முகமது அக்லாக் படுகொலை வழக்கில் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற உத்தரப் பிரதேச பாஜக அரசு மனு,,,,!
தள்ளுபடி செய்து விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!!
லக்னோ, டிச.24- பசுவதை செய்ததாகக் கூறி முகமது அக்லாக் என்ற முஸ்லிம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரப் பிரதேச அரசின் முயற்சிக்கு பின்னடைய ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், சூரஜ்பூரில் உள்ள விரைவு நீதிமன்றம் மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை செவ்வாயன்று (23.12.2025) பிறப்பித்த கூடுதல் மாவட்ட நீதிபதி சௌரப் திவேதி, வழக்கில் முக்கியமான ஆதாரங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, கௌதம் புத்த நகர் காவல் ஆணையர் மற்றும் கிரேட்டர் நொய்டாவின் துணை ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை 'மிகவும் முக்கியமானது' என வகைப்படுத்தி, தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அரசுத் தரப்பு விரைவில் ஆதாரங்களைப் பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு அடுத்த விசாரணைக்காக ஜனவரி 6, 2026 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.
முகமது அக்லாக் படுகொலை :
கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரியின் பிசாடா கிராமத்தில், பசுவதைச் செய்ததாக வதந்திகள் பரவின. செப்டம்பர் 18, 2015 அன்று, தாத்ரியில் உள்ள பிசாடா கிராமத்தில் உள்ளூர் கோயிலில் இருந்து, முகமது அக்லாக் ஒரு பசுவைக் கொன்று அதன் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு வெளியே கூடியது. உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் மகன் விஷால் ராணா மற்றும் அவரது உறவினர் சிவம் ஆகியோர் தலைமையிலான அந்தக் கும்பல், முகமது அக்லாக் மற்றும் அவரது மகன் டேனிஷ் ஆகியோரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து, அவர்கள் மயக்கமடையும் வரை தாக்கியது.
பின்னர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகமது அக்லாக் உயிரிழந்த நிலையில், டேனிஷ் தலையில் பலத்த காயங்களுடன் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
வழக்குப்பதிவு :
இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 147 (கலவரம்), 148 (கொடிய ஆயுதங்களுடன் கலவரம்), 149 (சட்டவிரோதமாகக் கூடுதல்), 323 (தாக்குதல்), 504 (அமைதியைக் குலைக்கும் நோக்குடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜார்ச்சா காவல் நிலையத்தில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட 15 பேர் மீது காவல்துறை டிசம்பர் 23, 2015 அன்று சூரஜ்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் இறுதி தடயவியல் அறிக்கை கிடைக்காததால், அதில் மாட்டிறைச்சி பற்றி குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், நாடு தழுவிய அளவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டபோதிலும், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் செப்டம்பர் 2017-க்குள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது பிணையில் உள்ளனர்.
உத்தரப் பிரதேச பாஜக அரசு மனு :
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவதில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் முரண்பட்ட வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த துப்பாக்கியோ அல்லது கூர்மையான ஆயுதமோ கைப்பற்றப்படாதது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே எந்த முன்விரோதமும் அல்லது பகைமையும் இல்லாதது ஆகிய காரணங்களைக் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறக் கோரி உத்தரப் பிரதேச பாஜக அரசு அக்டோபர் 15 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், சூரஜ்பூர் விரைவு நீதிமன்றம் மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு :
மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த சூரஜ்பூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் குற்றவாளிகளை பாதுகாக்க பாஜக அரசு எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்து இருப்பதாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அனில் யாதவ் குறிப்பிட்டுள்ளார். மத ரீதியாக மக்களை பிரித்து அரசியல் லாபம் அடைய பாஜக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்றும் இதுபோன்ற செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டம் என்றும் அனில் யாதவ் கூறியுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=========================




No comments:
Post a Comment