Tuesday, December 16, 2025

சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா - நூல் மதிப்புரை....!

 நூல் மதிப்புரை

நூல் : சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா

நூலாசிரியர் : செ.திவான், M.A.,M.Phil.

வெளியீடு : ரெகான் - ரய்யா பதிப்பம்

          106 F, 4A, திருவனந்தபுரம் சாலை,

         பாளையங்கோட்டை,

        திருநெல்வேலி - 627 002.

       போன்: 90803 30200 / 0462-2572665

விலை     : ரூ.400/-


புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் மற்றும் புத்தக சேகரிப்பாளர் ஜனாப் செ.திவான், M.A.,M.Phil. அவர்கள் இஸ்லாமிய வரலாறு, திராவிட அரசியல் மற்றும் விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து 150-க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வு நோக்கில் எழுதி புகழ்பெற்றவர். இவரது நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன. இதன்மூலம் வாழுங்காலத்திலேயே நாட்டுடமைக்கப்பட்ட நூல்களின் ஆசிரியர் என்ற பெருமையை செ.திவான் பெற்றுள்ளார். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொணர்ந்ததில் இவர் குறிப்பிடத்தக்கவர் என மதிக்கப்படுகிறார். 

அந்த வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திழந்த சிராஜ் உத் தௌலா அவர்கள் குறித்து "பிரிஷ்டிஷாரின் சிம்ம சொப்பனம் சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா" என்ற தனது 185வது நூலை, முதன்முதலில் தமிழில் நூல் வடிவில் கொண்டுவந்துள்ளார்.  'சூழ்ச்சியால் வென்று சிறைபிடிக்கப்பட்ட மாவீரன் உள்ளம்' என்ற தலைப்புடன் தொடங்கி, 'சுதந்திர முழக்கம்' என்ற தலைப்புடன் மொத்தம் 20 தலைப்புகளில், 360 பக்கங்களில் அருமையான வரலாற்று தகவல்களை நூலாசிரியர் செ.திவான் அவர்கள் அனைவரின் உள்ளம் கவரும் வகையில் எளிய தமிழில் வாசகர்களுக்கு தந்துள்ளார். 

இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் வேண்டும் என்றே மறைக்கப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் செய்த பங்களிப்புகளை, தியாகங்களை சமுதாயம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நூலின் 90வது பக்கத்தில் சிராஜ் - உத் - தௌலாவின் வாழ்க்கை குறிப்புகள் மிகச் சுருக்கமாக எழுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக  அவர் எந்தளவுக்கு மன உறுதியுடன் போராடிக் கொண்டிருந்தார் போன்ற தகவல்களை படிக்கும்போது உண்மையில் சிராஜ் உத் தௌலா பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. 

நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவலும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்பதை நூலாசிரியர் பல்வேறு வரலாற்று மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டி இருப்பது நூலுக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது. மிகவும் கடின உழைப்புடன் எழுதப்பட்டுள்ள இந்த "பிரிஷ்டிஷாரின் சிம்ம சொப்பனம் சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா" என்ற நூலை சமுதாயம் வரவேற்று படித்து உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, முஸ்லிம்களின் தியாகங்கள் இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும். 

அருமையான வரலாற்று பொக்கிஷமான "பிரிஷ்டிஷாரின் சிம்ம சொப்பனம் சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா" என்ற இந்த நூல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் மதரஸா நூலகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவச் சமுதாயம் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு முஸ்லிம் இல்லங்களிலும் இந்த நூல் இடம்பெற்று வாசிக்கப்பட்டால், முஸ்லிம்கள் குறித்து பொய்யாக பரப்பட்டு வரும் பிரச்சாரங்கள், வதந்திகள் ஆகியவை அனைத்தும் பொய்யானவை என்பதை இளம் தளிர்கள் அறிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் "பிரிஷ்டிஷாரின் சிம்ம சொப்பனம் சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தௌலா" என்ற நூல் இடம்பெறுவது மட்டுமல்லாமல், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர், தங்களுக்கு அன்பானவர்களுக்கு இந்த நூலை பரிசாக அளிக்க ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்கள் குறித்த வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நாலா பக்கமும் பரவ வாய்ப்பு உருவாகும்.  

- ஜாவீத்

No comments: