" ஒரே மாதத்தில் உம்ரா செய்த சுமார் 7 கோடி முஸ்லிம்கள் "
புனித ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தற்போது உலக முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் மக்காவில் உள்ள இறை இல்லத்தை காணும் பாக்கியத்தைப் பெற வேண்டும் என ஆசைக் கொள்கிறார்கள். இதேபோன்று, மதீனாவிற்கு சென்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அல் மஸ்ஜித் அல் நபவிக்கு சென்று தொழுகை நடத்தி ஜியாரத் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதன் காரணமாக மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு வரும் முஸ்லிம் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுமார் 7 கோடி பேர் வருகை :
இந்நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு புனித மஸ்ஜித்துகளின் விவகாரங்களுக்கான பொது ஆணையம், ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு ஜுமாதா அல்-தானி மாதத்தில் 68 புள்ளி 7 மில்லியன் (சுமார் 7 கோடி பேர்) மக்கள் இரண்டு புனித மஸ்ஜித்துகளுக்கு வருகை தந்ததாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2 புள்ளி 1 மில்லியன் (21 இலட்சம்) பார்வையாளர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது.
சுமார் 30 மில்லியன் (3 கோடி) வழிபாட்டாளர்கள் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமுக்கு வருகை தந்ததாகவும், அவர்களில் 94 ஆயிரத்து 700 பேர் ஹிஜ்ர் இஸ்மாயீலில் (கஃபாவிற்கு அருகில் உள்ள அரை வட்டப் பகுதி) தொழுகை நிறைவேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 புள்ளி 1 மில்லியன் (2 கோடியே 31 லட்சம்) பேர் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அல் மஸ்ஜித் அல் நபவிக்கும் 1 புள்ளி 3 மில்லியன் (13 லட்சம்) பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மஸ்ஜித்தில் உள்ள ரவ்தா அல்-ஷரீஃபிற்கும் வருகை தந்ததாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 புள்ளி 3 மில்லியன் (23 லட்சம்) மக்கள் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவரது இரண்டு தோழர்களுக்கும் சலாம் தெரிவித்தனர்.
உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகமும், இரண்டு புனித மஸ்ஜித்துகளின் பராமரிப்புக்கான பொது ஆணையமும், ஜுமாதா அல்-தானி மாதத்தில் மட்டும் சவூதி இராச்சியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்த உம்ரா யாத்திரிகர்களின் மொத்த எண்ணிக்கை 11 புள்ளி 9 மில்லியனைத் (ஒரு கோடியே 19 லட்சம்) தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளன. இது யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகளின் செயல்திறனால் எளிதாக்கப்பட்டு, உம்ரா யாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.
ஜுமாதா அல்-தானி மாதத்தில் மட்டும் சவூதி இராச்சியத்திற்கு வெளியே இருந்து வந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை 1 புள்ளி 7 மில்லியனைத் (17 லட்சம்) தாண்டியுள்ளதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது வருகை நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், சடங்குகளை எளிதாகச் செய்வதற்கும் பங்களித்த டிஜிட்டல் வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த தளவாட சேவைகளின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விஷன் 2030 இலக்குகள் :
உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, ஹஜ், உம்ரா மற்றும் வருகை அமைப்பை மேம்படுத்துவதற்கும், விஷன் 2030 இலக்குகளை அடைவதற்கும் இராச்சியம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இரண்டு புனித மஸ்ஜித்துகளுக்குச் செல்வதை எளிதாக்குவதன் மூலமும், யாத்திரிகர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் தருணம் முதல் இராச்சியத்திலிருந்து புறப்படும் வரை அவர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு விரிவான ஆன்மீக அனுபவத்தை வழங்குவதன் மூலமும் அடையப்படுகிறது.
யாத்திரிகர்களுக்கு மென்மையான மற்றும் அதிக நம்பிக்கையூட்டும் அனுபவத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளை மேம்படுத்துவதுடன், இரண்டு புனித மஸ்ஜித்துகளிலும் மற்றும் பயணத்தின் பல்வேறு இடங்களிலும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகமும் ஆணையமும் இணைந்து கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment