தமிழக வக்பு சொத்துகள் குறித்த தகவல்களை உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய அடுத்த ஆண்டு ஜுன் 6ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு...!
ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரங்கள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
புதுடெல்லி, டிச.19- நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகள் குறித்த தகவல்களை ஒன்றிய அரசின் உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய பல்வேறு மாநிலங்களுக்கு காலக்கெடு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விஷால் குமார் விஷ்வகர்மா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் முழு விவரம் வருமாறு:
காலக்கெடு நீட்டிப்பு :
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வக்பு தீர்ப்பாயங்கள் அறிவித்த முடிவை தொடர்ந்து, ஒன்றிய அரசின் உமீத் இணையதளத்தில் வக்பு சொத்துகள் குறித்து தகவல்களை பதிவு செய்ய பல்வேறு மாநிலங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எடுத்த முடிவின் படி பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் தேதி வரை உமீத் இணையதளம், வக்பு சொத்துகள் குறித்த தகவல்களை பதிவு செய்ய பயன்பாட்டில் இருக்கும்.
இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் 2026ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் தேதி வரை வக்பு சொத்துகள் குறித்த விவரங்களை உமீத் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டிற்கும் அவகாசம் அளிப்பு :
இதேபோன்று, தமிழ்நாட்டிலும் வக்பு சொத்துகள் குறித்த விவரங்களை உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2026ஆம் ஆண்டு ஜுன் 6ஆம் தேதி வரை ஒன்றிய அரசின் உமீத் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள வக்பு சொத்துகள் குறித்த தகவல்களையும், விவரங்களையும் பதிவு செய்யலாம்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி வரை வக்பு சொத்துகளை உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாக சிறுபான்மை விவகாரகங்கள் துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விஷால் குமார் விஷ்வகர்மா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
==============================


No comments:
Post a Comment