Monday, December 1, 2025

காஸா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பயணம்....!

"அழிவிலிருந்து உறுதியை நோக்கி: காஸா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பயணம்"

காஸாவின் கல்வி உள்கட்டமைப்பை அழித்த இஸ்ரேல் இனப்படுகொலைப் போரால் ஏற்பட்ட இரண்டு ஆண்டுகால கட்டாய மூடலுக்குப் பிறகு, காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகம் படிப்படியாக மீண்டும் நேரடி கற்றலுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

காஸாவில் பகுதியளவு பழுதுபார்க்கப்பட்ட, போரால் சேதமடைந்த பல்கலைக்கழகச் சுவர்களுக்கு மத்தியில், மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் மீண்டும் மகிழ்ச்சியுடன் நுழைந்துள்ளனர். அழிவு இருந்தபோதிலும் வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் கல்வியைத் தொடரவும் விரும்பும் காஸா மாணவ மாணவியர்களின்  உறுதியைக் குறிக்கும் ஒரு காட்சி இது என்றே கூறலாம். 

இடப்பெயர்ச்சி, மின் தடை மற்றும் அழிக்கப்பட்ட வசதிகள் போன்ற நிலைமைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட ஆன்லைன் கற்பித்தல் மட்டுமே சாத்தியமான இரண்டு ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத் திறப்பு நடந்தது.

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முற்றிலும் அழிவு :

காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள், காஸாவில் உள்ள 165 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முற்றிலுமாக அழித்துவிட்டன. 392 கல்வி மையங்களை சேதப்படுத்தி, இந்தத் துறையை திறம்பட முடக்கியுள்ளன. இஸ்லாமிய பல்கலைக்கழக கட்டடங்களின் சில பகுதிகள் இன்னும் நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த காஸா குடும்பங்களுக்கு தங்குமிடம் அளிக்கின்றன. இதனால் பல்கலைக்கழக அதிகாரிகள் அவசர வீட்டுத் தீர்வுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய காஸாவிற்கு சுமார் மூன்று லட்சம் கூடாரங்கள் மற்றும் முன் தயாரிக்கப்பட்ட வீட்டு அலகுகள் தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத் தலைவர் அசாத் யூசுப் அசாத், இஸ்லாமிய பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பதை "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என்று விவரித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் "வாழ்க்கையையும் கல்வியையும் விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டார். பல மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நேரில் வகுப்புகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான ஒரு கட்ட திட்டத்துடன் மாணவர்கள் திரும்பி வந்து இருப்பது கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் கற்றல் மூலம் கிடைக்கும் புதிய வாழ்க்கை குறித்த சிந்தனைகளை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது. 

புதிய மாணவர்கள் வருகை :

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய இனப்படுகொலை காரணமாக காஸா முழுவதும் பரவலான அழிவு இருந்தபோதிலும், போரின் போது ஆன்லைன் கற்றல் மூலம் சுமார் நான்கு ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகம் பட்டம் பெற முடிந்தது. இப்போது, ​​அக்டோபர் 2023 க்குப் பிறகு முதல் முறையாக, புதிய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். கல்வி கற்ற திரும்பி வருவதில் மாணவர்கள்  மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மருத்துவ மாணவர் மலாக் மொகாயத் கூறினார்: "போருக்குப் பிறகு இன்று (29.11.2025) வகுப்பிற்கு திரும்பும் முதல் நாள். நெரிசல் மற்றும் சேதம் இருந்தபோதிலும், கல்வி தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." "தாக்குதல்கள் இருந்தபோதிலும், நாங்கள் வகுப்புகளுக்குச் செல்கிறோம். இடிபாடுகளில் இருந்து எழுந்த பல்கலைக்கழகத்தைப் பற்றி பெருமைப்படுகிறோம்." என்று மற்றொரு மாணவர் சாமா ராசி கூறினார்.

இப்படி காஸா முழுவதும் மாணவர்கள் தங்களுடைய கல்வியை கற்க ஆவலுடன் இருப்பதை காண முடிகிறது. இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது, கல்வியை அடிப்படையாக கொண்ட ஒரு அழகிய முறை என்பதால், பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் கூட, காஸா மாணவர்கள், கல்வியின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். இதன் காரணமாக தான், காஸா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மீண்டும் திறந்தபோது, மாணவர்கள் மட்டுமல்லாமல், மாணவிகளும், ஆர்வத்துடன் பல்கலைக்கழகத்திற்குள் ஆர்வத்துடன் நுழைந்தனர். 

வாழ்க்கையையும் கல்வியையும் விரும்பும் மாணவர்கள் :

கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய கல்வி தடைப்பட்ட போதும், காஸா மாணவர்கள், ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து இஸ்லாமிய வாழ்க்கையை வாழும் அவர்கள், வாழ்க்கையை மட்டும் விரும்பவில்லை. கல்வியையும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக தான், போர் நடைபெற்ற போதிலும் ஆன்லைன் மூலம் அவர்கள் கல்வியை தேடினார்கள். நல்ல பயனுள்ள கல்வியை கற்றார்கள். 

இஸ்லாம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவதை நன்கு உணர்ந்து இருக்கும் காஸா மக்கள், தங்களுடைய பிள்ளைகள் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது என்ற உறுதியுடன் இருந்து வருவதால், போர் காலத்தில் தடைப்பட்ட கல்வியை மீண்டும் பெற வேண்டும் என விரும்பி, அதற்கான வழிகளை தேடுகிறார்கள். தற்போது காஸா இஸ்லாமிய பல்லைக்கழகம் திறந்து, கல்வி தேடலுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இது காஸா மாணவ மாணவியர்களின் கல்வி தாகத்திற்கு ஒரு நல்ல வழியை நிச்சயம் ஏற்படுத்தும். உலக அளவில் காஸா மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பது அவர்களின் கல்வி ஆர்வம் மூலம் உறுதியாக தெரிய வருகிறது. 

காஸாவின் மறுகட்டமைப்பு :

அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம், அக்டோபர் 8, 2023 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில், மீண்டும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என  70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன்  ஒரு லட்சத்து எழுபது ஆயிரம்  பேர் காயமடைந்தனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள். 

தற்போது போர் முடிவுக்கு வந்தபோதிலும் காஸா மக்களின் துயரங்கள் இன்னும் முழுமையாக தீரவில்லை.  காஸாவின் மறுகட்டமைப்பு செலவு சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது. ஏக இறைவன் விரும்பினால், 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கூட காஸா மக்களுக்கு நிச்சயம் கிடைத்துவிடும். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை காஸா மக்களின் உறுதிப்பாட்டின் மூலம் இதனை இஸ்லாமியர்கள் உணர்ந்துகொள்ளலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: