மக்களின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் விவாதம்....!
வந்தே மாதரம் விவாதம் மூலம் காற்று மாசு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா?....!!
மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. ஹாரீஸ் பீரான் கேள்வி....!!!
புதுடெல்லி, டிச.11- முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திரும்பும் நோக்கில் நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் விவாதம் நடத்தப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் ஹாரீஸ் பீரான் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 9.12.2025 செவ்வாய்கிழமையன்று வந்தே மாதரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வழக்கறிஞர் ஹாரீன் பீரான் பங்கேற்று பேசினார். அப்போது வந்தே மாதரம் விவாதம் மூலம் காற்று மாசு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார். ஹாரீஸ் பீரான் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:
வேற்றுமையில் ஒற்றுமை :
விவாதத்தில் பங்கேற்று உரை ஆற்ற வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் வாழும் நம் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், வேற்றுமையில் ஒற்றுமையாகும். நாட்டில் வாழும் அனைவரும் பன்முகத்தன்மை என்ற கொள்கையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவை போல, உலகில் எந்த நாடும் இருக்காது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலமாகும். உலகிற்கு சிறந்த நாடாக எடுத்துக்காட்டும் சிறந்த விஷயமாக உள்ளது. பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதுபோன்ற ஒரு அழகிய நிலையை, நாட்டை, உலகின் எந்தொரு நாட்டிலும் நாம் காண முடியாது.
இதனை அடிப்படையாக கொண்டே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மையின் சாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில், பல்வேறு கொள்கைள், சிந்தாந்தங்கள் இருப்பது இயற்கையாகும். நம் அனைவரின் மத்தியில் அரசியல், சமூக கருத்துகள் வேறுபட்டு இருப்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மிடையே சிந்தாந்தக் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையை, பல்வேறு சவால்களை நமது முன்னோர்கள் சந்தித்து இருக்கிறார்கள். அத்தகைய அரசியல் சவால்களை நாமும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நாட்டு மக்களை பிரித்து வாழாமல், அனைவரும் இணைந்து வாழும் வகையில் நல்ல வழிகளை நமக்கு நமது முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக தொடர்ந்து பல்வேறு வழிகளை அந்த நேரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒற்றுமையை சிதைக்கும் சம்பவங்கள் அரங்கேற்றம் :
நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஆலோசனை செய்து அவற்றிற்கு தீர்வு கண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக அவர்கள் செயல்பட்டார்கள். நமது முன்னோர்கள் எடுத்த பல முடிவுகளில், தீர்மானங்களில் இந்த நிலை எதிரொலித்தது. ஆனால், தற்போது எதிர்பாராத விதமாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் தற்போது உடைக்கப்பட்டு வருகின்றன.
என்னை பொருத்தவரை வந்தே மாதரம் தொடர்பான விவாதம் என்பது ஒரு நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு நடவடிக்கையாகும். நாட்டு சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப இந்த விவாதம் நடத்தப்படுகிறது.
மக்களின் கவனத்தை திசை திருப்ப விவாதம் :
அதற்காக இரண்டு முக்கிய காரணங்களை நான் கூற விரும்புகிறேன். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இந்த விவாதம் நடத்தப்படுகிறது. நாட்டில் எந்தொரு தேர்தல் நடைபெற்றாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று செங்கோலும் மக்களவையில் வைக்கப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அது தற்போது நாடாளுமன்ற அம்சங்களில் ஒன்றாக மாற்றப்படுகிறது. செங்கோல் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, நாட்டின் வரலாற்றை மாற்றி அமைக்கும் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் எந்தொரு தவறான அம்சம் ஏற்பட்டு இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு என தற்போது குற்றம்சாட்டுவது வழக்கமாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை பார்த்தால், இதனை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும் இன்டிகோ விமானச் சேவை பாதிப்புக்கு நேரு தான் காரணம் என ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இ.யூ.முஸ்லிம் லீகிற்று பாடம் கற்பிக்க வேண்டாம் :
பண்டிட் நேரு மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. பன்முகத்தன்மையை குறித்து நமக்கு யாரும் பாடம் கற்பிக்க தேவையில்லை. எங்களுடைய இயக்கமான முஸ்லிம் லீக் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இயக்கமாகும். நாங்கள் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம். தற்போது நாட்டில் பல பிரச்சினைகள் வரிசையாக நின்றுக் கொண்டு இருக்கின்றன.
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் நிறுவியஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில் இருந்து நான் வருகிறேன். அவர் அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் உறுப்பினராக இருந்தவர். அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் இருந்து வருகிறது. இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இரு அவைகளில் இருந்தும் பணிகளை ஆற்றி வருகிறார்கள்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் :
டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு சென்று வந்தே மாதரம் பாடினால், காற்று மாசு குறைந்துவிடுமா?. காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா?. காற்று மாசு பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாகும்.உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகும். இதேபோன்று ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது மற்றோரு கம்பீரமான பிரச்சினையாகும்.
கடைசியாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். வந்தே மாதரம் விவாதம் மூலம் டெல்லியில் உள்ள காற்று மாசு குறைய வேண்டும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது நிறுத்தப்பட வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் குறைய வேண்டும். விலைவாசி உயர்வு கட்டுக்குள் அடங்க வேண்டும்.
இவ்வாறு ஹாரிஸ் பீரான் எம்.பி. பேசினார்.
சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment