"
தாய்க்காக ஒரு வழக்கு "
- மனதை நெகிழ வைக்கும் ஓர் உண்மை சம்பவம் -
உலகில் பொதுவாக ஒரு பிரச்சினைக்காக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்லும்போது அது ஒரு பரம்பரை சொத்து அல்லது நிலத் தகராறுகளைப் பற்றியதாகவே இருக்கும். அப்படி தான் உலகில் தற்போது மக்கள் நீதிமன்றங்களை தேடிச் சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள். சொத்து, நிலத் தகராறு பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகள் நீதிமன்றப்படிகளை ஏறி இறங்குகிறார்கள். ஆனால், அதற்கு உடனடியாக எந்த தீர்வும் கிடைப்பது இல்லை. வாழ்நாள் முழுவதும் நீதிமன்றப்படிகளை ஏறி இறங்கி, தங்களுடைய ஆயுளை கழித்துவிடுவதுடன் பகையையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
சொத்து, நிலத் தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளால், உறவு முறைகள் கூட சீர்குலைந்துவிடுகின்றன. பகை உணர்வு வளர்ந்து குடும்ப உறவுகள் அழிந்து போகின்றன. இதன் காரணமாக பெற்ற தாய், தந்தையை கூட சரியாக கவனிக்க முடியாமல் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் போக்கு பொதுவாக இல்லை என்றே கூறலாம். ஒருசிலர் இஸ்லாமிய நெறிமுறைகளை நன்கு அறிந்துகொள்ளாமல், தாய், தந்தையின் வலிமையை புரிந்துகொள்ளாமல், முதியோர் இல்லங்களில் அவர்களை சேர்த்துவிட்டு, பின்னர் வருத்தம் அடைகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சவூதி அரேபியாவில் ஒரு தாய்க்காக உடன்பிறந்த இரண்டு சகோதர்கள் நீதிமன்ற கதவை தட்டிய உண்மை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனதை நெகிழ வைக்கும் அந்த உண்மை சம்பவத்தை அறிந்தால், இஸ்லாம் எந்தளவுக்கு தாய், தந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
தாயைப் பராமரிப்பதற்கு வழக்கு :
வாழ்க்கை என்ற ஒரு அழகிய குடும்பமாகும். அந்த குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் சில பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, அது பரம்பரை சொத்து அல்லது நிலத் தகராறுகளைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் சவூதி அரேபியாவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் முற்றிலும் மாறுபட்டது. மிகவும் வித்தியாசமானது. உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது.
ஹிசாம் அல் காம்டி என்ற சவூதி அரேபிய முதியவர் தனது சொந்த தம்பிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிற்க வேண்டியிருந்தது. இதேபோன்று தம்பியும் சொந்த மூத்த சகோதரர் ஹிசாம் அல் காம்டிக்கு எதிராக நீதிமன்றப்படிகளை ஏற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பணத்திற்காக, சொத்திற்காக சண்டையிடவில்லை. நீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக, தங்கள் பலவீனமான வயதான தாயைப் பராமரிப்பதற்கு தாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் வலியுறுத்தினர்.
ஹிசாம் அல் காம்டி தனது தாயை மிகவும் நேசித்தார். தனது தாய் எப்போதும் தனது உயிர் என்று கூறி வந்தார். எனவே, வயதான தனது மூத்த தாயை தொடர்ந்து பராமரிக்க விரும்புவதாக கூறி நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டார். ஆனால் அவரது தம்பி ஹிசாம், தனது மூத்த சகோதரர் ஹிசாம் அல் காம்டிக்கு ஏற்கனவே வயதாகிவிட்டது. தங்களது தாயை வயதான தம்முடைய அண்ணன் ஹிசாம் அல் காம்டியால் சரியாக பராமரிக்க முடியாது. கவனிக்க முடியாது. எனவே அவருக்கு தாய் தேவை என்று நம்புவதை ஏற்கவில்லை என்று நீதிபதியிடம் கூறினார். இப்படி இருவரும் மாறி மாறி தங்களுடைய தாய்க்காக நீதிமன்றத்தில் வாதாடினார்கள். பாச போராட்டம் நடத்தினார்கள்.
இரு சகோதரர்களும் தங்கள் தாயைப் பராமரிப்பது குறித்தும் அவருக்கு மரியாதை அளிப்பது குறித்தும் நீதிபதியிடம் மன்றாடியதால் நீதிமன்ற அறை உணர்ச்சிவசப்பட்டது. நீதிமன்றத்திற்கு வந்த மற்றவர்கள் கூட உணர்ச்சி வசப்பட்டார்கள். தாய்க்காக இப்படி ஒரு போராட்டமா என பேசிக் கொண்டார்கள்.
ஒரு தாயின் பாசம் :
இப்படி இரு சகோதரர்களும் தாய்க்காக நீதிமன்றத்தில் வாதாடி அன்பு போராட்டம் நடத்திக் கொண்டு இருந்ததால், என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் நீதிபதி குழப்பம் அடைந்தார். தாய்க்காக நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய இரு சகோதரர்களையும் பார்த்து, அவர்களது தாயை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்றத்திற்கு வந்த இரு சகோதரர்களின் தாயை அழைத்து பேசிய நீதிபதி, தனது வயதான காலத்தில் இரண்டு மகன்களில் யார் கூட இருக்க விரும்புகிறார் என்பதை அவரே தேர்வு செய்யும்படி அறிவுறுத்தினார்.
அப்போது நீதிபதியுடன் அந்த அன்பு, பாச தாய் சொன்ன பதில் அனைவரையும் தொட்டது. தம்முடைய இரண்டு மகன்களும் தம்முடைய இடது மற்றும் வலது கண்களைப் போன்றவர்கள் என்பதால் தன்னால் தேர்வு செய்ய முடியாது என்று அந்த தாய் சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். அந்த பெண்மணி உண்மையான தாய் அல்லவா. அதனால் தான், தாம் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் அவர் உயிருக்கு உயிராக நேசித்து அன்பு பாராட்டினார். இதன் காரணமாக யாருடன் இருக்க விரும்கிறார் என்பதை அவரால், தேர்வு செய்ய முடியவில்லை.
நீதிபதியின் தீர்ப்பு :
பாச போராட்டம் நிறைந்த இந்த வழக்கில் ஒரு பாசம் நிறைந்த தாயால் தீர்மானிக்க முடியாததால், நீதிபதி வயது உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், வயதான காலத்தில் எப்படி அந்த தாய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இறுதியில் நீதிமன்றம் இளைய சகோதரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அவரது இளைய வயது மற்றும் அதிக வலிமை காரணமாக மூத்த வயதான தாய் அவரிடம் இருக்க வேண்டும். இளைய மகன் தான் தாயை பராமரிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். நீதிபதியின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோது, மூத்த சகோதரர் ஹிசாம் அல் காம்டி கண்ணீர் விட்டு அழுதார். இதனால், நீதிமன்ற சூழ்நிலை சோகமாக மாறியது. நீதிமன்றத்திற்கு வந்திருந்த அனைவரின் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
கோபம் அல்லது பயம் காரணமாக மூத்த சகோதரர் ஹிசாம் அல் காம்டி சாதாரணமாக அழவில்லை. ஆனால் தனது வயதான தாயாரின் மீதமுள்ள நாட்களில் தொடர்ந்து சேவை செய்யும் விலைமதிப்பற்ற வாய்ப்பை இழந்துவிட்டதாக உணர்ந்ததால் அவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாயின் காலடியில் சொர்க்கம் :
தாயின் காலடியில் சொர்க்கம் என்பது இஸ்லாமியப் போதனைகளில் ஒரு முக்கியமான போதனையாகும். இதன் பொருள் தாயை மதித்து, அன்பு காட்டி, அவருக்கு சேவை செய்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் என்பதாகும். இது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதல்ல. மாறாக தாயின் மகிமையையும் அவரைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாகும்.
ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன இந்த "தாயின் காலடியில் சொர்க்க உண்டு" என்ற அழகிய பொன்மொழி பெற்றோருக்கு மரியாதை செலுத்துவதன் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது. தாயின் சேவையில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே தாயை கஷ்டப்படுத்தால் அன்புடன் மரியாதையுடன் நடத்த வேண்டும். தாயை மகிழ்விப்பதும், அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வதும், அவரைப் பாதுகாப்பதும், சொர்க்கத்திற்கான வழிகள் ஆகும். முஸ்லிம் கலாச்சாரத்தில் தாயின் மேம்மையையும், அவரை மதிப்பதன் அவசியத்தையும் உணத்தும் இந்த முக்கிய போதனை அறிந்து இருந்த காரணத்தினால் தான், ஹிசாம் சகோதரர்கள் தங்கள் தாய்க்காக நீதிமன்ற கதவைத் தட்டி பாசத்துடன் கூடிய சட்டப் போராட்டம் நடத்தினார்கள் என்றே கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment