Friday, December 26, 2025

மலபார் என்ற பிம்பத்தை உடைத்து வரலாற்றுச் சாதனை....!

மலபார் என்ற பிம்பத்தை உடைத்து உள்ளாட்சி அமைப்புகளில் 220 இடங்களைக் கைப்பற்றி இ.யூ.முஸ்லிம் லீக்  வரலாற்றுச் சாதனை....!

திருவனந்தபுரம், டிச.27- கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது நீண்ட காலப் பிம்பத்தை உடைத்து 220 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை புரிந்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம்கள் மற்றும் மலபார் பகுதிக்கு மட்டுமேயான கட்சி' என்ற நீண்டகாலப் பிம்பத்தை உடைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  ஏழு தெற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.  அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட முக்கியப் பதவிகளை வென்றுள்ளது.

இ.யூ.முஸ்லிம் லீக் சாதனை :

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் நான்கு நகராட்சிகளில் தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஆறு நகராட்சிகளில் துணைத் தலைவர் பதவியையும், பஞ்சாயத்துகளில் ஒன்பது தலைவர் பதவிகளையும், 15-க்கும் மேற்பட்ட துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றிய வரலாறு படைத்துள்ளது. 

ஆக மொத்தத்தில், இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 220 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது அந்தப் பகுதியில் கட்சிக்கு 79 சதவீத வெற்றி விகிதத்தை அளித்துள்ளது. பாரம்பரிய மலபார் தளத்திற்கு அப்பால் இ.யூ.முஸ்லிம் லீக் இத்தகைய தேர்தல் பலத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

கேரள பொதுச் செயலாளர் சலாம் கருத்து :

கேரளாவில் இ.யூ.முஸ்லிம் லீக் புரிந்துள்ள வரலாற்று சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ. சலாம், "முன்பும் தெற்கு மாவட்டங்களில் எங்களுக்கு சில பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் எங்கள் அமைப்பு பலம் போதுமானதாக இல்லை. இந்த முறை, நாங்கள் தலைமைத்துவத்தை வலுப்படுத்தினோம். அமைப்பிற்குப் புத்துயிர் அளித்தோம். மேலும் எங்கள் கொள்கை மற்றும் அணுகுமுறையை மாற்றி அமைத்தோம்" என்று கூறினார்.

பாரம்பரிய ஆதரவுத் தளத்திற்கு அப்பால், சமூகத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத மதச்சார்பற்ற பிரிவினரிடையேயும் இயக்கம் இப்போது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று இ.யூ.முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் முகமது ஷா தெரிவித்தார்.  "இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்கள் உட்பட பல உள்ளாட்சி அமைப்புகளில் நாங்கள் நேரடியாக எஸ்.டி.பி.ஐ.க்கு எதிராகப் போட்டியிட்டு அவர்களைத் தோற்கடித்தோம். இதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்" என்று முகமது ஷா கூறினார்.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு :

மாநிலம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இ.யூ.முஸ்லிம் லீக் மொத்தம் 53 லட்சத்து 69 ஆயிரத்து 745 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 9 புள்ளி 77 ஆகும். இ.யூ.முஸ்லிம் லீக்கின் இந்த வெற்றிக்கு, யுடிஎஃப்-க்கு ஆதரவாக முஸ்லிம்கள் ஒன்றுபட்டதும், யுடிஎஃப் மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமிக்கு இடையே இருந்த முறைசாரா புரிதலும் ஒரு பகுதி காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதுவே இந்தப் பகுதிகளில் இயூ.முஸ்லிம் லீக்கின் முன்னோடியில்லாத வெற்றிக்கு நேரடியாகப் பங்களித்தது. 

இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இடதுசாரி ஜனநாயகக் கட்சிக்கு எதிரான முஸ்லிம் ஒருங்கிணைப்பு ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்திருப்பதைக் காட்டியது. ஜமாத்-இ-இஸ்லாமி  ஐக்கிய ஜனநாயக முன்னணி அல்லாத முஸ்லிம் வாக்காளர்களை லீக்கிற்கு வாக்களிக்கத் தூண்டியது. மேலும் பல இடங்களில் எஸ்.டி.பி.ஐ.யை நடுநிலையாக்க உதவியது" என்று யு.டி.எஃப். தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்தார். 

மூத்த ஊடகவியலாளர் கருத்து :

தெற்கு மாவட்டங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி பலவீனமடைந்ததும் ஒரு பங்களிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அங்கமான 'வீக்ஷணம் டெய்லி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரான என். ஸ்ரீ குமார், "ஒரு தசாப்த காலமாக எதிர்க்கட்சியில் இருந்த பிறகு, கூட்டணிக் கட்சிகளுடன் வெல்லக்கூடிய இடங்களைப் பகிர்ந்து கொள்ள காங்கிரஸ் விருப்பம் காட்டியது. கூட்டணியை இயக்கவியலை மறுவடிவமைத்துள்ளது" என்று இ.யூ.முஸ்லிம் லீகின் வெற்றி குறித்து கருத்து கூறியுள்ளார். மேலும், "இந்த வெற்றியின் சிற்பி வி.டி. சதீசன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள், இடதுசாரி சார்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் அனைவரும் பகிர்ந்து கொள்ள இடம் உள்ள பிற அமைப்புகளுக்கான பொதுவான தளமாக யு.டி.எஃப்.ஐ  அவர் மறுவடிவமைத்து வருகிறார்" என்றும்  அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று கருத்து கூறியுள்ள ஆர்.எஸ்.பி. மாநில செயலாளர் ஷிபு பேபி ஜான், தெற்கில் இ.யூ.முஸ்லிம் லீக்கின் வெற்றி, முஸ்லிம் அல்லாத ஆதரவையும் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், யு.டி.எஃப்-க்குள் வலுவான அமைப்பு மற்றும் நல்லுறவு  இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு தெளிவாக பயனளித்துள்ளது என்று கேரள காங்கிரஸ் (ஜே) தலைவர் பி.ஜே. ஜோசப் தெரிவித்துள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: