எஸ்.ஐ.ஆர். என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை பின்வாசல் வழியாக மறைமுகமாக அமல்படுத்தும் திட்டமாகும்....!
மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி. அப்துஸ் ஸமத் சமதானி குற்றச்சாட்டு....!!
மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்...!!!
டெல்லி, டிச.10-எஸ்.ஐ.ஆர். திட்டம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை பின்வாசல் வழியாக செயல்படுத்தும் ஒரு திட்டமாகும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்னானி மக்களவை உறுப்பினர் டாக்டர் ஏ.பி.அப்துஸ் ஸமது சமதானி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவாதம் 09.12.2025 அன்று செவ்வாய்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்த விவாதத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், பொன்னானி எம்.பி. டாக்டர் ஏ.பி.அப்துஸ் ஸமது சமதானி பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:
எஸ்.ஐ.ஆர். ஜனநாயக சட்ட விதிகளுக்கு எதிரானது :
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக விவாதத்தில் பங்கேற்று பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் தற்போது மக்களை மிகவும் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கும் எஸ்.ஐ.ஆர். குறித்து எனது கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். எஸ்.ஐ.ஆர். என்பது நமது அரசியலமைப்பு ஜனநாயக சட்ட விதிகளுக்கு எதிரான ஒன்றாகும். வாக்குரிமையை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரத்தை பறிக்கும் ஒரு நிலையாகும். அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் குறித்து இந்த எஸ்.ஐ.ஆர். பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த விவாதத்தில் அனைத்து கேள்விகளையும் கேட்க ஒரு வழி பிறந்துள்ளது.
இந்த புதிய திட்டம் நமது ஜனநாயக நெறிமுறைகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் இந்த திட்டத்தின் அனுபவத்தை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள வாக்காளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
குடிரிமையை நிரூபிக்க வேண்டுமா ?
நான் ஒரு முக்கியமான அரசியலமைப்பு தொடர்பான ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய குடிரிமையை நிரூபிக்க வேண்டுமா என்பதாகும். இது என்னுடைய முக்கியமான கேள்வியாகும். அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். குறிப்பாக அவையில் உள்ள அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கப்பட்டால் ஜனநாயகம் முறையாக இயங்க முடியாது. எஸ்.ஐ.ஆர். முறையாக, நியாயமாக, சுதந்திரமாக நடைபெறவில்லை. எஸ்.ஐ.ஆர். பல குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒருநிலைமைய எஸ்.ஐ.ஆர். ஏற்படுத்தியுள்ளது. ஒரு மிகப்பெரிய திட்டத்தை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் முறையான கட்டமைப்புகள் இல்லாமல், அதிக பணிச்சுமையை திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏன் நீங்கள் அவசரமாக இந்த திட்டத்தை செய்து வருகிறீர்கள். மத்திய அரசைப் பார்த்த இந்த கேள்வியை நான் முன்வைக்கிறேன். நீங்கள் அவசரம் காட்டுகிறீர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்.
தேர்தல் நடைமுறைகளை முறைப்படுத்துவது சரியானதாக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களை இணைக்க வேண்டுமே தவிர பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது அரசிலமைப்புச் சட்டத்திற்கு முரணான ஒன்றாகும். தேர்தல் ஜனநாயகத்தில் அதிக வாக்காளர்கள் பங்கேற்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாகும். ஆனால், எஸ்.ஐ.ஆர். திட்டம், உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் வகையில் இருக்கிறது. இதுதான் எங்களுடைய குற்றச்சாட்டாகும்.
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் :
தேர்தல் நடைமுறைகள் என்பது சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு வாக்காளர்களை பட்டியலில் இணைப்பதாகும். தேர்தல் நடைமுறைகளை முறைப்படுத்துவது மட்டுமே ஜனநாயகம் ஆகாது. மாறாக, மக்களின் உரிமைகள் பாதுகாப்பதாகும். தற்போது எஸ்.ஐ.ஆர். மூலம் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு தொல்லைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், சரியான திட்டமிடல் இல்லாமல் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய ஒரு சூழ்நிலையை தேர்தல் ஆணையம் கட்டாயமாக உருவாக்கியுள்ளது. ஐ.எஸ்.ஆர். பணிகள் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பல்வேறு பணிச்சுமைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை படிவங்களில் இணைத்து அளிக்க வேண்டும். பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆணவங்களை அளிக்கப்பட வேண்டும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஆதார் அட்டை ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தையும் ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதன்மூலம், நாட்டு மக்களின் முக்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏன் ஏற்க மறுக்கிறது. இதற்கு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஏன் முக்கிய ஆவணங்களை ஏற்க மறுக்கிறீர்கள் என்பதை அரசு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முக்கிய ஆவணங்களை கேட்கிறது. அதை சமர்ப்பித்தால் ஏற்க மறுக்கிறது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆதார் அட்டையை ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க மறுக்கிறது.
மறைமுகமாக தேசிய குடிமக்கள் பதிவேடு முறை :
எஸ்.ஐ.ஆர். திட்டம் நடைமுறைப்படுத்தும் முறைகளை கவனிக்கும்போது, அதன்மூலம் மக்கள் மீண்டும் தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பின்புற வாசல்படி மூலம் மறைமுகமாக அமல்படுத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு முறையாகும். எஸ்.ஐ.ஆர். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு பின்புற வாசலை திறந்துவைத்துள்ளது. இது மிகவும் கம்பீரமான பிரச்சினையாகும். மேலும் எஸ்.ஐ.ஆர். நாட்டு மக்களின் குடியுரிமைக்காக நடத்தப்படும் ஒரு தேர்வாகும். இது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான பிரச்சினையை அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். மக்களின் குடியுரிமையை தீர்மானிக்கும் பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் மூலம் பல்வேறு அமைப்புகள் பாதிப்பு அடைந்துள்ளன. நீதித்துறை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாடகை அறைகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள், திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்ற பெண்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அத்துடன் சிறுபான்மையின மக்கள் என பல்வேறு தரப்பு மக்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஐ.எஸ்.ஆர். ஒரு தவறான நடவடிக்கை :
ஐ.எஸ்.ஆர். ஒரு தவறான நடவடிக்கையாகும். இதன்மூலம் நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் வடிக்கப்பட்டு பறிக்கப்படுகின்றன. இது ஒரு ஜனநாயக நெறிமுறை மீறலாகும். அரசியலமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ள அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் உள்ளது. அதிக அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. அரசியலமைப்பு சட்டம் 324, 326 படி, தான் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அடிக்கடி கூறி வருகிறது. அதற்கு நாட்டில் உள்ள மக்களின் குடியுரிமையை பறிக்க முடியாது. கனடா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாக்குரிமை என்பது கட்டாய கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் பிறகு, கூட, வரம்பு மீறி செயல்படுகிறது.
மீண்டும் வாக்குச்சீட்டு முறை தேவை :
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களின் வாக்களிக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டு மக்களே, ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்பதை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள் ஏழை மக்கள் ஆவார்கள். ஏழை மற்றும் நடுத்தரப்பிரிவை சேர்ந்த மக்கள் ஆவார்கள். மேற்கந்திய நாடுகளில் உள்ள மக்களின் வாக்குரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு சாதாரண ஆண், பெண் மற்றும் சாதாரண வாக்குச்சாவடி ஜனநாயகத்தை காக்கும் முறைகளாகும்
வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளை போன்று இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். அதன்மூலம் மட்டுமே ஜனநாயகம் உண்மையாக பாதுகாக்கப்படும். இறுதியாக ஒன்றை சொல்லி என்னுடைய உரையை முடிக்கிறேன். நாட்டில் உள்ள சாதாண ஆண், பெண் வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே மகாத்மா காந்தி விரும்பிய உண்மையான ஜனநாயகம் நாட்டில் நீடித்து இருக்கும்.அப்படி இருந்தால் மட்டுமே, சாதாரண மக்களின் குரல் ஜனநாயகத்தில் எதிரொலித்து, நாடு மிகவும் வலிமையான நாடாக விளங்கும்.
இவ்வாறு அப்துஸ் ஸமது சமதானி எம்.பி. பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment