மாநிலங்களவையை நடத்துவதில் நடுநிலையை கடைப்பிடித்து ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க வேண்டும்....!
புதிய அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப், எம்.பி. வலியுறுத்தல்....!!
டெல்லி, டி.04-ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பு அளித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையை நடத்துவதில் நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளான டிசம்பர் ஒன்றாம் தேதி மாநிலங்களவை தலைவராக குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டு அவையை நடத்தினார். அப்போது ஆளும் மற்றும் எதிர்க்க்டசியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி உரையாற்றினார்கள்.
அப்துல் வஹாப் பேச்சு :
அந்த வகையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., புதிய அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பேசினார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். அப்துல் வஹாப் எம்.பி.யின் உரையின் முழு விவரம் வருமாறு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் சார்பிலும் என்னுடைய தனிப்பட்ட முறையில் சார்பாகவும் அவைத் தலைவருக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் மிகச் சிறந்த அரசியல் பாராம்பரியத்தை வெளிப்படுத்தியவர். எங்களுடைய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நம்முடைய கேரள மாநில தலைவர் ஷிஹாப் அலி தங்ஙள் ஆகியோர் சார்பாகவும் எமது வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக மதிப்புகள் மற்றும் நாடாளுளுமன்ற நாகரிகத்தை பேண இ.யூ.முஸ்லிம் லீக் நீண்ட கால அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குடும்பம் :
உங்களுடைய பாட்டனார் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்தில் உறுதியுடன் இருந்து செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதன்பிறகு, அவர்களுடைய பேரன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார். உங்களுடைய பாட்டனார் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து மிகவும் தீவிரமாக செயல்பட்ட நிலையில், நீங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து தீவிர பணி ஆற்றி இருக்கிறீர்கள்.
நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காகவும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதற்காகவும் நான் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. வட இந்தியா, தென்னிந்தியா என நான் பிரித்து பார்க்கவில்லை. மாறாக நீங்கள் திருப்பூரைச் சேர்ந்தவர். திருப்பூர் ஒரு பன்முகத்தைன்மை கொண்டு நகரமாகும். நடுநிலை கொள்கையை கடைப்பிடிக்கும் நகரமாகும். எனவே நீங்களும் மிகவும் பன்முகத்தன்மையுடனும் நடுநிலைமையுடனும் செயல்படுவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சம வாய்ப்பு வழங்க வேண்டும் :
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கும் வகையில், இரண்டு தரப்பிற்கும் சரியான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் நீங்கள் செயல்பட வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இல்லாமல், மிகவும் சுதந்திரமாக நீங்கள் இயங்க வேண்டும். மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சம அளவில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அதிகாரம் பாரபட்சமற்ற நடைமுறைகளில் உள்ளது. புதிய மாநிலங்களவைத் தலைவர் அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். அவையை நடத்துவதில் நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நான் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். இன்றைய தினம் அவை அமைதியாக நடந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் அவை மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் என நான் நம்புகிறேன். அவையை சுமூகமாக நடத்துவதில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் இந்த நேரத்தில் நான் உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் அப்துல் வஹாப் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment