Friday, December 26, 2025

சீக்கியப் பெண்மணியின் அழகிய செயல்...!

" பஞ்சாப் கிராமத்தில் மஸ்ஜித் கட்டுவதற்காக  நிலத்தை தானம் வழங்கிய சீக்கியப் பெண் "

- மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் சம்பவம் -

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் மதசார்பின்மையை சீர்குலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதை, கடந்த 11 ஆண்டுகளாக நாடு கண்டுக்கொண்டு இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமான சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் ஆரம்பித்து இருக்கின்றன. பாசிச கும்பல் நடத்தும் இத்தகைய வன்முறைகளை, உண்மையான இந்து மக்கள் வெறுப்பதுடன், கண்டிக்கவும் செய்கிறார்கள்.  

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்றாலும், தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் மத நல்லிணக்கம் நன்கு தழைத்து நின்றுக் கொண்டு இருக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழகத்தில் மத ஒற்றுமையை சீர்குலைக்க பாசிச சக்திகளால் இயலவில்லை. அனைத்து சமுதாய மக்களும் மிகவும் தெளிவான மனநிலையில் இருப்பதால், தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அழகான நிலை தொடர்ந்து, மக்கள் அண்ணன், தம்பிகளாக, மாமான் மச்சானாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். உறவுகளை வளர்த்துக் கொண்டு, அமைதியாக தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறார்கள். 

தமிழகத்தைப் போன்று பஞ்சாப் மாநிலமும் மத நல்லிணக்கம் கொண்ட ஒரு அழகிய மாநிலமாக இருப்பதை நாடு தொடர்ந்து கண்டு வருகிறது. அதற்கு பல சம்பவங்கள் கூறலாம். அண்மையில் நடந்த ஒரு அழகிய சம்பவம் சீக்கிய மக்கள் எந்தளவுக்கு நாட்டில் ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

மஸ்ஜித் இல்லாத கிராமம் :

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாபின் ஃபதேகட் சாஹிப் மாவட்டத்தில் இருக்கும் ஜக்வாலி கிராமத்தில் சுமார் 400 முதல் 500 சீக்கியக் குடும்பங்கள், ஏறத்தாழ 150 இந்து குடும்பங்கள் மற்றும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. அங்கு ஏற்கனவே ஒரு குருத்வாராவும் ஒரு சிவன் கோயிலும் உள்ளன. மஸ்ஜித் இல்லாததால், முஸ்லிம் மக்கள் தினசரி தொழுகைக்காக அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் மத நல்லிணக்கத்திற்கு ஒரு அரிய உதாரணம் வெளிப்பட்டுள்ளது. 75 வயது சீக்கியப் பெண் ஒருவர் மஸ்ஜித் கட்டுவதற்காக நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அதேநேரத்தில் சீக்கிய மற்றும் இந்து குடும்பங்கள் நிதி உதவியுடன் முன்வந்துள்ளன.

பீபி ராஜேந்தர் கவுர் என்ற 75 வயது சீக்கியப் பெண்மணி, தங்கள் கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழுகை மேற்கொள்ள பக்கத்து கிராமத்திற்குச் சென்று வருவதை கண்டு வேதனை அடைந்தார். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அவர் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டே இருந்தார். அந்த சிந்தனை அவருக்கு ஒரு அழகிய செயலை செய்ய தூண்டியது. இதன் காரணமாக மஸ்ஜித் கட்டுவதற்காக தனது நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து அதை உடனே செயல்படுத்தினார். 

பீபி ராஜேந்தர் கவுரின் அழகிய செயல் :

கிராமத்தில் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் இல்லாததால், அவர்கள் தொழுகைக்காக அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே சுமார் ஆயிரத்து 360 சதுர அடி பரப்பளவுள்ள ஐந்து மார்லா நிலத்தை பீபி ராஜேந்தர் கவுர்  தானமாக வழங்கினார். அவரது குடும்பத்தினர் இது குறித்து விவாதித்து, ஏற்கனவே உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டனர். முஸ்லிம் சமூகம் அந்த இடத்திற்கு ஒப்புதல் அளித்தது. அந்த நிலம் இப்போது மஸ்ஜித் கமிட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பாட்டியின் அழகிய செயல் குறித்து கருத்து கூறியுள்ள பீபி ராஜேந்தர் கவுரின்  பேரன் சத்னம் சிங், "ஜக்வாலியில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த குடும்பங்களும் தலைமுறை தலைமுறையாக பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றன. மக்கள் ஒருவருக்கொருவர் மத நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். தேவைப்படும்போதெல்லாம் நிதி மற்றும் உழைப்பு மூலம் பங்களிக்கிறார்கள்" என்று கூறி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதேபோன்று,  கிராம பஞ்சாயத்து உறுப்பினரான அவரது சகோதரர் மோனு சிங், 'மதப் பயன்பாட்டிற்காக அரசு நிலம் கிடைக்காததால், குடும்பத்தினர் தங்களின் சொந்த நிலத்தை தானமாக வழங்கினர்' என்று பெருமை அடைகிறார்.

மஸ்ஜித் கட்ட கிராம மக்கள் நிதியுதவி :

மேலும் கிராம மக்கள் அனைவரும் மஸ்ஜித் கட்டுமானத்திற்காக பணம் வழங்கியுள்ளனர். 'முஸ்லிம்களும் சீக்கியர்களும் கோயில் கட்டுவதற்கு ஆதரவளித்தனர். மேலும் அனைத்து சமூகத்தினரும் குருத்வாராவிற்கு ஆதரவளித்தனர். அதே உணர்வுதான் மஸ்ஜித் திட்டத்திற்கும் வழிகாட்டுகிறது என்று முன்னாள் சர்பஞ்ச் அஜைப் சிங்  கூறினார்.

இதேபோன்று, "ஜக்வாலியின் ஒற்றுமையே கிராமத்திற்கு அதன் அடையாளத்தை அளிக்கிறது"  என்று  பிராமண சமூகத்தைச் சேர்ந்த குர்சேவக் குமார் கூறியுள்ளார். மஸ்ஜித் கமிட்டி தலைவர் காலா கான், கூட்டு ஆதரவிற்காக கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது  என்று காலா கான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் ஷாஹி இமாம் மௌலானா உஸ்மான் லூதியானவி அடிக்கல் நாட்டிப் பேசுகையில், மரியாதை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பில் வேரூன்றிய மத நல்லிணக்கத்திற்கு பஞ்சாப் தொடர்ந்து வாழும் உதாரணங்களை வழங்கி வருகிறது என்றார்.

உண்மை தான். அதை தான் இந்த அழகிய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. தனது முதிய வயதிலும் மத நல்லிணத்துடன் வாழ வேண்டும் என விரும்பி, முஸ்லிம்கள் தொழுகை நடத்த மஸ்ஜித் கட்ட வேண்டும் என விரும்பி  தனது நிலத்தை தானமாக வழங்கிய சீக்கியப் பெண்மணி பீபி ராஜேந்தர் கவுரின் அழகிய செயலை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற மத நல்லிணக்கச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்க வேண்டும். அன்பால் வெறுப்பு வெல்லப்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===================


No comments: