கிய காரணம், காஸா மக்களின் உறுதியான ஈமான் என்றே கூற வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: