மக்களவையில் நடந்த விக்சித் பாரத் கிராம்ஜி மசோதா மீதான விவாதம்....!
இராமநாதபுரம் தொகுதி உறுப்பினர் கே.நவாஸ்கனி பங்கேற்று உரை.....!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்க ஒன்றிய அரசு முயற்சி..!
ஏழை, எளிய மக்களின் வயிற்றோடு விளையாட மசோதா அறிமுகம் என சரமாரி குற்றச்சாட்டு..!
புதுடெல்லி, டிச.18- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, விக்சித் பாரத் கிராம்ஜி மசோதாவை ஒன்றிய அரசு அறிமுகம் செய்து இருப்பதன் மூலம் அந்த திட்டத்தை ஒழிக்க முயற்சி செய்வதாக இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.நவாஸ் கனி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், ஏழை, எளிய மக்களின் வயிற்றோடு விளையாட ஒன்றிய அரசு மசோதாவை அறிமுகம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். கே.நவாஸ் கனி எம்.பி. ஆற்றிய முழு உரையின் விவரம் வருமாறு:
திட்டத்தை முழுமையாக ஒழிக்க முயற்சி :
நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் ‘விக்சித் பாரத் கிராம்ஜி’ - மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பு அளித்தமைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நாட்டினுடைய ஏழைகள், விவசாயிகள், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கான திட்டமாகும். அவர்களுடைய வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கக் கூடிய திட்டமாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டம். இந்த மசோதாவை நாட்டினுடைய கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சமூக பாதுகாப்பில் முக்கிய அங்கமான உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக ஒழிக்கக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.
ஏழை மக்களின் வயிற்றோடு விளையாடும் ஒன்றிய அரசு :
கிராமப்புறத்தில் இருக்கக் கூடிய ஏழைக் குடும்பங்களில் அடுப்பு எரிகிறது என்று சொன்னால், ஏழை மக்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு இந்த திட்டம் தான் முக்கிய காரணமாக உள்ளது. தற்போது அரசு அறிமுகம் செய்துள்ள இந்த மசோதா ஏழை, எளிய மக்களின் வயிற்றோடு விளையாடுகிறது. ஏழை முதிய ஒருவரின் கை ரோகை, இயந்திரத்தில் பதியவில்லை என்று சொன்னால் அவருக்கு சம்பளம் இல்லை. அந்த நாள் அந்த குடும்பத்திற்கு வருமானம் இல்லை. இது வளர்ச்சியா? டெல்லியின் வளர்ச்சி கிராமங்களுடைய வளர்ச்சியாக இல்லாமல், கிராமங்களுடைய வீழ்ச்சியாக உள்ளது. ஒரே கையெழுத்தில் ஒன்றிய அரசு நிதியை நிறுத்தலாம். அதாவது ஒரே கையெழுத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் அடுப்புகளை அணைக்கலாம்.
மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு :
இந்த மசோதா ஒன்றிய அரசின் அதிகாரங்களின் குவிப்பையும், மாநில அரசுகளின் நிதிச் சுமையை, நாட்டின் அடையாள அழிப்பை மட்டுமே, நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை நூறு நாள் வேலைத்திட்டத்தில் 90 சதவீத பங்களிப்பை ஒன்றிய அரசும், 10 சதவீத நிதியை மாநில அரசும் பங்களிப்பாக அளித்து வந்தன. ஆனால் இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும், கொடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கான நிதியை முறையாக விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்க்கு மட்டும் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி விடுவிக்கப்படாமல் இருக்கிறது. கல்விக்கான நிதி நிலுவை, ஜிஎஸ்டி நிதி நிலுவை என்று மாநிலத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவையில் இருக்கும்போது, இந்த திட்டத்திலும் 10 சதவீதம் நிதியில் இருந்து 40 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தி இருப்பது எந்தளவு நியாயமானது?
வேலைகளை ஒன்றிய அரசு ஒதுக்க முடிவு :
இதுவரை மாநில அரசுகள் ஒதுக்கி வந்த வேலைகளை, இனி ஒன்றிய அரசு மட்டுமே ஒதுக்க முடியும் என திருத்தம் செய்து இருக்கிறீர்கள். அந்தந்த மாநிலங்களில் என்ன வேலை தேவை இருக்கிறது என்று ஒன்றிய அரசுக்கு எப்படி தெரியும். இந்த திட்டத்த்ன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவான வேலைகளை ஒதுக்கி, பாஜக ஆளும் மாநிலங்களில், அதிகமான வேலைகளை ஒதுக்கி, ஆட்சியை தொடர்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். இதில் வெளிப்படைத்தன்மை இருக்குமா என கேட்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பல உறுப்பினர்கள் இந்த அவையில் மகாந்தமா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகளை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும், ஊதியத்தை இன்றைக்கு இருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதைப்பற்றியெல்லாம் இந்த மசோதாவில் எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. ஊதியம் உயர்த்தப்படவில்லை.
மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டம் கொலை :
மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்த தத்துவத்தை கொண்டவர்கள், இன்றைக்கு காந்தியின் பெயரை பறித்துக் கொண்டீர்கள். காந்தியை கொன்றவர்கள், இன்றையக்கு அவரது பெயரில் உள்ள திட்டத்தை கொன்று இருக்கிறீர்கள். தங்களுக்கு என்று எந்த வரலாறும் இல்லாத, எந்த அடையாளமும் இல்லாதவர்கள், நாட்டின் வரலாற்றை, அடையாளங்களை அழிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். முதலில் நாட்டில் உள்ள சாலைகளின் பெயர்களை மாற்றினீர்கள். மாவட்டங்களின் பெயர்களை மாற்றினீர்கள். வணிகங்களின் பெயர்களை மாற்றினீர்கள். தற்போது தேசப்பிதாவின் பெயரை இந்த திட்டத்தின் மூலம் மாற்றுகிறீர்கள். இது காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பது தான் பிரச்சினையா. அல்லது மகாத்மா காந்தி தேசப்பிதாவின் பெயர் இதில் இடம்பெற்று இருப்பது உங்களுக்கு பிரச்சினையா.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இயக்கம் :
சுதந்திர போராட்டத்தில் துளியும் பங்கேற்காத உங்களால் இதுபோன்ற வேலைகளை மட்டும் தான் செய்ய முடியும். இந்த அவையில் நாங்கள் மூன்று உறுப்பினர்கள் தான் உள்ளோம். ஆனால் எங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களாக கட்டமைக்கப்பட்ட இயக்கம். இந்திய அரசிலமைப்பு சட்டம் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் அங்கம் வகித்த தலைவர்களாக உருவாக்கப்பட்ட இயக்கம். நாங்கள் இந்த நாட்டை உண்மையாக நேசித்து அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டுஇருக்கிறோம்.
இவ்வாறு நவாஸ் கனி எம்.பி. பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment